Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? செங்கோட்டையன் ஓபனாக சொன்ன விஷயம்..

Sengottaiyan Meet With TTV Dinakaran: முன்னாள அமைச்சர் செங்கோட்டையன் டிடிவி தினகரனை சந்தித்து பேசியதாக செய்திகள் வெளியானது. இதனை தொடர்ந்து செங்கோட்டையன், சென்னைக்கு வேறு விஷயமாக வந்ததாகவும், டிடிவி தினகரனை சந்தித்து பேசினேன் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை சந்தித்தது உண்மையா? செங்கோட்டையன் ஓபனாக சொன்ன விஷயம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 25 Sep 2025 06:53 AM IST

சென்னை, செப்டம்பர் 25, 2025: டிடிவி தினகரனை சந்திக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அடையாறு இல்லத்தில் டிடிவி தினகரனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்ததாக வந்த தகவல் பொய்யானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக உட்கட்சி விவகாரங்கள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றன. முக்கியமாக அதிமுகவைப் பொருத்தவரையில் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்து வருகின்றனர்.

அதிமுக உட்கட்சி விவகாரம்:

அந்த வகையில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். ஆனால் உட்கட்சி விவகாரத்தை பொதுவெளியில் கூறியதற்காக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர் அவர் கட்சியில் வகித்த பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நீக்கப்பட்டார்.

மேலும் படிக்க: டிடிவி தினகரனுடன் செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. ஒரு மணி நேரம் ஆலோசனை.. அதிமுகவில் பரபரப்பு!

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பேசி வந்தார். அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் உள்துறை அமைச்சரைச் சந்தித்து பேசினார். இதற்கிடையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக விலகுவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதேபோல், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

டிடிவி தினகரனை சந்தித்த செங்கோட்டையன்?

இத்தகைய சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். இந்தச் சூழலில் செங்கோட்டையன், அடையாறில் இருக்கும் டிடிவி தினகரனின் இல்லத்தில் அவரைச் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து இருவரும் கலந்து ஆலோசித்ததாகவும் செய்திகள் வெளியானது.

மேலும் படிக்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருப்பம்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

சென்னை வந்த காரணம் என்ன? செங்கோட்டையன் சொன்ன விளக்கம்:

இச்சூழலில் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “என் மனைவி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரைப் பார்க்க மட்டுமே சென்னைக்கு வந்துள்ளேன். மற்றபடி யாரையும் நான் சந்திக்கவில்லை. அனைவரும் ஒருங்கிணைந்து அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

எல்லாம் நல்லதே நடக்கும் என்றே நம்புகிறேன். டிடிவி தினகரனை நான் சந்தித்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது. கட்சியை ஒருங்கிணைக்க நான் முயற்சி செய்கிறேன். நல்லது நடந்தால் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைவார்கள், மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள்,” என பேசியுள்ளார்.