அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.. என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?

கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். அதன்பின், அண்ணாமலை நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திடமும், டிடிவி தினகரனிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இப்படியான சூழலில் அவர் டெல்லி சென்றுள்ளார்.

அமித்ஷாவை சந்தித்த அண்ணாமலை.. என்டிஏ கூட்டணியில் மீண்டும் ஓபிஎஸ், டிடிவி?

கோப்பு புகைப்படம்

Updated On: 

10 Dec 2025 12:30 PM

 IST

தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் கொண்டுவர தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தீவிர முயற்சி செய்து வருகிறார். தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் பணியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளன. அந்தவகையில், இந்த தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என நான்கு முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நாதக வழக்கம்போல் தனித்து தேர்தலில் களம் காண உள்ளதாக அறிவித்துவிட்டது. ஆனால், மற்ற மூன்று கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடே தேர்தல் களத்தை சூடுபிடிக்க வைக்க உள்ளன. விஜய் அரசியல் வருகையால் தேர்தல் களம் இம்முறை பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அளவு இருக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தற்போது ஆட்சியில் பங்கு வேண்டும் என்று வலியுறுத்துவதால், தமிழகத்தில் பெரும் கட்சியாக உள்ள திமுக, அதிமுகவுக்கு இது கட்டாயம் பெரும் சிக்கலாக அமையும் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க: தவெக தலைவர் விஜய்யின் செயல்பாடுகளில் திடீர் மாற்றம்…என்ன காரணம்!

ஆட்சியில் பங்கு கேட்கும் கட்சிகள்:

அனைத்து கட்சிகளும் இப்படி ஆட்சியில் பங்கு கேட்பதற்கு முக்கிய காரணம் விஜய் தான். தனது முதல் மாநாட்டிலேயே தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் அதிகாரம் வழங்கப்படும் என பொதுவெளியில் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது முதல் அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கையை முன்வைக்க தொடங்கிவிட்டன. இதன் மூலம் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே இத்தேர்தலில் பிளவு ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம், விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க பல்வேறு முக்கிய கட்சிகளும் போட்டிபோட்டு வருகின்றன. இப்படி, தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே களம் பரபரப்பாக காணப்படுகிறது.

கூட்டணியை பலப்படுத்தும் பாஜக:

இந்நிலையில், தேர்தலையொட்டி கூட்டணியை வலுப்படுத்துவதற்காக பாஜக, தற்போது பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வத்தையும், டிடிவி தினகரனையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.

ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இருந்து திரும்பிய அடுத்த நாளே பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, அமித்ஷாவை சந்தித்தார். இதையடுத்து கடந்த 7ஆம் தேதி கோவையில் நடந்த விழாவில் பங்கேற்ற அண்ணாமலையும், ஓ.பன்னீர்செல்வமும் சந்தித்து தனியே பேச்சு நடத்தினர். அதைத்தொடர்ந்து, கோவை வந்த டிடிவி தினகரனுக்கு அண்ணாமலை வீட்டில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் டிடிவியை தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைப்பது பற்றி முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அண்ணாமலை டெல்லி பயணம்:

இப்படி, அடுத்தடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரனையும் சந்தித்து பேசிய அண்ணாமலை நேற்று முன்தினம் இரவே கோவையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். டெல்லியில் பாஜக நடத்தும் SIR தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி செல்வதாக தெரிவித்த அண்ணாமலை, டெல்லியில் அமித் ஷாவை நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரனை ஆகியோரிடம் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து அமித் ஷாவிடம் அண்ணாமலை தெரிவித்தார்.

மேலும் படிக்க: அன்புமணிக்கும் பாமகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.. ராமதாஸ் தான் பாமக – எம்.எல்.ஏ அருள் திட்டவட்டம்..

கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்:

தொடர்ந்து, இருவரையும் மீண்டும் கூட்டணியில் இணைக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்நிலையில், அண்ணாமலையில் தலைமையில் நடந்து வரும் இந்த பேச்சுவார்த்தை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சிக்கலில் இண்டிகோ விமான சேவை.. எனினும் டிக்கெட் விற்பனையாவது எப்படி?
திருமணமான அடுத்த 4வது நாளில் படப்பிடிப்பில் சமந்தா
5 வயது சிறுவனை தாக்க முயற்சித்த சிறுத்தை.. சாதுரியமாக செயல்பட்டதால் தப்பிய சம்பவம்..
அதிகரித்து வரும் தங்க குத்தகை.. என்ன காரணம்?