Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!!

All party meet: கரூர் கூட்டநெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் அரசியல் கூட்டங்கள், ரோடு ஷோ மேற்கொள்வதற்கான விதிகளை வகுக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

அரசியல் பொதுக்கூட்ட விதிமுறை: நவ.6ல் அனைத்துக் கட்சி கூட்டம்!!
கோப்புப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 03 Nov 2025 14:10 PM IST

சென்னை, நவம்பர் 03: அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான விதிமுறைகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க, நவ.6-ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. ஏற்கெனவே, வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த (Special Intensive Revision) பணிகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழகத்தில் நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், 60 கட்சிகளுக்கு திமுக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அதிமுக, தவெக, நாதக, அமமுக உள்ளிட்ட 20 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் 3ஆம் தேதி மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Also read: கல்லூரி மாணவிக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. தமிழகத்தையே உலுக்கும் திடுக் சம்பவம்!!

கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதேபோல், விஜய் தரப்பில் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டது. குறுகலான இடத்தில் அதிகளவிலான மக்கள் ஒரேநேரத்தில் கூட்டமாக கூடியதே இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என்று கூறப்பட்டது. அதோடு, அரசு, காவல்துறை அலட்சியமே உயிரிழப்புகளுக்கு காரணம் என்று ஒரு தரப்பும், விஜய் பரப்புரைக்கு தாமதமாக வந்தது தான் காரணம் என்று மற்றொரு தரப்பும் சமூக வலைதளங்களில் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொண்டன.

இந்நிலையில், வரும் காலங்களில் இதுபோன்ற துயரச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கு, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பரப்புரைகள் நடத்துவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தங்கள் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Also read: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..

இதற்காக, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மூத்த அமைச்சர்கள் தலைமையில் நவ.6ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக கரூரில் சிபிஐ விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் விதமாக, அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.