கொங்குவின் முக்கிய முகம்… ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்

AIADMK Former Minister Sengottaiyan : அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி மற்றும் செங்கோட்டையன் இடையே மோதல் நிலவி வருகிறது. தற்போது கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது கொங்கு மண்டலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு 7 மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக உட்கட்சி மோதல் வெடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொங்குவின் முக்கிய முகம்... ரூட்டை மாற்றுவாரா செங்கோட்டையன்? 2026 தேர்தலில் அதிமுகவுக்கு சிக்கல்

செங்கோட்டையன்

Updated On: 

06 Sep 2025 13:38 PM

 IST

சென்னை, செப்டம்பர் 06 : அதிமுகவில் (AIADMK) உட்கட்சி பிரச்னை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, உட்கட்சி மோதல் ஓயாமல் இருந்து வருகிறது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில் அதிரடி மாற்றங்கள் நடந்தன. குறிப்பாக, கட்சியில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் விலகி, தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றன. இவ்வளவு நாளாக அதிமுகவில் உட்கட்சி பூசல் இருந்து வந்தாலும், அமைதி காத்து இருந்தன. தற்போது, அது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவும், அதிமுக பாஜக கூட்டணி அமைந்ததில் இருந்தே, அதிமுகவில் சலசலப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. குறிப்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே மோதல் நிலவி வருகிறது. கூட்டணி அமைவதற்கு முன்பே, இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன.

இது தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்பதே செங்கோட்டையனின் நிலைப்பாடாக உள்ளது. ஆனால், இதற்கு எடப்பாடி பழனிசாமியோ மறுத்து வருகிறார். இதனால், 2025 செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவை ஒன்றிணைக்க 10 நாட்கள் கெடு விதித்துள்ளார்.  இதனை அடுத்து, தற்போது செங்கோட்டையன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Also Read : ’10 நாள் தான் டைம்.. இல்லையெனில்..’ எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்.. அடுத்த பிளான் இதுதான்!

கொங்கு மண்டலத்தின் நிலை என்ன? 

தமிழக  அரசியலில் முக்கிய இடமாக கொங்கு பகுதி உள்ளது. இதில் அதிமுகவில் ஈரோடு மாவட்டத்தில் முக்கிய முகமாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளார். எம்ஜிஆர் காலத்தில் இருந்தே ஈரோடு மாவட்டத்தில் முக்கிய முகமாக இருந்து வருகிறார். 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியை பிடித்த போது சத்தியமங்கலம் தொகுதியில் செங்கோட்டையன் போட்டியிட்டார். அதன்பிறகு வரும் அனைத்து தேர்தலில் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியிலேயே போட்டியிட்டார். 1996ஆம் ஆண்டு மட்டும் தோல்வியை தழுவினார். அதன்பிறகு, தொடர் வெற்றி தான் அவருக்கு இருந்தது.

இவர் 8 முறை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.  மேலும், ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராகவும் இவர் இருந்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர். செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒரே சமூக பின்புலத்தை சேர்ந்தவர்கள். இருப்பினும், செங்கோட்டையன் எடப்பாடியை விட சீனியர் தலைவராகவும், கொங்கு மண்டலத்தின் செல்வாக்கு மிக்கவராகவும் அவர் திகழ்வதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Also Read : மறப்போம்.. மன்னிப்போம்.. ஒன்றுபட்ட அதிமுக தேவை.. செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு

இப்படியாக இருக்கும் நிலையில், செங்கோட்டையன் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்துள்ளார்.   எடப்பாடி பழனிசாமி அதிமுகவை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை எடுக்காவிட்டால், செங்கோட்டையன் தனது  ஆதரவாளர்களுடன் தனி அணியை கூட அவர் உருவாக்கலாம் என கூறுகின்றனர். இது கொங்கு மண்டலத்தை தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். தேர்தலுக்கு சில மாதங்களே இருக்கும் நிலையில், அதிமுக  வலுவாக உள்ள கொங்கு மண்டலத்தில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.