KA Sengottaiyan: மறப்போம்.. மன்னிப்போம்.. ஒன்றுபட்ட அதிமுக தேவை.. செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி - செங்கோட்டையன் இடையே கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சிகளை அவர் தொடர்ந்து புறக்கணித்து வந்தார். இதனிடையே செப்டம்பர் 5 ஆம் தேதி மனம் திறக்க உள்ளதாக கூறியிருந்தார். தற்போது அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஈரோடு, செப்டம்பர் 5: அதிமுகவில் நீக்கப்பட்டு மீண்டும் இணைய விரும்புபவர்களை சேர்க்க வேண்டும் என தலைமைக்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், “ ஏழை எளிய மக்களுக்கு உருவாக்கப்பட்டதன் அதிமுக. ஜெயலலிதா மறைவுக்குப் பின் இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வந்தது. அந்த சோதனையில் அன்றைக்கு எல்லோரும் சேர்ந்து இயக்கம் உடைய கூடாது என சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்வு செய்தோம்.
அதிமுக உடையக்கூடாது என நினைத்தேன்
அதன்பிறகு காலச்சக்கரம் சுழன்று எல்லாம் மாறியது. அதிமுக பல்வேறு தடுமாற்றங்களை சந்தித்தபோது நான் பல்வேறு பணிகளை ஆற்றியிருக்கிறேன். தமிழக மக்கள் மகிழ்ச்சியாக வாழ எந்த தியாகமும் செய்ய தயாராக இருந்தேன். அன்றைக்கு எனக்கு 2 மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதிமுக உடையக்கூடாது என நினைத்தேன். காரணம் இந்த கட்சியை நம்பி கோடிக்கணக்கான தொண்டர்கள் உள்ளனர்.
இதையும் படிங்க: என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய தினகரன்.. ரிப்ளை கொடுத்த செங்கோட்டையன்.. அடுத்து என்ன?




2016க்கு பின் தொடர்ந்து தேர்தலை சந்தித்தோம். 2019, 2021, 2024 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. 2024 தேர்தல் முடிந்த பிறகு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். கழகம் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என கூறினோம். கட்சி மிகவும் தொய்வடைந்து விட்டது, தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை என சொன்னோம்.
இபிஎஸ் மீது குற்றச்சாட்டு
நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், நான் உட்பட ஆறு பேர் தான் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தோம். ஆனால் அன்றைக்கு அவர் கேட்கும் மனநிலையில் இல்லை. இப்போது ஏன் இதை சொல்கிறேன் என்றால் மறப்போம், மன்னிப்போம். வெளியில் சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். இது எம்ஜிஆர் நமக்கு கற்று தந்தது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மீண்டும் திரும்பி வர எந்தவித நிபந்தனையும் விதிக்கவில்லை. தொண்டர்களின் நலன் கருதி எந்தவித தியாகமும் செய்ய தயாராக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.
இதையும் படிங்க: இபிஎஸ் உடன் மோதல்? – செங்கோட்டையன் எடுத்த முடிவு!
இதை யார் எடுத்துச் சொல்வது என தெரியாத நிலையில் இன்று நான் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்கிறேன். 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூட வெளியில் சென்றவர்களை கழகத்தில் இணைத்துக் கொள்ளுங்கள் என சொல்கிறேன். விரைவில் இதற்கான முடிவை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இதே மனநிலையில் இருப்பவர்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்வோம்” எனவும் செங்கோட்டையன் கூறியுள்ளார்.