அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை.. கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை இணைக்க இபிஎஸ் ஒப்புதல்?
AIADMK-BJP discussion: பாமக உள்ளிட்ட பிற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சி குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, திமுகவை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதற்காக பழைய கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது
சென்னை, டிசம்பர் 24: அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த பின்னர் முதல் முறையாக எடப்பாடி பழனிசாமியும், பியூஸ் கோயலும் நேற்று சென்னையில் சந்தித்தனர். அப்போது இருவரும் சுமார் ஒன்றரை மணி நேரம் வரை ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. அந்தவகையில், அதிமுகவும் – பாஜகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தங்களது கூட்டணியை உறுதி செய்திருந்தாலும், வெளிப்படையாக இதுவரை பேச்சுவார்த்தை எதுவும் நடத்தியதில்லை. இதற்கிடையே, தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து, முதல் முறையாக தொகுதி பங்கீட்டைப் பற்றிய பேச்சுவார்த்தை நேற்று தொடங்கியது. அதோடு, எந்த கட்சி எத்தனை இடங்களில் போட்டியிடும், எந்த கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க : விஜய் ஒரு ஸ்பாயிலர் என சொன்ன பியூஷ் கோயல்? – எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பு குறித்து வெளியானத தகவல்
நட்சத்திர ஹோட்டலில் நடந்த சந்திப்பு:
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமியும், பியூஸ் கோயலும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலோசித்துள்ளனர். அப்போது, டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் கூட்டணியில் சேர வேண்டும் என்று பாஜக தெளிவாகக் கூறியதாகவும், அதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.




கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி தினகரன்:
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பாஜகவுடன் இணைந்து டிடிவி தினகரன் பிரசாரம் செய்து, பிரதமர் மோடிக்காக தீவிரமாக உழைத்திருந்ததால் அவரை பாஜக ஒருபோதும் விட்டு விடாது. எனவே அவர் கூட்டணியில் இருக்க வேண்டும்; அதேபோல் ஓ.பன்னீர்செல்வமும் சேர வேண்டும் என்று பியூஸ் கோயல் முன்வைத்ததாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாடுகளை மறக்க அறிவுரை:
பாமக உள்ளிட்ட பிற கட்சிகளையும் கூட்டணியில் சேர்க்கும் முயற்சி குறித்து பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, திமுகவை எதிர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், அதற்காக பழைய கருத்து வேறுபாடுகளை மறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் பல அம்சங்களுக்கு எடப்பாடி பழனிசாமி சம்மதம் தெரிவித்ததாக தகவல் தெரிவிக்கிறது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:
குறிப்பாக, இந்த சந்திப்பில் அதிமுக – பாஜக மற்றும் கூட்டணியில் சேரும் பிற கட்சிகளுக்கிடையில் தொகுதி பங்கீடும் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கம்போல், அதிமுக அதிக தொகுதிகளில் போட்டியிடும்; பாஜக கடந்த தேர்தலை விட சற்று அதிக தொகுதிகள் பெறும் வாய்ப்பு இருப்பதாகவும் பேசப்படுகிறது.
இதையும் படிக்க : புத்தாண்டு கொண்டாட்டம்.. குழந்தைகளுக்கு நோ எண்ட்ரி.. மீறினால் நடவடிக்கை – உயர்நீதிமன்றம் உத்தரவு..
இபிஎஸ் உடன் இணைய ஓபிஎஸ் மறுப்பு:
அதேசமயம், சென்னையில் நேற்று நடந்த அதிமுக தொண்டர் உரிமை மீட்பு குழு சந்திப்பில், நிர்வாகிகள் மற்றும் தனது ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியுடன் இணைவது இனி சாத்தியமில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.