அண்ணாமலை பெயரில் மிரட்டல்.. பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் கைது
Annamalai: கோவையில் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பெயரைப் பயன்படுத்தி பணம் பறித்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இதில் கோவை வடக்கு மாவட்ட பாஜக செயலாளர் சாமிநாதனும் ஒருவர். சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் பெற்றோர் பெற்ற காப்பீட்டுத் தொகை கேட்டு மிரட்டியது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குடும்பம் - சாமிநாதன்
கோயம்புத்தூர், அக்டோபர் 7: கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் பெயரைச் சொல்லி பணம் கேட்டு மிரட்டியதாக கட்சியின் நிர்வாகி உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குமாரபாளையம் சின்னக்கிணறு பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவருக்கு நாகமணி என்ற மனைவியும் திருமூர்த்தி மற்றும் அருணாச்சலம் என்ற இரு மகன்களும் இருந்தனர். இதில் மூத்த மகனான திருமூர்த்தி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக திருமூர்த்தியின் நண்பரான அன்னூர் அம்மணி அருணா நகரை சேர்ந்த கோகுல கண்ணன், குமாரபாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்ற ராஜராஜ சுவாமி மற்றும் ராசுகுட்டி என்ற ராஜேஷ் ஆகியோர் நாகராஜுக்கு உதவியதாக சொல்லப்படுகிறது. இதில் சாமிநாதன் கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயலாளராக இருந்து வந்தார்.
Also Read: பிரேக் அப் செய்த காதலி.. ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்திய இளைஞர்.. செங்கல்பட்டில் ஷாக்
அண்ணாமலை பெயரில் பணம் கேட்டு மிரட்டல்
இந்த நிலையில் நாகராஜ் தனது மகன் திருமூர்த்தியின் பெயரில் விபத்து காப்பீடு செய்திருந்தார். அதன்படி காப்பீட்டுத் தொகையாக ரூ.50 லட்சம் நாகராஜுக்கு கிடைத்துள்ளது. இதனை அறிந்த கோகுலக்கண்ணன், சாமிநாதன் மற்றும் ராஜேஷ் ஆகிய மூன்று பேரும் பணம் பெற முடிவு செய்துள்ளனர். அதன்படி தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பெயரைச் சொல்லி மிரட்டியுள்ளனர்.
இதனால் திருமூர்த்தியின் பெற்றோர் அவர்களுக்கு ரூ.10 லட்சம் பெற்றுள்ளனர். இதற்கிடையில் பணம் கொடுக்கும் புகைப்படத்தை நாகராஜ் சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர்களுக்கு கோகுல கண்ணன் தரப்பில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நாகராஜ் மற்றும் நாகமணி ஆகிய இருவரும் அன்னூர் பாரதிய ஜனதா நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.
Also Read: Annamalai: பால் பண்ணை.. இயற்கை விவசாயம்.. எதிர்கால முயற்சிகள் குறித்து ஓபனாக பேசிய அண்ணாமலை!
அண்ணாமலை போலீசில் புகார்
மேலும் மீண்டும் ரூ.10 லட்சம் கேட்டு மூன்று பேரும் அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டுவதாக திருமூர்த்தியின் தம்பி அருணாச்சலம் தனது பெற்றோருடன் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இது வைரலான நிலையில் அண்ணாமலை கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மூன்று பேர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்ணாமலை அன்னூர் காவல்நிலத்தில் புகாரளித்தார்.
அதேசமயம் திருமூர்த்தியின் பெற்றோரும் புகார் கொடுத்தனர். இதன் பெயரில் கோகுலக்கண்ணன், ராஜேஷ், சாமிநாதன் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா செயலாளராக இருந்த சாமிநாதன் கட்சி பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.