AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சனி பகவானை எப்படி வழிபட்டால் நன்மை கிடைக்கும்..?

Worshipping Lord Shani: சனி பகவான் நீதியுடன் பலன்களை வழங்கும் நவக்கிரகங்களில் முக்கியமானவர். சனிக்கிழமை சனி வழிபாடு செய்தால் தோஷங்கள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது. சனி காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜபிப்பதும் சிறந்த பலனை தரும் என கூறப்படுகிறது.

சனி பகவானை எப்படி வழிபட்டால் நன்மை கிடைக்கும்..?
சனீஸ்வர பகவான்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 07 Mar 2026 14:06 PM IST

நவக்கிரகங்களில் ஒருவராக கருதப்படுபவர், சனி பகவான். நவக்கிரகங்களில் ‘ஈஸ்வர’ பட்டம் பெற்ற ஒரே கிரகமும், சனி பகவான்தான். சூரிய பகவானுக்கும், சாயா தேவிக்கும் மகனாக பிறந்த சனி பகவான், பாரபட்சம் பார்க்காமல் நீதி வழங்குபவர். பொதுவாக சனி பகவான் என்றாலே அனைவருக்கும் பயம்தான் வரும். காரணம், இவர் கஷ்டங்களை மட்டுமே தரக்கூடியவர் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இவரை முறையாக வழிபட்டால் நன்மைகளையும் வாரி வழங்குவார்.

சனி பகவானின் அருளும் தாக்கமும்

‘சனி போல் யாராலும் கொடுக்கவும் முடியாது; கெடுக்கவும் முடியாது’ என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. சனி பகவான் எந்த அளவுக்கு கஷ்டத்தை கொடுப்பாரோ, அதே அளவுக்கு நன்மைகளையும் அள்ளிக்கொடுப்பார். சனியின் அருட்பார்வை பட்டால் பிச்சைக்காரனும் கோடீஸ்வரன் ஆகலாம். எனவே சனி பகவானின் அருளை பெற, சனிக்கிழமை தோறும் சனிக்கவசம் பாடி வழிபடவேண்டும் என்கிறார்கள்.

சனி சஞ்சாரம் மற்றும் ஏழரை சனி

ஒருவரது ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கும்போது, பல துன்பங்களை தருவதுபோல அந்த ராசியை விட்டு செல்லும்போது அவர் கொடுத்த துன்பங்களுக்கு ஈடாக இன்பத்தையும் கொடுத்து செல்வார். சனி தோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்தி செய்தால் சனியின் தாக்கம் குறைந்து நன்மைகளை பெறலாம். குறிப்பாக ஏழரைச் சனிக்காலம் என்பது கடினமான நேரமாகும். அந்த சமயத்தில் சனி பகவான் வழிபாடு மிகவும் அவசியம் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

Also Read: திருநள்ளாற்றில் சனிப்பெயர்ச்சி விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சனிக்கிழமை வழிபாட்டின் சிறப்பு

சனி பகவானுக்கு உகந்த நாள் சனிக்கிழமை ஆகும். எனவே சனிக்கிழமை சனி பகவானை வழிபடுவது சிறந்த பலனை தரும். சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள், ‘கெடு பலன்களை விலக்கி அருள வேண்டும்’ என சனி பகவானிடம் வேண்டிக் கொண்டு விரதம் இருக்க வேண்டும். இது மன அமைதியையும், வாழ்க்கையில் நல்ல மாற்றங்களையும் தரும் என நம்பப்படுகிறது.

வழிபாட்டு முறைகள்

சனிக்கிழமை அன்று, அதிகாலையில் நீராடிவிட்டு புதிய உடை அணிந்து கோவிலுக்கு செல்ல வேண்டும். கோவிலில், சனி சன்னிதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, எள் அன்னம் நைவேத்தியம் படைக்க வேண்டும். பின்பு, சனிக் கவசம் பாடி மனமுருக வணங்கி வழிபட வேண்டும். முடிந்தவரை ஏழைகளுக்கு எள் அன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் வழங்கலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், வீட்டிலேயே சனிபகவான் படம் வைத்து தீபம் ஏற்றி வழிபடலாம். எளிய மனதுடன் செய்யும் எந்த வழிபாட்டையும் சனி பகவான் ஏற்றுக்கொள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

காகத்திற்கு அன்னம் இடும் பழக்கம்

சனி பகவானின் வாகனமாக காகம் கருதப்படுகிறது. எனவே காகத்துக்கு அன்னம் இடுவதும் சிறந்த பலனை தரும். இது, சனி பகவானின் கோபத்தை தணிப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும், முன்னோர்களின் ஆசியை பெறவும், பித்ரு தோஷத்தை போக்கவும் உதவும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

சனி பகவானை வணங்கும் விதம்

சனி பகவானை வணங்கும்போது, நேருக்குநேர் நின்று வணங்காமல் பக்கவாட்டில் நின்று வணங்க வேண்டும். வழிபட்டு முடிந்ததும், உடனே திரும்பாமல் சற்று தூரம் பின்னோக்கி சென்று, அதன்பின் திரும்ப வேண்டும். கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து சனிக் கவசம் பாடி வழிபடுவதும் நல்லது என பக்தர்கள் நம்புகின்றனர்.

சனி காயத்ரி மந்திரத்தின் முக்கியத்துவம்

சனி பகவானை முறையாக வழிபட்டு வந்தால் சனி பகவானால் ஏற்படும் தோஷங்கள் குறைந்து நிம்மதியான வாழ்வு வாழலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்படும். பண நெருக்கடி, குடும்ப பிரச்சினை நீங்கும். முந்தைய பாவங்கள் குறைந்து, நல்வினைகள் அதிகமாகும் என்பது நம்பிக்கை.

சனி காயத்ரி மந்திரம்:
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்கஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்தஹ் ப்ரசோதயாத்”

இந்த சனி காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை உச்சரித்து வந்தால் நீண்ட ஆயுளும், இன்ப வாழ்வும் பெருகும். நவக்கிரகங்கள் உள்ள கோவில்களில் சனி பகவானுக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை உச்சரித்து வழிபடுவது விசேஷமாக கருதப்படுகிறது.

Follow Us