IPL 2026: நடப்பு சாம்பியன் ஆர்சிபியும் விற்பனை.. பக்கா ப்ளான் போட்டு தூக்கிய ஆதித்யா பிர்லா குழுமம்!
Royal Challengers Bengaluru: ஆதித்யா பிர்லா குழுமம், இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகக் குழுமமான டைம்ஸ் ஆஃப் இந்தியா, புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனின் மூலோபாய பங்குப் பிரிவான BXPE, மற்றும் அமெரிக்க தொழிலதிபர் டேவிட் பிளிட்சரின் நிறுவனமான போல்ட் வென்ச்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஆண்கள் மற்றும் மகளிர் ஆகிய 2 அணிகளையும் 100% பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல் 2026 சீசன் (IPL 2026) இன்னும் தொடங்கவே இல்லை. அதற்குள் லீக்கின் இரண்டு பழமையான மற்றும் சாம்பியன் அணிகள் விற்கப்பட்டுவிட்டன. ஐபிஎல் லீக்கின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸை தொடர்ந்து, தற்போது நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்கும் தற்போது புதிய உரிமையாளர்கள் கிடைத்துள்ளன. ஐபிஎல்-லில் அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட நடப்பு சாம்பியன் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை, 4 புகழ்பெற்ற நிறுவனங்களின் கூட்டமைப்பு ஒன்று 1.78 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 16,600 கோடி ரூபாய் என்ற விலைக்கு வாங்கியுள்ளது. பெங்களூரு அணியை வாங்கும் நான்கு நிறுவனங்களில், இந்தியாவின் புகழ்பெற்ற வர்த்தகக் குழுமமான ஆதித்யா பிர்லா ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி, ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட அணி என்ற பெருமையை பெங்களூரு அணி பெற்றது.
ALSO READ: விற்கப்பட்ட ராஜஸ்தான் ராயல்ஸ்.. கோடிகளை கொட்டி வாங்கிய அமெரிக்க தொழிலதிபர்..!
2 அணிகளும் விற்பனை:
2026 மார்ச் 24ம் தேதியான நேற்று 2 முக்கிய ஐபிஎல் அணிகளின் விற்பனை ஒரே நாளில் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை அமெரிக்கர்களான கல் சோமானி, ராப் வால்டன் மற்றும் ஷீலா ஃபோர்டு ஹெம்ப் ஆகியோர் 1.65 பில்லியன் டாலருக்கு (ரூ. 15,400 கோடி) வாங்கினர். சிறிது நேரத்திற்குப் பிறகு, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விற்பனையும் அறிவிக்கப்பட்டது. இரு அணிகளை விற்கும் பேச்சுவார்த்தையானது கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடந்தது.
ஆர்சிபி அணியை எந்த நிறுவனம் வாங்கியது..?
ஆதித்யா பிர்லா குழுமம், இந்தியாவின் புகழ்பெற்ற ஊடகக் குழுமமான டைம்ஸ் ஆஃப் இந்தியா, புகழ்பெற்ற அமெரிக்க முதலீட்டு நிறுவனமான பிளாக்ஸ்டோனின் மூலோபாய பங்குப் பிரிவான BXPE, மற்றும் அமெரிக்க தொழிலதிபர் டேவிட் பிளிட்சரின் நிறுவனமான போல்ட் வென்ச்சர்ஸ் ஆகியவற்றின் கூட்டமைப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவின் ஆண்கள் மற்றும் மகளிர் ஆகிய 2 அணிகளையும் 100% பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டமைப்பு, ஆர்சிபி கடந்த 2008ல் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் உரிமையாளராக இருந்து வரும் டியாகோ குழும நிறுவனமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் என்ற தற்போதைய உரிமையாளரிடமிருந்து கையகப்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த இரு அணிகளும் 2026 ஐபிஎல் சீசன் வரை தற்போதைய உரிமையாளர்களின் கீழ் விளையாடும், மேலும் அடுத்த சீசனிலிருந்து புதிய உரிமையாளர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.
ஆர்சிபியின் தலைவராக ஆர்யமான் விக்ரம் பிர்லா:
ஐபிஎல்-இன் உரிமையை மட்டுமல்லாமல், தற்போதைய சாம்பியனான டபிள்யூ.பி.எல் தொடரில் உள்ள ஆர்.சி.பி மகளிர் அணியின் உரிமையையும் வாங்கியுள்ளது. இந்த 4 நிறுவனங்களும் ஆர்.சி.பி-யில் எவ்வளவு பங்குகளை பிரித்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், ஆதித்யா பிர்லா குழுமத்தின் இயக்குநரும் குமார் மங்கலம் பிர்லாவின் மகனுமான ஆர்யமான் விக்ரம் பிர்லா ஆர்.சி.பி-யின் தலைவராக இருப்பார் என்று தெரியவந்துள்ளது. டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தைச் சேர்ந்த சத்யன் கஜ்வானி அதன் துணைத் தலைவராக இருப்பார்.
ALSO READ: உயிரிழந்த 11 பேருக்கு நினைவகம்.. உணர்ச்சிப்பூர்வமான முடிவை எடுத்த ஆர்சிபி!
2008-ல் ஆர்சிபியின் விலை என்னவாக இருந்தது?
2008-ல் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு, பிசிசிஐ 8 அணிகளை விற்றிருந்தபோது, கிங்ஃபிஷர் உரிமையாளர் விஜய் மல்லையா பெங்களூரு அணியை 111.60 மில்லியன் டாலருக்கு வாங்கினார். இது அக்காலத்தில் சுமார் ரூ. 455 கோடிக்குச் சமமாகும். அந்த நேரத்தில், மும்பை இந்தியன்ஸுக்கு (ரூ. 456 கோடி) அடுத்தபடியாக அந்த ஃபிரான்சைஸ் இரண்டாவது அதிக விலைக்கு வாங்கப்பட்ட அணியாக இருந்தது. தற்போது ஆர்சிபி தனது முதல் பட்டத்தை வெல்ல 18-வது சீசன் வரை காத்திருக்க வேண்டியிருந்தாலும், அந்த ஃபிரான்சைஸின் பிராண்ட் மதிப்பு தொடர்ந்து வளர்ந்து வந்தது. இதன் காரணமாகவே, பெங்களூரு அணி இவ்வளவு தொகைக்கு வாங்கப்பட்டது.