Rohit Sharma retirement: அழுத்ததால் ரோஹித் சர்மா ஓய்வா..? விளக்கம் தந்த பிசிசிஐ..!
BCCI statement Rohit Sharma: ரோஹித் சர்மா எதிர்பாராதவிதமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவு இந்திய அணியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிசிசிஐ அவரது முடிவை ஏற்றுக் கொண்டது. 2024 T20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20யிலிருந்தும் ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா (Rohit Sharma) யாரும் எதிர்பார்க்காத வகையில், 2025 மே 7ம் தேதியான நேற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த அதிரடி முடிவின் மூலம், ரோஹித் சர்மாவின் 11 ஆண்டுகால டெஸ்ட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது. ரோஹித் சர்மா 2024 டி20 உலகக் கோப்பைக்கு (2024 T20 World Cup) பிறகு, டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். இதன் காரணமாக, இனி ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடுவார். ஐபிஎல் 2025 சீசன் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கு முன்னதாக, ரோஹித் சர்மாவின் முடிவு அதிர்ச்சியை கொடுத்தது.
ரோஹித் சர்மாவின் ஓய்வு குறித்து பிசிசிஐ விளக்கம்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெற்றது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவிக்கையில், “டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வு பெறுவதை பொறுத்தவரை, அவரே இந்த முடிவை எடுத்துள்ளார். அவரது இந்த முடிவை நாங்கள் எந்த அழுத்தத்தையும் கொடுத்ததால் வரவில்லை. அவர்களுக்கு எந்த ஆலோசனைகளையும் வழங்குவடில்லை, அவர்களிடம் எதுவும் சொல்வதில்லை.
அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளார். நாங்கள் அவரை எவ்வளவு புகழ்ந்தாலும் அது குறைவுதான். அவர் இன்னும் முழுமையாக கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்யவில்லை. எனவே ரோஹித் சர்மாவின் அனுபவத்தையும் திறமையையும் நிச்சயமாக பயன்படுத்தி கொள்வோம். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய நாங்கள் வாழ்த்துகிறோம்.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்பது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ராஜீவ் சுக்லா, “இது தேர்வாளர்களின் வேலை. இதில் எந்த யூகங்களும் செய்யக்கூடாது. யார் கேப்டன் என்பதை தேர்வாளர்கள் முடிவு செய்து உங்களுக்கு சொல்வார்கள். அது முற்றிலும் அவர்களின் முடிவாகும்” என்று தெரிவித்தார்.
ரோஹித் சர்மாவின் டெஸ்ட் வாழ்க்கை:
ரோஹித் சர்மா இந்திய அணிக்காக இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 40.57 சராசரியில் மொத்தமாக 4301 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 12 சதங்களும், 18 அரைசதங்களும் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மா 88 சிக்ஸர்களையும், 473 பவுண்டரிகளையும் அடித்துள்ளார். ரோஹித் சர்மா இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக தலைமை வகித்து, இந்தியா 12 டெஸ்ட் போட்டிகளில் வென்று கொடுத்துள்ளார். அதேநேரத்தில் 9 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளில் டிராவை பெற்று தந்துள்ளார்.