மைதானத்தில் பதற்றம்.. அவசரமாக வெளியேறிய மெஸ்ஸி.. சேர், தண்ணீர் பாட்டில்களை தூக்கி எறிந்த ரசிகர்கள்.. பரபரப்பு வீடியோ!
மெஸ்ஸியை சரியாக பார்க்க முடியாததால், ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். இதனால், தங்கள் கைகளில் இருந்த தண்ணீர் பாட்டில்களை தூக்கி வீச தொடங்கியவர்கள், பின்னர் இருக்கைகளையும், மேஜைகளையும் தூக்கி வீசி சேதப்படுத்த தொடங்கினார். இதனால், அங்கு மொத்த மைதானமும் வன்முறை களமாக மாறியது.
மேற்குவங்கம், டிசம்பர் 13: கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வருகை தந்துள்ளார். அந்தவகையில், இன்று காலை அவர், ஸ்ரீபூமி ஸ்போர்ட்டிங் கிளப்பில் உள்ள தனது 70 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார். தொடர்ந்து, கொல்கத்தாவின் சால்ட் லேக் மைதானத்திற்கு வருகை தந்தார். அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சால்ட் லேக் மைதானத்தில் காலை முதல் அர்ஜென்டினா அணியின் ஜெர்ஸி அணிந்தபடி, உற்சாகத்துடன் காத்திருந்தனர். தொடர்ந்து, அவர் மைதானத்தில் காத்திருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்தார். அப்போது மொத்த மைதானமே அதிரும் அளவுக்கு “மெஸ்ஸி, மெஸ்ஸி” என உணர்ச்சிபொங்க கோஷம் எழுப்பினர்.
14 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்த மெஸ்ஸி:
பின்னர் அவர் ரசிகர்களை பார்த்து கையசைத்தபடி மைதானத்தை வளம் வந்தார். கடைசியாக 2011ல் இந்த சால்ட் லேக் மைதானத்தில் அர்ஜென்டினா, வெனிசுலா அணிகள் மோதின. அப்போது, இந்த போட்டியில் பங்கேற்க மெஸ்ஸி இந்தியா வந்திருந்தார். அதன் பின், 14 ஆண்டுகள் கழித்து தற்போது அவர் இந்தியா வருகை தந்துள்ளார்.
கோபமடைந்த ரசிகர்கள்:
இதனிடையே, மைதானத்தில் வளம் வந்த மெஸ்ஸியை தெளிவாக பார்க்க முடியாத அளவுக்கு முக்கியஸ்தர்கள், ஊடகங்கள், பாதுகாவலர்கள், போலீசார் என பலரும் சூழ்ந்து கொண்டதால் மைதானத்தில் இருக்கையில் அமர்ந்திருந்த ரசிகர்களால் மெஸ்ஸியை தெளிவாக பார்க்க முடியவில்லை எனத் தெரிகிறது. இதனால், அவர்கள் கடும் கோபமடைந்தனர். அதோடு, ஒரு சிலர் கோபத்தில் தங்களது கையில் இருந்த தண்ணீர் பாட்டில்களை மைதானத்தில் தூக்கி வீசியதாக தெரிகிறது.
மைதானத்தை சூறையாடிய ரசிகர்கள்:
#WATCH | Kolkata, West Bengal: Angry fans threw bottles and chairs from the stands at Kolkata’s Salt Lake Stadium
Star footballer Lionel Messi has left the Salt Lake Stadium in Kolkata.
More details awaited. pic.twitter.com/mcxi6YROyr
— ANI (@ANI) December 13, 2025
மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மெஸ்ஸி:
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக மெஸ்ஸி அங்கிருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டார். இதனால், மைதனாத்தில் இருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர். இதனால், தங்கள் கையில் இருந்த தண்ணீர் பாட்டில்களை அங்கிருந்த அனைவரும் தூக்கி எறியத் தொடங்கினர். அதோடு, மைதானத்தில் இருந்த இருக்கைகள், மேஜைகளை அவர்கள் தூக்கி எறிந்து மைதானத்தை சூறையாட தொடங்கியதால் அங்கு பதற்றம் நிலவியது.
அதோடு, ரூ.12,000 கொடுத்து டிக்கெட் வாங்கி மைதானத்தில் காலையில் இருந்து காத்திருப்பதாகவும், மெஸ்ஸி மைதானத்தில் 10 நிமிடங்கள் கூட இருக்கவில்லை எனவும் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும், அவரை சரியாக பார்க்கக்கூட முடியவில்லை என்றும், பிரபலங்கள் பலரும் அவரை சூழ்ந்துக்கொண்டதாகவும் வேதனை தெரிவித்தனர்.
மைதானத்தில் போலீசார் தடியடி:
#WATCH | Kolkata, West Bengal: Police personnel use mild force to disperse the crowd.
Angry fans vandalised the Salt Lake Stadium in Kolkata, alleging poor management of the event.#GOATIndiaTour2025 #LionelMessi https://t.co/I0iqMUJsiQ pic.twitter.com/cilRA1erP4
— ANI (@ANI) December 13, 2025
தொடர்ந்து, சேர்களை தூக்கி எறிந்து வந்த ரசிகர்களை போலீசார் கட்டுப்படுத்த முயன்றனர். இதனால், மேலும் ஆவேசமடைந்த ரசிகர்கள் போலீசார் மீது சேர்களை தூக்கி வீசத் தொடங்கியதால், அங்கு வன்முறை நீண்டது. போலீசாரும், ரசிகர்களும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் கையில் கிடைத்த பொருட்களை தூக்கி வீசத் தொடங்கினர். இதனால், கூட்டத்தை களைக்க போலீசார் தடியடி மேற்கொண்டனர்.