IPL 2025 Suspended: இந்தியா – பாகிஸ்தான் இடையே பதட்டம்.. ஐபிஎல்லை ரத்து செய்ய பிசிசிஐ முடிவு..!
India Pakistan Tension: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வான்வழி தாக்குதல் காரணமாக, ஐபிஎல் 2025 58வது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி தர்மசாலாவில் ரத்து செய்யப்பட்டது. பிசிசிஐ அவசரக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் எனவும், வெளிநாட்டு வீரர்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பப்படலாம் என்றும் தெரிவித்துள்ளது. வீரர்களுக்கு சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் 2025 (IPL 2025) 58வது போட்டியில் இன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் தர்மசாலாவில் மோதியது. பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதல் முயற்சி காரணமாக, இந்த போட்டியானது பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையிலான வான்வழி தாக்குதல் காரணமாக சிறிது நாட்களுக்கு ஐபிஎல் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் என்று பிசிசிஐ (BCCI) அவசரக் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, ஐபிஎல் 2025 போட்டிகளில் பங்கேற்றுள்ள அனைத்து வெளிநாட்டு வீரர்களையும் அவர்களது சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்ப முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் முயற்சித்த வான்வழி தாக்குதல்கள் காரணமாக, தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வீரர்களுக்கு சிறப்பு ரயில்:
டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்ட பிறகு, பிசிசிஐ ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது அதன்படி, பஞ்சாப் மற்றும் டெல்லி வீரர்கள், துணை பயிற்சியாளர்கள் மற்றும் ஒளிபரப்பு குழுவினர் நாளை அதாவது 2025 மே 9ம் தேதி தர்மசாலாவிலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட இருக்கின்றனர். அதேநேரத்தில், டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டியைக் காண வந்திருந்த மக்கள் மைதானத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து, வீரர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்காது என்று பிசிசிஐ உறுதியாக தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம் காரணமாக ஐபிஎல் ரத்து செய்யப்படுமா?
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் வான்வழி தாக்குதல் காரணமாக ஐபிஎல் 2025 குறித்த முடிவு நாளை அதாவது 2025 மே 9 ம் தேதி வெளியாகும். இதில், ஐபிஎல் 2025 முழுவதும் ரத்து செய்யப்படுமா..? அல்லது சில போட்டிகள் ரத்து செய்யப்படுமா என்பது தெரியவரும்.
பாதியில் ரத்து செய்யப்பட்ட பஞ்சாப் – டெல்லி போட்டி:
பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று அதாவது 2025 மே 8ம் தேதி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் இடையே வெறும் 10.1 ஓவர்கள் மட்டுமே விளையாட முடிந்தது. பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ய வந்து 10.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்திருந்தது. இந்தப் போட்டியில், பஞ்சாப் தொடக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா 34 பந்துகளில் 70 ரன்கள் எடுத்து அவுட்டானார். அதே நேரத்தில், பிரப்சிம்ரன் சிங் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியின் நடுவில், திடீரென அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட்டு, மைதானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.