KKR vs CSK: பழிவாங்க துடிக்கும் சென்னை.. பிளே ஆஃப் பாதையை தொடருமா கொல்கத்தா..? பிட்ச் எப்படி..?
KKR vs CSK Preview: ஐபிஎல் 2025ன் 57வது போட்டியில் மே 7ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகின்றன. பிளே ஆஃப் வாய்ப்புக்காக KKR-க்கு இந்தப் போட்டி மிக முக்கியம். CSK ஏற்கனவே வெளியேறியுள்ளது. ஈடன் கார்டன்ஸ் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமானது. மழை வாய்ப்பு உள்ளது. இரு அணிகளின் பேட்டிங் லெவன் மற்றும் ஹெட்-டு-ஹெட் விவரங்களை இங்கே காணலாம்.
ஐபிஎல் 2025ன் (IPL 2025) 57வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 7ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் மோதுகிறது. இந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கனவே ஐபிஎல் 2025ன் பிளே ஆஃப் பந்தயத்திலிருந்து வெளியேறிவிட்டது. அதேநேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு இந்த போட்டி செய் அல்லது செத்து மடி போட்டியாகும். கொல்கத்தா பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமென்றால், மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெறுவது முக்கியம். இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான பிளேயிங் லெவன், ஹெட் டூ ஹெட் மற்றும் ஈடன் கார்டன்ஸ் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
ஹெட் டூ ஹெட்:
ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 30 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகபட்சமாக 19 போட்டிகளிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 11 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தாவில் இரு அணிகளுக்கு இடையிலான மோதலிலும் சென்னை அணியே ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இதுவரை கொல்கத்தாவில் ஈடன் கார்டனில் சென்னை மற்றும் கொல்கத்தா இடையே 10 போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 6 போட்டிகளில் சென்னை அணியே வெற்றி பெற்றுள்ளது.
வானிலை எப்படி..?
வானிலையை பொறுத்தவரை கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது மழை பெய்ய 55 சதவீதம் வாய்ப்புள்ளது. ஒன்று, முழு போட்டியையும் கெடுக்கலாம். அப்படி இல்லையென்றால், போட்டியின் நேரத்தை குறைக்கலாம். வெப்பநிலை 36°C முதல் 27°C வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிட்ச் எப்படி..?
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் ஸ்டேடியம் தட்டையானது. இந்த காரணத்தினால் இங்குள்ள் பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக கருதப்படுகிறது. இதனால், அதிக ஸ்கோரிங் கொண்ட போட்டியை எதிர்பார்க்கலாம். அதேநேரத்தில், போட்டி தொடங்கி சிறிதுநேரத்திற்கு பிறகு ஆடுகளம் மெதுவாகி சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்குகிறார்கள். இந்த மைதானத்தில் டாஸ் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
சென்னை சூப்பர் கிங்ஸ்:
ஷேக் ரஷித், ஆயுஷ் மத்ரே, சாம் குர்ரான், ரவீந்திர ஜடேஜா, டெவால்ட் ப்ரீவிஸ், தீபக் ஹூடா, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் கம்போஜ், மதிஷா பத்திரனா
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ஆங்கிரிஷ் ரகுவன்ஷி, மொயீன் அலி, வெங்கடேஷ் ஐயர், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, வைபவ் அரோரா