Asia Cup 2025: ஆசியக் கோப்பையில் இந்திய அணி விளையாடாதா..? பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா விளக்கம்!
India-Pakistan Tensions: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் காரணமாக, இந்தியா ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்காது என்ற தகவல் பரவியது. இந்த தகவலை பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா மறுத்துள்ளார். தற்போது ஐபிஎல் மற்றும் இங்கிலாந்து தொடரில் கவனம் செலுத்துவதாகவும், ஆசியக் கோப்பை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான (India Pakistan Tensions) உறவுகள் மோசமடைந்து வருதால், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்து வகையான உறவுகளையும் முடிவு கொண்டுவருவது குறித்த பேச்சுகள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக, வரவிருக்கும் நாட்களில் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாது என்று கூறப்பட்டு வருகிறது. 2025 மே 19ம் தேதியான இன்று காலை திடீரென பிசிசிஐ (BCCI) ஆசிய கோப்பையில் பங்கேற்காது என்ற செய்தி வெளியானது. இது இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்தது. இந்தநிலையில், இப்படியான செய்திகள் உண்மையில்லை என பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா (Devajit Saikia) தெரிவித்துள்ளார்.
பிசிசிஐ விளக்கம்:
BCCI Secretary Devajit Saikia to ANI says, “Since this morning, it has come to our notice about some news reports that the BCCI has decided not to participate in the Asia Cup and the Women’s Emerging Teams Asia Cup, both of which are ACC (Asian Cricket Council) events. Such news… pic.twitter.com/U0fZ9t8Ykl
— ANI (@ANI) May 19, 2025
பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் குறித்து கிரிக்பஸிடம் பேசியதாவது, “2025 மே 19ம் தேதியான இன்று காலை முதல் ஆசிய கோப்பை மற்றும் பெண்கள் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பையில் பங்கேற்கப் போவதில்லை என்ற பிசிசிஐயின் முடிவு குறித்து சில தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இதுபோன்ற தகவல்கள் முற்றிலும் தவறானவை. ஏனெனில் இதுவரை பிசிசிஐ வரவிருக்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் கிரிக்கெட் நிகழ்வுகள் குறித்து எந்த விவாதத்தையும் நடவடிக்கையையும் எடுக்கவில்லை.” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போது எங்கள் முழு கவனமும் ஐபிஎல் மற்றும் அதை தொடர்ந்து வரும் இங்கிலாந்து தொடர் (ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும்) மீதுதான் உள்ளது. ஆசிய கோப்பை அல்லது வேறு எந்த ஏசிசி நிகழ்வும் எந்த மட்டத்திலும் விவாதத்திற்கும் வரவில்லை. எனவே, இதுகுறித்த எந்த செய்திகளும் அல்லது அறிக்கைகளும் முற்றிலும் ஊகமானது மற்றும் கற்பனையானவை. எந்தவொரு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் விவாதிக்கப்படும்போது அல்லது ஏதேனும் முக்கியமான முடிவு எட்டப்படும்போது மட்டுமே பிசிசிஐ அந்த நேரத்தில் ஒரு அறிவிப்பை வெளியிடும்” என்று தெரிவித்தார்.
ஆசிய கோப்பை எப்போது நடைபெறுகிறது..?
ஆண்கள் ஆசிய கோப்பை 2025 போட்டியானது இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதேநேரத்தில், பெண்கள் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசிய கோப்பை 2025 இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த 2 போட்டிகளிலிருந்தும் விலகுவது குறித்து பிசிசிஐ ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு தகவல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவர் மொஹ்சின் நக்விதான், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.