Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மிரட்டல் பந்து வீச்சு – தென்னாப்பிரிக்காவை எளிதாக சுருட்டிய இந்தியா – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

IndvsSA: 3வது டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களை மட்டுமே எடுத்தது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது.

மிரட்டல் பந்து வீச்சு – தென்னாப்பிரிக்காவை எளிதாக சுருட்டிய இந்தியா – 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 14 Dec 2025 22:32 PM IST

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தலா 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.  இந்த நிலையில் 3வது ஒருநாள் போட்டி டிசம்பர் 14, 2025 ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி தொடக்கத்தில் இருந்தே இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது.  ஒரு பக்கம் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்து வந்தாலும், அந்த அணியின் கேப்டன் எய்டன் மார்க்ரம் பொறுப்பாக ஆடி அரை சதம் அடித்தார்.

ஹர்திக் பாண்ட்யா வரலாற்று சாதனை

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா , அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியின் மூலம் ஹர்திக் பாண்ட்யா சர்வதேச டி20 போட்டிகளில் 1000 ரன்களையும், 100 விக்கெட்டுகளையும் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்த நிலையில் அபிஷேக் சர்மா மற்றும் சுப்மன் கில் இணைந்து நல்ல துவக்கம் தந்தனர். இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர்.  ஆனால் இந்த ஜோடி வெகு நேரம் நீடிக்கவில்லை. 18 பந்துகளில்  அபிஷேக் சர்மா 3 பவுண்டரி, 3 சிக்சர் என 35 ரன்கள் அடித்திருந்த நிலையில், கேப்டன் எய்டன் மார்க்ரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து 28 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் அடித்த சுப்மன் கில் மார்கோ ஜான்சன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து திலக் வர்மாவுடன் சூர்யகுமார் யாதவ் இணைந்தார். ஒரு கட்டத்தில் சிக்சர்களை பறக்கவிட்ட சூர்யகுமார் எதிர்பாராதவிதமாக நிகிடியிடம் கேட்ச் கொடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியாக களமிறங்கிய ஷிவம் துபே 16 ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்து இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். இதன் மூலம் இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.