AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Asian Games 2026: கனமழையால் IND – AFG மோதிய காலிறுதி போட்டி ரத்து.. அரையிறுதியில் இந்தியா!!

Ind vs Afg Quarterfinal Abandoned: ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவிருந்த நிலையில், பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் போட்டி ரத்து செய்யப்பட்டது. அதிக தரவரிசை புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது.

Asian Games 2026: கனமழையால் IND – AFG மோதிய காலிறுதி போட்டி ரத்து.. அரையிறுதியில் இந்தியா!!
காலிறுதி போட்டி ரத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 28 Sep 2026 10:24 AM IST

ஜப்பானின் ஐச்சி-நாகோயா பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் தொடரில், தங்கம் வெல்லும் முனைப்போடு களமிறங்கிய இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கு மழையின் வடிவில் பெரும் சவால் உருவானது. நிஷின் நகரில் உள்ள ‘கோரோகி ஸ்போர்ட்ஸ் பார்க் ‘ மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி, டார்விஷ் ரசூலி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியை எதிர்கொள்ளத் தயாராக இருந்தது. இருப்பினும், போட்டித் தொடங்குவதற்கு முன்பிருந்தே பெய்த விடா மழையின் காரணமாக, டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் முற்றிலும் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி மீது எழுந்த எதிர்பார்ப்பு:

இந்த ஆசிய விளையாட்டுத் தொடரில் இந்திய அணி வலுவான முன்னணி வீரர்களுடன் களமிறங்கியிருந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் மற்றும் இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அடங்கிய அணிப் பட்டியல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக, சமீபத்தில் நடந்த இருதரப்பு டி20 தொடரில் அபாரமாகச் செயல்பட்ட 15 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு இந்தக் காலிறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், வானிலை மோசமடைந்ததால் ஆட்டம் நடைபெறாமல் போனது ரசிகர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா:

இப்போட்டி நடைபெற்ற அதே மைதானத்தில் முன்னதாக நடைபெறவிருந்த பாகிஸ்தான் – ஹாங்காங் அணிகளுக்கு இடையேயான முதல் காலிறுதி ஆட்டமும் மழையினால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆசிய விளையாட்டுப் போட்டியின் சர்வதேச விதிகளின்படி, காலிறுதி ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தரவரிசையில் அதிக புள்ளிகளுடன் தரவரிசையில் முன்னணியில் இருக்கும் அணி நேரடியாக அடுத்த சுற்றுக்குத் தகுதிபெறும். அந்த வகையில், ஆப்கானிஸ்தான் அணியை விட அதிக தரவரிசைப் புள்ளிகளைக் கொண்ட இந்திய அணி, போட்டி நடைபெறாமலேயே நேரடியாக அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

தங்கப் பதக்க கனவுடன் இந்திய அணி:

ஏற்கெனவே ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிர் கிரிக்கெட் பிரிவில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கத்தைத் தக்கவைத்து வரலாற்றுச் சாதனை படைத்திருந்தது. அதே பாணியில், ஆண்களுக்கான கிரிக்கெட் பிரிவிலும் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி ஆதிக்கத்தைச் செலுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முனைப்பு காட்டி வருகிறது. காலிறுதி ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட போதிலும், அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய அணி, தங்களின் அடுத்தகட்டப் போட்டிகளில் வென்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றும் என்ற நம்பிக்கையில் கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow Us