AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வரலட்சுமி விரதம் 2026: தேதி, முக்கியத்துவம் மற்றும் வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?

Varalakshmi Vratham: 2026ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. செல்வம், குடும்ப நலம், ஆரோக்கியம் மற்றும் மாங்கல்ய பலன் கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பெண்கள் இந்த விரதத்தை கடைப்பிடிக்கின்றனர். கலசம் வைத்து வரலட்சுமி அம்மனை அலங்கரித்து, பூஜை, நைவேத்தியம் மற்றும் தீபாராதனை செய்து வழிபடுவது முக்கியமான முறையாகும்.

வரலட்சுமி விரதம் 2026: தேதி, முக்கியத்துவம் மற்றும் வீட்டிலேயே பூஜை செய்வது எப்படி?
வரலட்சுமி விரதம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 18 Aug 2026 05:35 AM IST

வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமியின் அருளைப் பெறுவதற்காக பெண்கள் பக்தியுடன் கடைப்பிடிக்கும் முக்கியமான விரதமாகும். குடும்பத்தில் செல்வம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, கணவரின் நீண்ட ஆயுள் உள்ளிட்ட நலன்கள் கிடைக்க வேண்டும் என்பதே இந்த வழிபாட்டின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது. திருமணமாகாத பெண்களும் நல்ல வாழ்க்கைத்துணை அமைய வேண்டும் என்ற வேண்டுதலுடன் இந்த விரதத்தை கடைப்பிடிப்பது வழக்கம். அஷ்ட லட்சுமிகளின் அருளையும் பெறுவதற்கான சிறப்பான நாளாகவும் வரலட்சுமி விரதம் நம்பப்படுகிறது.

2026-ல் எப்போது வரலட்சுமி விரதம்?

2026ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் தங்களது குடும்ப வழக்கத்துக்கு ஏற்ப விரதம் இருந்து, வீட்டில் வரலட்சுமியை கலச வடிவில் எழுந்தருளச் செய்து பூஜை செய்வார்கள். சிலர் காலை நேரத்திலும், சிலர் மாலை நேரத்திலும் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

வரலட்சுமி விரதத்தின் பின்னணி

வரலட்சுமி விரதம் தொடர்பாக சாருமதி என்ற பெண்ணை மையமாகக் கொண்ட புராணக் கதை ஒன்று கூறப்படுகிறது. பக்தியுடனும் நல்ல பண்புகளுடனும் வாழ்ந்த சாருமதிக்கு கனவில் வரலட்சுமி தோன்றி, குறிப்பிட்ட வெள்ளிக்கிழமையில் தன்னை விரதமிருந்து வழிபடுமாறு அறிவுறுத்தியதாக ஐதீகம் உள்ளது. இதையடுத்து அவர் தனது உறவினர்கள் மற்றும் ஊரிலுள்ள பெண்களுடன் இணைந்து அம்மனை வழிபட்டதாகவும், அந்த வழிபாட்டின் மூலம் லட்சுமியின் அருளைப் பெற்றதாகவும் நம்பப்படுகிறது.

கலசம் அமைத்து அம்மனை அலங்கரித்தல்

வரலட்சுமி பூஜைக்காக முதலில் வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து, சிறிய பீடம் அமைக்க வேண்டும். அதில் கலசத்தை வைத்து தண்ணீர் அல்லது அரிசி நிரப்பி, நாணயங்கள், வெற்றிலை, பாக்கு உள்ளிட்ட மங்களப் பொருட்களை சேர்க்கலாம். பின்னர் கலசத்தின் மேல் தேங்காய் மற்றும் மாவிலையை வைத்து, புதிய புடவை, நகைகள், மஞ்சள், குங்குமம் மற்றும் மலர்களால் அம்மன் அலங்காரம் செய்யப்படுகிறது.

Also Read: இரவில் சிவலிங்க வழிபாடு நல்லதா? அபிஷேகம் செய்யலாமா? ஆன்மிகம் தரும் விளக்கம்

பூஜை மற்றும் நைவேத்தியம்

அலங்காரம் முடிந்ததும் அஷ்டலட்சுமிகளும் கலசத்தில் எழுந்தருளி குடும்பத்திற்கு அருள் வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு மந்திரங்கள் மற்றும் ஸ்லோகங்களைச் சொல்லி வழிபடலாம். வளையல், ரவிக்கைத் துணி, பழங்கள், இனிப்பு, மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு போன்ற மங்கலப் பொருட்களை அம்மனுக்கு சமர்ப்பித்து, பின்னர் சுமங்கலி பெண்களுக்கு வழங்குவது வழக்கமாக உள்ளது.

மஞ்சள் கயிறு அணியும் முறை

வரலட்சுமி பூஜையில் ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் நூலுக்கும் சிறப்பு இடம் உள்ளது. அதை அம்மனின் பாதத்தில் வைத்து வழிபட்ட பின்னர், குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப கையிலோ கழுத்திலோ அணிந்து கொள்வார்கள். தொடர்ந்து வரலட்சுமி விரதக் கதையைப் படித்து அல்லது கேட்டு, அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் உள்ளிட்ட நைவேத்தியங்களைப் படைத்து தீபாராதனை செய்யலாம். பூஜை நிறைவடைந்ததும் பிரசாதத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு விரதத்தை முடிப்பது வழக்கமாகும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us