Varalakshmi Vratam: ஆகஸ்ட் 8ல் வரலட்சுமி நோன்பு.. வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
வரலட்சுமி விரதம் ஆடி மாத பௌர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமை கொண்டாடப்படும் முக்கியமான விரதம். சுமங்கலிகள் தங்கள் கணவன், குடும்ப நலனுக்காகவும், திருமணமாகாத பெண்கள் திருமணத்தடை நீங்கவும் இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். வீட்டில் எளிமையாக கலசம் அலங்கரித்து, பூஜை செய்யும் முறைகள் பற்றிக் காணலாம்.

ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம், செல்வ வளம், கல்வி வளர்ச்சி, நல்ல இல்வாழ்க்கை ஆகியவை வேண்டும் என கடவுளை வேண்டாத நாளே இருக்காது. அதற்கேற்ப ஒவ்வொரு மதத்திலும் கடவுள் வழிபாடு, விரத முறைகள், பரிகாரங்கள் என பலவகையான தீர்வுகளும் சொல்லப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் மகாவிஷ்ணுவின் துணைவியான மகாலட்சுமி வரங்களை அள்ளித் தருபவர் என்பதால் அவரை வீட்டிற்கு வரவேற்று வழிபடும் நாளாக வரலட்சுமி விரத நாள் (Varalakshmi Nombu ) கொண்டாடப்படுகிறது. ஆடி மாத பௌர்ணமிக்கு (Aadi Pournami) முந்தைய வெள்ளிக்கிழமை இந்த விரதமானது கடைபிடிக்கப்படுகிறது. சுமங்கலிப் பெண்கள் இந்நாளில் தங்கள் கணவன் நல்ல உடல் ஆரோக்கியத்தோடும், வீடு செல்வ வளத்தோடும் இருக்கவும், தங்களுடைய தாலி பாக்கியம் நிலைக்கவும் உண்ணா நோன்பு இருந்து வழிபாடு செய்கிறார்கள். அதனைப் பற்றி நாம் காணலாம்.
வரலட்சுமி நோன்பு எப்போது?
இந்த வரலட்சுமி விரதத்தை திருமணம் ஆகாத பெண்களும் கடைபிடிக்கலாம். இதனால் அவர்களது வாழ்வில் திருமண தடை என்பது இருக்காது. மேலும் சுபமான இல்வாழ்க்கை அமையும் என ஐதீகமாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி என்பது பற்றி காணலாம்.
வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
வரலட்சுமி நோன்பு கடைபிடிக்கும் நாளில் திருமணமான பெண்களும் சரி, கன்னிப் பெண்களும் சரி, அதிகாலையில் எழுந்து புனித நீராடி சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும். பின்னர் வீட்டு வாசலில் மாக்கோலம் இட்டு விளக்கேற்றி மகாலட்சுமி வாசலில் இருந்து அழைத்து வருவதாக வழிபட வேண்டும்.
Also Read: வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
வீட்டின் பூஜையறையில் மகாலட்சுமியை நினைத்து கலசத்தை அலங்காரம் செய்ய வேண்டும். ஒரு செம்பில் நீர் நிறைத்து அதில் தேங்காயை கும்பம் போல் வைக்க வேண்டும். இந்த கும்பத்தை மனைப்பலகையில் வைத்து தேங்காயில் அம்மனின் முகம் கிரீடம் மற்றும் ஆடை அணிகலன்கள் அணிவித்து மஞ்சள் குங்குமம் வைக்க வேண்டும். பின்னர் பூச்சூடி அழகுப்படுத்த வேண்டும்.
மகாலட்சுமியே அந்த கலசத்தில் எழுந்தருளியதாக நினைத்துக் கொள்ள வேண்டும். இதனையடுத்து வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று கொண்டே வெளியில் கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமி வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். பின்னர் வீட்டிற்குள் வந்த மகாலட்சுமி பூஜை நடைபெறும் இடத்தில் அமர செய்வதாக வழிபாடை மேற்கொள்ள வேண்டும். இப்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்து விட்டதாக நினைத்து மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும்.
Also Read:
வழிபாட்டு முறைகள்
நெய் ஊற்றிய பஞ்சமுக விளக்கை ஏற்றி வணங்க வேண்டும். இந்த வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், சர்க்கரை பொங்கல், சுண்டல் போன்ற பொருட்களை படைக்க வேண்டும். மகாலட்சுமிக்குரிய பாடல்கள், மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். இந்த நிகழ்வில் நோன்பு கயிறை சாற்றி பூக்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். எதுவும் தெரியாதவர்கள் மகாலட்சுமியை மனதார வேண்டிக் கொண்டு வழிபட்டால் போதும்.
இந்த பூஜையில் வைக்க வேண்டிய மிக முக்கியமான பொருளான நோன்பு கயிறை மஞ்சள் குங்குமம் இட்டு மலர்களோடு சேர்த்து கழுத்தில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலி பெண்களாக இருந்தால் தாலி கயிறு வைத்து பூஜை செய்து அதனை அணிவித்துக் கொள்ளலாம்,
ஒருவேளை அம்மனின் முகம் வைத்து வழிபடுவதற்கு வசதி இல்லாதவர்கள் சொம்பில் கலசம் வைத்து அதில் மஞ்சள் குங்குமம் திலகம் இட்டு அதனை மகாலட்சுமியாக நினைத்தும் வழிபடலாம். இதுவும் இல்லை என்றால் வீட்டில் மகாலட்சுமியின் படம் இருந்தால் அதனை வைத்து வழிபடலாம். எதுவும் இல்லை என்றால் ஒரு அகல் விளக்கு தீபம் ஏற்றி வைத்து அதனை மகாலட்சுமியாக பாவிக்கலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின்படி கொடுக்கப்பட்டுள்ள இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)