ஆடி இரண்டாம் வெள்ளி.. விரதம் மற்றும் வீட்டில் வழிபாடு செய்வது எப்படி?
ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் செல்வ வளர்ச்சி, கல்வியில் சிறப்பு, தடை நீங்கும் போன்ற பலன்களை இந்த விரதம் அளிக்கும். அங்காள பரமேஸ்வரி, காமாட்சி அம்மன், மகாலட்சுமி ஆகியோரை வழிபடலாம். விரதம் இருக்கும் முறை, பூஜை செய்யும் முறை பற்றிக் காணலாம்.

ஆடி மாதம் என்பது அம்மனுக்கு உகந்தது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மக்களிடையே ஆடி மாதம் பீடை மாதம் என்பதால் எந்தவித சுப காரியங்களும் செய்யக்கூடாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் ஆடி மாதம் ஆன்மிக மாதம் என்பதால் இந்த காலக்கட்டத்தில் அம்மன் அருளால் நாம் செய்யும் அனைத்தும் நிச்சயம் மிகப்பெரிய பலன்களை தரும் என நம்பப்படுகிறது. அந்த வகையில் ஆடி மாதம் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்கள் விசேஷ வழிபாட்டிற்கு உகந்ததாகும். அப்படியான நிலையில் 2025, ஜூலை 25ம் தேதி ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமையாகும். இந்த நாள் அங்காள அம்மனுக்கு உகந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் காமாட்சியம்மனையும் வழிபடலாம். ஒருவேளை உங்களுக்கு செல்வ வளம் பெருக வேண்டும் என விரும்பினால் மகாலட்சுமி சம்பந்தப்பட்ட பொருட்களை இந்நாளில் வைத்து வழிபடலாம்.
ஆடி இரண்டாம் வெள்ளி விரதத்தின் பலன்கள்
காளிதேவியின் அம்சமாக கருதப்படும் இந்த அம்மனை இந்நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டால் வாழ்க்கையில் எதையும் எதிர்கொள்ளும் தைரியமும், வீரமும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. அதேசமயம் புத்திக்கூர்மை அதிகரித்து கல்வியில் சிறந்து விளங்குவோம் எனவும் நம்பப்படுகிறது. மேலும் யார் ஒருவருக்கு ஜாதகத்தில் சனி பகவான், சுக்கிர சேர்க்கையால் ஏற்படும் தீமைகள் அனைத்தும் விலகும். காதல், திருமண தடை போன்றவற்றில் நல்ல செய்திகள் வரும். வாழ்க்கையில் தவறான சகவாசத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அமையும். திருமணமானவர்களாக இருந்தால் கணவன், மனைவி வாழ்க்கையில் மிகப்பெரிய ஒற்றுமை மேலோங்கும். குழந்தை பேறு தொடர்பான நல்ல தகவல்கள் கிடைக்கும்.
Also Read: பலன்களை அள்ளித்தரும் ஆடி வெள்ளிக்கிழமை விரதம்.. இருப்பது எப்படி?
விரதம் இருப்பது எப்படி?
ஆடி மாத 2ம் வெள்ளிக்கிழமை நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். சுத்தமான ஆடை அணிந்து பூஜையறையில் விளக்கேற்றி வழிபட்டு விரதத்தை தொடங்கலாம். உங்களால் முடியும் என்றால் 9 மணி நேரம் விரதம் கடைபிடிக்கலாம். உடல்நல பிரச்னைகள் அல்லது வேறு காரணங்கள் இருந்தால் பால், பழம் சாப்பிட்டு விரதம் தொடரலாம். மாலை வேளையில் ஒரு மனைப்பலகை எடுத்து அதில் அங்காளம்மன் அல்லது காமாட்சி புகைப்படத்தை வைத்து அதனை பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.
Also Read: Aadi Friday: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
பின்னர் உதிரிப்பூக்கள் மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். அப்போது அம்மனுக்குரிய மந்திரங்கள், பக்தி பாடல்களைப் பாடலாம். இப்போது நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல், பாயாசம், வெள்ளை இனிப்புகள் அல்லது சர்க்கரை கலந்த பால் என எதையாவது உங்களால் முடிந்ததை படைக்கலாம். பின்னர் பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம். தொடர்ந்து அருகில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு அனைத்து விதமான பலன்களையும் பெறுங்கள்.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)