Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadi Pournami: 2025 ஆடி பௌர்ணமி எப்போது? – அதன் சிறப்புகள் இதோ!

2025 ஆம் ஆண்டு ஆடிப் பௌர்ணமி ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்த நாள் அம்பாள், சிவபெருமான், மற்றும் ஹயக்ரீவர் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் செல்வம், நலம், மகிழ்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Aadi Pournami: 2025 ஆடி பௌர்ணமி எப்போது? – அதன் சிறப்புகள் இதோ!
ஆடி பௌர்ணமி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Aug 2025 17:50 PM

ஆடி மாதம் வந்துவிட்டாலே ஆன்மீக அன்பர்களுக்கு மிகவும் கொண்டாட்டமான காலமாக மாறிவிடும். அந்த மாதத்தின் 30 நாட்களும் ஏதேனும் ஒரு ஆன்மீக ரீதியான விசேஷ தினம் இருந்து கொண்டே இருக்கும். ஆடி மாத பிறப்பு தொடங்கி அந்த மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமை, ஆடி தபசு, ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடி கிருத்திகை உள்ளிட்ட பல பண்டிகைகள் நம்மை சுற்றி எப்போதும் தெய்வீக உணர்வு இருப்பதாக உணர வைக்கும் அளவுக்கு இருக்கும். இப்படியான ஆடி மாதத்தில் 2025 ஆம் ஆண்டு பௌர்ணமி தினமானது ஆகஸ்ட் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. பொதுவாக அமாவாசை முன்னோர்கள் வழிபாடு என்றால், பௌர்ணமி தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக பார்க்கப்படுகிறது.

பொதுவாக பௌர்ணமியில் அம்பிகையே வழிபட்டால் பல்வேறு விதமான பலன்கள் நமக்கு கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது. அப்படியான நிலையில் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமியில் விளக்கேற்றி அம்பாளை வழிபட்டால் செல்வ வளமும் உடல் நலமும் மகிழ்ச்சியும் பெற்று வாழ்வோம் என்பது ஐதீகமாக உள்ளது. இந்நாளில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ள போட்டு விளக்கு பூஜை அன்னதானம் ஆகியவையும் நடைபெறுகிறது.

Also Read:  தென் மாவட்டத்தில் சித்திரகுப்தன் கோயில் எங்குள்ளது தெரியுமா?

சிவபெருமானுக்கு திரட்டுபால் அபிஷேகம்

ஆடி பௌர்ணமி தினத்தில் தான் சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்யப்பட்டு கருப்பு பட்டாடையுடன் 100 முத்துக்கள் கோர்த்த மணிமாலை கரு ஊமத்தம் பூ மாலை ஆகியவை அணிவிக்கப்படும் பின்னர் மூங்கில் அரிசி பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பிரச்சனைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அதேபோல் ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி ஆனது உத்திராட நட்சத்திரத்தில் வரும் அந்நாளில் திருமாலை வழிபடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இன்றைய நாளில் விளக்கேற்றி நாம் வழிபட்டால் குடும்பத்தின் வளர்ச்சி மட்டுமல்லாது சம்பந்தப்பட்ட நபருக்கும் வாழ்க்கையில் மிகப்பெரிய முயற்சிகளும் கைக்கூடும் என்பதை ஐதீகமாக உள்ளது.

அதேபோல் கல்வியில் சிறந்து விளங்க ஆடி பௌர்ணமி தினத்தில் ஹயக்ரீவர் வழிபாடு செய்வது சுபமானது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்நாளில் பெண்கள் முடிந்தவர்கள் இரண்டு வேளையும் உணவு சாப்பிடாமலும், முடியாதவர்கள் பால் அல்லது பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். பௌர்ணமி நாளில் விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

Also Read: Aadi Tuesday: பலன்களை அள்ளித்தரும் ஆடி செவ்வாய்.. விரதம் இருப்பது எப்படி?

காலை மற்றும் மாலை வேளையில் வீட்டில் அம்மன் படத்திற்கு முன் விளக்கேற்றி வழிபட வேண்டும். ஏதேனும் ஒருவேளை உங்களால் முடிந்த அருகிலுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். பௌர்ணமி நாளில் சந்திர பகவானை வழிபடுவது ஜோதிட ரீதியாக அனுகூலத்தை தரும் என நம்பப்படுகிறது. மேலும் நீங்கள் வசிக்கும் இடத்தின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு மலைக் கோயிலில் கிரிவலம் செல்லலாம் அல்லது அம்மன் கோயிலில் 108 முறை வலம் வரலாம்.

(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)