Chitra Pournami 2025: தென் மாவட்டத்தில் சித்திரகுப்தன் கோயில் எங்குள்ளது தெரியுமா?
தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் மட்டுமல்லாமல் சித்திரகுப்தனுக்கு தேனி மாவட்டம் கோடாங்கிப்பட்டியிலும் கோயில் அமைந்துள்ளது. இந்த சித்திரகுப்தர் கோயிலின் வரலாறு, தரிசன நேரம் மற்றும் முக்கியத்துவம் பற்றி காணலாம். சித்திரம் என்றால் ஆச்சரியம் எனவும், குப்தம் என்றால் ரகசியம் என்றும் பொருள்படும் என்பதால் இவர் சித்திரகுப்தன் என அழைக்கப்படுகிறார்.

பொதுவாகவே வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திதிகள் ஒவ்வொரு மாதங்களிலும் ஒரு முக்கிய விசேஷ விதமாக இந்து மதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் மாதந்தோறும் வரும் முழு நிலவு நாளான பௌர்ணமி சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி என்ற பெயரில் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்நாள் மிகவும் புனிதமான நாளாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த சித்ரா பௌர்ணமி நாளில் தான் எமலோகத்தில் மனிதர்களின் நன்மை தீமைகளை வரவு வைக்கும் பணியை மேற்கொள்ளும் சித்திரகுப்தன் தோன்றியதாக சாஸ்திரங்கள் சொல்கிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தனுக்கு என தனியாக கோயிலில் உள்ளது. இதனையடுத்து தேனி மாவட்டத்தில் உள்ள கோடாங்கி பட்டியில் தான் சித்திரபுத்திரர் எனும் பெயரில் சித்திரகுப்தன் கோயில் அமைந்துள்ளது. அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.
இந்த கோயில் எங்கு உள்ளது?
இந்த கோயிலானது காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலையில் 4:00 மணி முதல் இரவு 6 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இக்கோயிலானது மதுரையில் இருந்து கொச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேனியில் இருந்து போடிநாயக்கனூர் செல்லும் வழியில் ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
கோயில் உருவான வரலாறு
பொதுவாக சிவபெருமான் ஒரு முறை இந்த உலகில் வாழும் உயிரினங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் குறித்து வைக்க எண்ணினார். அந்தப் பணியை யாரிடம் ஒப்படைப்பது என பார்வதி தேவியிடம் கேட்டார். அதற்கு அவர் ஒரு சித்திரம் வரைய இருவரும் சேர்ந்து அதற்கு உயிர் கொடுக்கின்றனர். அவர்தான் சித்திர புத்திரர். அதன் பின் தேவ லோகத்தின் தலைவனான இந்திரன் மற்றும் அவரது மனைவி இந்திராணியால் வளர்க்கப்பட்ட சித்திரபுத்திரர் வசம் சிவபெருமான் ஜீவராசிகளின் செயல்கள் குறித்த கணக்குகளை எழுதி பராமரிக்கும் பணியை ஒப்படைக்கிறார் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
சித்திரம் என்றால் ஆச்சரியம் என்றும், குப்தம் என்றால் ரகசியம் என்றும் பொருள் படும். அதனால்தான் சித்திர புத்திரர் பின்னாளில் சித்திரகுப்தர் என அழைக்கப்பட்டு வருகிறார். கோடாங்கி பட்டி பகுதியில் வசித்து வந்த ஒருவரின் கனவில் சித்ரகுப்தன் தோன்றி தனக்கு இந்த ஊரில் ஒரு கோயில் ஒன்றை கட்டி வழிபடுமாறு கூறினார். அதனால் இங்கு இக்கோயில் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வழிபட்டால் என்ன சிறப்பு
சித்திரகுப்தர் பிறந்த சித்ரா பௌர்ணமி அன்று எண்ணெய் தேய்த்து குளித்தால் நமது பாவங்கள் குறையுமென்பது நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயிலில் இவரது மனைவி பிரபாவதிக்கும் தனி சன்னதி உள்ளது சிறப்பான ஒன்றாகும். மேலும் பசுவின் கருப்பையில் இருந்து பிறந்ததால் அந்த நாளில் பசும்பால் பசுந்தயிர் பசுமை ஆகியவற்றை கண்டிப்பாக வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடாது. மேலும் வாசலிலும் பூஜை அறையிலும் கோலமிட்டு சித்ரகுப்தனின் ஸ்லோகம் சொல்லி வழிபட்டால் அவர் நீண்ட ஆயுளுடன் நம்மை வாழ ஆசீர்வதிப்பார்.
இந்த சித்திர புத்திரர் கோயிலில் வழிபட்டால் கேது தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கையாகும். நவகிரகங்களில் கேது பகவானுக்கு சித்திரகுப்தன் தான் அதிபதியாகும். மேலும் சித்ரா பௌர்ணமி நாளில் பெண்கள் விரதம் இருந்து உப்பில்லாத உணவு உண்டால் நீண்ட ஆயுள் பெறலாம் என்பது ஐதீகமாக உள்ளது.
(சித்திர புத்திரன் கோயில் பற்றிய ஆன்மிக தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எவ்விதத்திலும் பொறுப்பேற்காது)