Vana Thirupathi: திருமண வரம் அருளும் புன்னை நகர் ஸ்ரீனிவாச பெருமாள்!
Punnai Nagar Temple: தூத்துக்குடி மாவட்டத்தில், திருச்செந்தூர் அருகே அமைந்துள்ளது புன்னை நகர் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில். புன்னை மரங்கள் நிறைந்த இடத்தில் உருவான இக்கோயில், ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாளுடன் பல தெய்வ சன்னதிகளையும் கொண்டுள்ளது. திருமணத் தடைகள் நீங்கவும், நவகிரக தோஷங்கள் விலகவும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் புகழ்பெற்ற பல்வேறு வகையான வழிபாட்டு தலங்கள் உள்ளது. நாள்தோறும் உள்ளூர், வெளியூர் மக்கள் வந்து வழிபட்டு செல்லும் வழக்கமும் உள்ளது. அப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் முருகனின் இரண்டாம் படை வீடாக அமைந்திருக்கும் திருச்செந்தூருக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படி வரும் பக்தர்கள் சுற்று வட்டாரத்தில் இருக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தொடங்கி பல இடங்களுக்கும் தவறாமல் செல்கின்றனர். அப்படி பக்தர்கள் செல்லும் ஒரு கோயில் என்றால் அது புன்னை நகர் ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம். அந்த ஆலயத்தின் சிறப்புகள் பற்றி நாம் காணலாம்.
இக்கோயிலில் ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார். இக்கோயில் தினமும் காலை 7:00 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழித்தடத்தில் குரும்பூர் – நாசரேத் பாதையில் வனத்திருப்பதி என்னும் பெயரில் இந்தக் கோயிலானது அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு செல்ல குரும்பூரிலிருந்து பேருந்து சேவையும், திருநெல்வேலி திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையும் உள்ளது.
இதையும் படிங்க: இல்லற வாழ்க்கை செழிக்க அருளும் பெருமாள்.. இந்த கோயில் தெரியுமா?
கோயில் உருவான வரலாறு
புன்னைநகர் என்னும் பெயருக்கு ஏற்ப முன்பொரு காலத்தில் இந்த கோயில் இருந்த இடம் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியாக இருந்துள்ளது. இங்கு பசுக்கள் மேய்ந்த நிலையில் பெருமாளுக்கும் புன்னை மரத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. காரணம் ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டுள்ள ரங்கநாத சுவாமி கோயிலில் தல விருட்சம் இந்த புன்னை மரம் தான்.
அதேபோல் அனைத்து பெருமாள் கோவில்களிலும் நடைபெறும் பிரம்மோற்சவ 9ஆம் நாள் திருவிழாவில் புன்னை மர வாகனத்தில் தான் பெருமாள் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். எனவே தான் புன்னைவனம் நிறைந்த இந்த இடத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. முருக பக்தர் கிருபானந்த வாரியார் சுவாமிகளின் அருளாசியின்படி இந்த கோயில் கட்டப்பட்ட நிலையில் சைவ வைணவ பேதம் இன்றி பக்தர்கள் வழிபடும் பொருட்டு அமைக்கப்பட்டுள்ளது.
அதனால் தான் பெருமாளும் சிவனும் தனித்தனி சன்னதியில் அருளபாலிப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பெருமாளை நாம் வணங்கினால் அவரின் ஆசியால் வாழ்க்கையில் பரிபூரண பலன்கள் கிடைத்து முன்னேறியவர்கள் ஏராளம் என நம்பப்படுகிறது.
இதையும் படிங்க: பெருமாள் தோளில் கைபோட்டபடி இருக்கும் லட்சுமி.. இந்த கோயில் தெரியுமா?
கோயிலின் சிறப்புகள்
இந்தக் கோயில் சுமார் 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் ராஜகோபுரம், தொடர்ந்து உற்சவ மண்டபம், பிரகார மண்டபம், மகா மண்டபம், அர்த்தமண்டபம், கர்பக்கிரகம் என அமைக்கப்பட்டுள்ளது. உள்ளே நுழைந்தவுடன் ராஜ கணபதி தரிசனம் காணலாம். அதன்பின்னர் மகா மண்டபத்தில் சக்கரத்தாழ்வாரையும், யோக நரசிம்மரையும் தரிசிக்கலாம்.
கர்ப்ப கிரகத்தில் கிழக்குப் பார்த்து பெருமாள் நின்ற கோலத்தில் திருப்பதியில் அருள்வதை போல காட்சி கொடுக்கிறார். அர்த்தமண்டபத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சியளிக்கிறார்கள். அங்கிருக்கும் கன்னி மூலையில் பத்மாவதி தாயார் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் பெருமாளின் பத்து அவதாரங்களும் சிலையாக வடிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தெய்வங்கள் இருக்குமிடம்
மேலும் வடபழனி முருகன், கிருபானந்த வாரியார், ராஜகோபாலர், வள்ளி தெய்வானையுடன் தணிகை முருகன், ஆண்டாள், தட்சிணாமூர்த்தி, குருவாயூரப்பன், விஷ்ணு துர்க்கை, பிரம்மன், ஆஞ்சநேயர், கருடாழ்வார், ஆதிநாராயணர், சிவனைந்த பெருமாள், சிவகாமி, பிரம்மசக்தி, பேச்சி, சப்பாணி முத்து, முத்துப் பிள்ளையம்மன், நட்டாணி பலவேசம், சுடலை, முண்டன், இருளப்பர், லாடகுரு சந்நியாசி, பலவேசம் என பல தெய்வங்களும் தனித்தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர்.
இந்த கோயிலில் மூலவருக்கு வெள்ளிக்கிழமை நாட்களிலும், உற்சவருக்கு புதன்கிழமை தோறும் திருமஞ்சனம் நடைபெறுகிறது இதில் கலந்துகொண்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம் ஆகும் அதேபோல் வியாழக்கிழமைகளில் நடைபெறும் ஏகாதந்த சேவையை பார்த்தால் நவகிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது இந்த கோயிலுக்கு மிக அருகில் நாக கன்னியம்மன் கோயில் உள்ளது திருமண தடை உள்ளவர்கள் இங்கு வந்து வேண்டினால் விரைவில் நீங்கும் என்பது தீராத நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது அதைப்போல் வாதம் முடக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கிருக்கும் வாதம் முடக்கி மரத்தின் அருகே தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவில் பாதிப்பு குணமாகும் என்பது நம்பிக்கை ஆகும் அனைத்து விசேஷ தினங்களும் வெகு விமரிசியாக கொண்டாடப்படுகிறது அதே சமயம் தினமும் கிழக்கில் உதிக்கும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பெருமாளின் வலது கையில் பட்டு அவரிடம் ஆசி பெறுவது போல காட்சியை காண்பது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும் வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஒருமுறை கண்டிப்பாக இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை)