பிறந்தது புரட்டாசி மாதம்.. இந்த ஒரு மாதம் என்னென்ன செய்யக்கூடாது?
புரட்டாசி மாதம், தமிழ் மாதங்களில் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மாதமாகக் கருதப்படுகிறது. பெருமாளுக்குரிய இம்மாதத்தில், சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. இந்த மாதம் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்த மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பதால், ராகு, கேது, சனி தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

புரட்டாசி மாத வழிபாடு
பொதுவாக உலக அளவில் பல்வேறு மதங்கள் இருக்கும் நிலையில் ஓராண்டின் 12 மாதங்களில் ஏதேனும் குறிப்பிட்ட காலகட்டம் ஒவ்வொரு மதத்தினருக்கும் விசேஷமான நாட்களாக இருக்கும். அதே சமயம் இந்து மதத்தில் தமிழ் மாதங்கள் கணக்கில் கொள்ளப்பட்டு விசேஷ நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. திதி மற்றும் கிழமைகள் அடிப்படையில் இந்த சிறப்பு தினங்கள் பின்பற்றப்படுகிறது. அந்தப் பகுதியில் 12 தமிழ் மாதங்களில் ஆடி, புரட்டாசி மற்றும் மார்கழி ஆகிய மூன்று மாதங்கள் ஆன்மிக மாதங்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதாவது இந்த மூன்று மாதங்கள் முழுவதும் முழுக்க முழுக்க இறை வழிபாட்டுக்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதனால் சுப காரியங்கள், வீட்டின் இன்னபிற சுப நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்படுகிறது. அந்த வகையில் புரட்டாசி மாதம் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது.
எப்படி ஆடி மாதம் பெண் தெய்வங்களுக்குரிய மாதம், மார்கழி மாதம் ஆண்டாளுக்குரிய மாதமாக அறியப்படுகிறதோ, அதேபோல் புரட்டாசி மாதம் என்பது பெருமாளுக்குரிய மாதமாகும். இம்மாதம் முழுவதும் அனைத்து விதமான பெருமாள் தலங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக புரட்டாசி மாத சனிக்கிழமைகள் இன்னும் விசேஷமானதாக பார்க்கப்படுகின்றது. அன்றைய தினம் பெருமாளை வழிபாட்டு கிடைக்கும் பலன்களுக்கு ஈடே இல்லை என்பதும் ஐதீகமாக உள்ளது.
இதையும் படிங்க: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. கவனமுடன் இருக்க வேண்டிய 3 ராசிகள்
புரட்டாசி மாதம் என்னென்ன செய்யக்கூடாது?
பொதுவாக புரட்டாசி மாதத்தில் திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுப காரியங்கள் மேற்கொள்ளக்கூடாது என சொல்வார்கள். அதே சமயம் வளைகாப்பு, முடி காணிக்கை செலுத்தி காது குத்துதல், அறுபதாம் கல்யாணம் போன்ற காரியங்களை செய்யலாம். இந்த மாதத்தில் வாஸ்து நாள் கிடையாது என்பதால் புதிதாக நிலம் வாங்குவது, வீடு கட்ட வாஸ்து பூஜை செய்வது, கட்டிய வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்வது, வாடகை வீட்டுக்கு குடியேறுவது போன்றவை செய்ய கூடாதவையாக பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த காலகட்டம் அசைவ உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும் என சொல்லப்படுகிறது. இது இறை வழிபாட்டிற்கு மட்டுமல்லாமல் உடல் ரீதியாகவும் பலனை கொடுக்கும் என நம்பப்படுகிறது. காரணம் புரட்டாசி மாதம் பருவ மழைக்கான தொடக்க நாட்களாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து மழை மற்றும் குளிரின் தாக்கம் இருக்கும் என்பதால் அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: செப்டம்பர் 21ல் சூரிய கிரகணம்.. இந்த 4 ராசிக்கு செம லக்!
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் இருந்து சஞ்சாரம் செய்வார். அதாவது தென்திசை நோக்கி தனது பயணத்தை தொடங்குவார். புதனால் ஆளக்கூடிய கன்னி ராசியில் சூரியன் சஞ்சரித்து, புதன் பகவானின் அதிபதியான மகாவிஷ்ணுவை வழிபடுவதால் இந்த மாதத்தில் நாம் இறைவழிபாடு மேற்கொண்டால் ராகு, கேது மற்றும் சனி போன்ற கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்.
மேலும் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமைகளையும் பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். வீட்டில் பெருமாள் படங்களுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட வேண்டும். இந்த மாதத்தில் நாம் வழிபடாமல் இருக்கக்கூடாது. மேலும் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை மஹாளய அமாவாசையாக கடைபிடிக்கப்படுகிறது. இன்றைய நாளில் முன்னோர்களுக்கு கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேபோல் காக்கைக்கு உணவளித்து விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும்.