பக்தனை தேடி வந்த பெருமாள்.. இந்த காரைக்குடி கோயில் தெரியுமா?

சிவகங்கை அரியக்குடி திருவேங்கடமுடையான் பெருமாள் கோயில் 'தென் திருப்பதி' எனப் போற்றப்படுகிறது. சேவுகன் செட்டியார் கனவில் பெருமாள் தோன்றி, இங்கேயே குடிகொண்டது இதன் வரலாறாக பார்க்கப்படுகிறது. திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி, வியாபார செழிப்புக்கான வேண்டுதல்கள் இக்கோயிலில் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.

பக்தனை தேடி வந்த பெருமாள்.. இந்த காரைக்குடி கோயில் தெரியுமா?

திருவேங்கடமுடையான் பெருமாள்

Updated On: 

13 Oct 2025 14:53 PM

 IST

அநீதி எங்கெல்லாம் தலை தூக்குகிறதோ அங்கெல்லாம் தர்மத்தை நிலை நாட்டும் பொருட்டு விஷ்ணு பகவான் தசாவதாரங்கள் எடுத்து அவதரிப்பார் என்பது புராண வரலாறு. அப்படியான விஷ்ணு பகவான் நாராயணர், பெருமாள் என பல பெயர்களில் கோயில்களில் காட்சிக் கொடுக்கிறார். புரட்டாசி மாதம் பெருமாளுக்குரிய காலமாக பார்க்கப்படுகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பிரம்மோற்சவம் போன்ற பல நிகழ்வுகள் நடைபெறும். அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் அரியக்குடி அருகே காட்சி கொடுத்து வரும் திருவேங்கடமுடையான் பெருமாள் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்தக் கோயிலானது காரைக்குடி தாலுகாவில் அமைந்துள்ளது.

இக்கோயில் காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையும், பின்னர் சிறிது இடைவெளிக்குப் பிறகு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். இந்தக் கோயில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் தான் விநாயகரின் பிள்ளையார்பட்டி தலம் அமைந்துள்ளது.

Also Read:  வாழ்க்கை செழிக்கும்.. இந்த லட்சுமி குபேரர் கோயில் தெரியுமா?

கோயில் உருவான வரலாறு

இந்த கோயில் அமைந்திருக்கும் பகுதியில் ஒரு காலத்தில் வசித்து வந்த சேவுகன் செட்டியார் என்பவர் திருவேங்கடமுடையான பெருமாளின் தீவிர பக்தராக இருந்தார். அவரை காண முடியாத பக்தர்கள் சுவாமிக்கு செலுத்த வேண்டிய காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் அந்த உண்டியலை இங்கிருந்து நடந்தே திருப்பதிக்கு சென்று சேவுகன் செட்டியார் செலுத்தி வந்தார்.

அப்படியாக ஒருமுறை அவர் திருப்பதி மலை ஏறி செல்லும்போது மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். அவரின் பக்தியைக் கண்டு மெச்சிய எம்பெருமான் சேவுகன் செட்டியார் முன்பு தோன்றி காட்சி கொடுத்தார். மேலும் தள்ளாத வயதில் நீ இந்த மலையேறி வர வேண்டாம். நான் பக்தனான நீ இருக்கும் இடத்திற்கு வருகிறேன் எனக் கூறி மறைந்தார்.

ஊர் திரும்பியதும் ஒருநாள் மீண்டும் சேவுகன் செட்டியார் கனவில் தோன்றிய பெருமாள் நீ மேற்கு பக்கமாக சென்றால் நான் இருக்கும் இடம் தெரியும் என கூறினார். அப்படியாக மறுநாள் சேவுகன்செட்டியார் நடந்து சென்ற இடத்தில் ஒரு கோயில் இருந்தது. அங்கு துளசி செடியும்,  தேங்காய் காளாஞ்சியும் காணப்பட்டது. இவை இரண்டும் கிடைத்த இடத்தில் தோண்டும் போது தற்போதுள்ள மூலவர் சிலை நிலத்தின் அடியிலிருந்து கிடைத்தது என சொல்லப்படுகிறது.

திருப்பதியை போன்று பெருமாளை தனியாக நிறுவ விரும்பாத சேவுகன் செட்டியார்,  கோயிலில் அலர்மேல்மங்கை தாயார் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பிரதிஷ்டை செய்தார்.

கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலில் திருமண தடை, குழந்தை பாக்கியம், கல்வி மற்றும் வியாபாரத்தில் சிறந்து விளங்க மக்கள் பிரார்த்தனை மேற்கொள்கிறார்கள். மேலும் கோயிலில் உள்ள கருடாழ்வார் இரு புறமும் சிங்கங்களுடன் காட்சியளிப்பது அற்புதமான வெளிப்பாடாக உள்ளது. அதே சமயம் ஒவ்வொரு மாதம் சுவாதி நட்சத்திரத்தின் போது கருடாழ்வாருக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

Also Read: சிவனுக்குரிய வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை.. இந்த பெருமாள் கோயில் தெரியுமா?

ராமானுஜர் வாழ்ந்த காலகட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து உற்சவ விக்கிரகங்கள் அனைத்து கோயில்களுக்கும் கொடுக்கப்படுவதை அறிந்த சேவுகன் செட்டியார் தனது முயற்சியால் திருவேங்கடமுடையான் சிலையை இந்த தலத்திற்கு கொண்டு வந்தார் என சொல்லப்படுகிறது. அன்று முதல் அரியக்குடி தென்திருப்பதி எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த கோயிலில் சித்திரை மாத பிறப்பன்று திருமஞ்சனம், சித்ரா பௌர்ணமி நாளில் சுவாமி வீதி உலா, வைகாசி மாத பிரம்மோற்சவம், ஆடிப்பூர உற்சவம், கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம் உள்ளிட்ட பல விழாக்கள் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. வாய்ப்பு இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு ஒரு முறை சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)