Navratri: நவராத்திரி இரண்டாம் நாள்.. இன்று இப்படி வழிபட்டால் சிறப்பு!
Navratri 2025 2nd Day: நவராத்திரியின் இரண்டாம் நாள் பிரம்மச்சாரிணி தேவியை வழிபடுவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தவத்தின் தெய்வமாகக் கருதப்படும் பிரம்மச்சாரிணி, ஞானம், மனவலிமை மற்றும் ஒழுக்கத்தை அளிப்பதாக நம்பப்படுகிறது. இந்நாளில் செம்பருத்தி, குங்குமம் மற்றும் வெள்ளை இனிப்புகளை படைத்து வழிபட வேண்டும். அப்படியான பிரம்மச்சாரிணி அன்னையின் கதையையும், வழிபாட்டு முறையையும் பற்றிக் காணலாம்.

புரட்டாசி மாதம் வந்து விட்டாலே இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி விடும். குறிப்பாக 10 நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பொதுவான திருவிழாவாகும். 2025 ஆம் ஆண்டுக்கான நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இப்படியான நிலையில் நவராத்திரி பண்டிகையின் 9 நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்காகவும், இரண்டாவது 3 நாட்கள் லட்சுமிக்காகவும், 3வது மூன்று நாட்கள் சரஸ்வதிக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஒவ்வொரு நாளும் விதவிதமான வழிபாடுகளும் நடைபெறும். அந்த வகையில் இரண்டாம் நாளான இன்று என்ன மாதிரியான வழிபாட்டில் ஈடுபட வேண்டும் என்பது பற்றிக் காணலாம்.
இரண்டாம் நாள் சிறப்பு
அதன்படி பக்தர்கள் இந்த நாளில் துர்கா தேவியின் இரண்டாவது வடிவமான மா பிரம்மச்சாரிணியை வணங்குகிறார்கள். தேவி யோகினி மற்றும் தேவி தபஸ்வினி என்றும் மாதா பிரம்மச்சாரிணி அழைக்கப்படுகிறார். இவர் தவத்தின் தெய்வம் என்று போற்றப்படுகிறார். பொறுமை, பக்தி மற்றும் ஆன்மீக வலிமையின் அடையாளமாக மா பிரம்மச்சாரிணி பார்க்கப்படுகிறார். அமைதியான வெள்ளைச நிற புடவையில் சித்தரிக்கப்பட்டுள்ள அவர் வலது கையில் ஜெபமாலை மற்றும் இடது கையில் கமண்டலம் வைத்து காட்சியளிக்கிறார்.
Also Read: தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!




பிரம்மச்சாரிணி அன்னையை வழிபட்டால் நமக்கு ஞானம், மன வலிமை மற்றும் ஒழுக்கம் ஆகியவை கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். அந்த அன்னை செவ்வாய் கிரகத்தை ஆட்சி செய்வதாகவும், வேதங்கள் கூறும் நிலையில் அவரது ஆசி கிடைத்தால் ஜாதகத்தில் ஏற்பட்டும் மாங்கல்யா தோஷம் போன்ற பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகமாக உள்ளது.
இந்த நாளில், பிரம்மச்சாரிணி அன்னை சிவப்பு நிறத்துடன் காட்சியளிப்பார். பூஜையின் ஒரு பகுதியாக செம்பருத்தி பூக்கள், மோக்ரா, குங்குமம் மற்றும் வெள்ளை இனிப்புகள் படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: திண்டுக்கலை ஆளும் சௌந்தரராஜ பெருமாள்… இந்த கோயில் சிறப்புகள் தெரியுமா?
மா பிரம்மச்சாரிணி கதை
புராணங்களின்படி இமயமலை மன்னனின் மகளாக பார்வதி தேவி பிரம்மச்சாரிணியாகப் பிறந்தார். சிவபெருமானை துணைவியாக அடைய ஆவல் கொண்டு, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடுமையான தவம் மேற்கொண்டார். அதன்படி முதல் ஆயிரம் ஆண்டுகள் பிரம்மச்சாரிணி பழங்கள் மற்றும் பூக்களை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தாள். அடுத்த ஆயிரம் ஆண்டுகள் மூலிகைகள், வில்வ இலைகள் என உண்டார். இறுதியாக தண்ணீர், உணவையும் துறந்த அவளின் தவ வலிமைக் கண்டு தேவர்கள் மெய்சிலிர்த்து போயினர். இறுதியாக அவளுக்கு அபர்ணா என பெயர் சூட்டி சிவபெருமானுடன் சேர வழிவகை செய்தனர்.
வழிபாடு செய்யும் முறை
நவராத்திரியின் இரண்டாம் நாளான இன்று விரதம் இருப்பவர்களும் சரி, இல்லாதவர்களும் சரி துர்கா தேவியின் சிலைக்கு முன் சுத்தமான பசு நெய் நிரப்பப்பட்ட ஒரு தீபத்தை ஏற்றி வைக்க வேண்டும். துர்கைக்கான மந்திரத்தை உச்சரித்து மேலே சொன்ன பொருட்களை படைத்து தீப, தூபம் காட்டி வழிபட வேண்டும். மாலை வழிபாடு முடிந்ததும் விரதம் முடித்து கொள்ளலாம்.