மகர விளக்கு பூஜை நிறைவு…சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு…மீண்டும் பிப்.12-இல் நடை திறப்பு!
Sabarimala Ayyappa Temple: கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்ட பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததையடுத்து, கோயில் நடை அடைக்கப்பட்டு அதற்கான சாவி மற்றும் எதிர்கால பூஜைகள் நடத்துவதற்கான பண பை ஆகியவை கோவில் நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் 16- ஆம் தேதி மண்டல விளக்கு பூஜையும், டிசம்பர் 30- ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் தொடங்கியது. இந்த பூஜைகளில் பங்கேற்பதற்காக தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து கோவிலுக்கு தரிசனத்திற்காக வந்து சென்றனர். அதன்படி, ஒவ்வொரு நாளும் சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவடைந்ததையொட்டி, கோவில் நடை அடைக்கப்பட்டது. அதன்படி, நேற்று செவ்வாய்க்கிழமை ( ஜனவரி 20) அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடைபெற்றது.
திருநீறு அபிஷேகம் செய்து தியான நிலையில் சுவாமி ஐயப்பன்
பின்னர் குருசாமி சிவன் குட்டி தலைமையில் 30 பேர் கொண்ட குழுவினர் திருவாபரண பேடகங்களை சுமந்து பந்தளத்துக்கு புறப்பட்டனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து, ஐயப்பன் சுவாமி விக்ரகத்தில் சபரிமலை மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி திருநீறு அபிஷேகம் செய்தார். இதன் பின்னர், சுவாமி ஐயப்பன் கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரது கையில் யோக தண்டம் கொடுக்கப்பட்டு தியான நிலையில் ஐயப்பன் அமர வைக்கப்பட்டார்.
மேலும் படிக்க: சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தமிழகம் உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!




சபரிமலை கோவில் நடை அடைப்பு
இதைத் தொடர்ந்து, காலை 6:45 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு அதற்கான சாவியை பந்தளம் மன்னர் பிரதிநிதியிடம், சபரிமலை மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரி ஒப்படைத்தார். தொடர்ந்து, பந்தளம் மன்னர் பிரதிநிதி நாராயண வர்மா 18 படிகள் வழியாக கீழே வந்து சபரிமலை நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசனிடம் சபரிமலை ஐயப்பன் கோவில் சாவி மற்றும் எதிர்காலத்தில் ஐயப்பன் கோவிலில் பூஜை நடத்துவதற்கான பண பையையும் கொடுத்தார்.
பிப்ரவரி 12- இல் மீண்டும் நடை திறப்பு
இந்த நிகழ்வுடன் சபரிமலையில் மீண்டும் ஒரு மண்டல மற்றும் மகரவிளக்கு காலம் நிறைவு பெற்றது. இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 12- ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாசி மாத பூஜைகளுக்காக மீண்டும் நரை திறக்கப்பட உள்ளது. இந்த நிகழ்வானது ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நிறைவு பெற்றவுடன் ஐயப்பன் கோவிலுக்கான சாவி பதினெட்டாம்படி வழியாக கொண்டு வரப்பட்டு நிர்வாக அதிகாரியிடம் ஒப்படைக்கப்படும்.
மேலும் படிக்க: டெல்லியில் குடியரசு தின விழா.. தேனி பழங்குடித் தம்பதியினருக்கு அழைப்பு.. ஏன் தெரியுமா?