கண் திருஷ்டியால் அவதியா? – செவ்வாய்கிழமை செய்ய வேண்டிய அனுமன் வழிபாடு
Tuesday Ritual : செவ்வாய்க்கிழமை அனுமன் பக்தி மற்றும் சில எளிய பரிகாரங்கள் மூலம் திருஷ்டியிலிருந்து விடுபடலாம் என சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கற்பூரம் ஏற்றுதல், அனுமன் வழிபாடு, உப்பு மற்றும் கடுகு பயன்பாடு, விளக்கில் கிராம்பு போடுதல் போன்றவை செவ்வாய்க்கிழமை செய்யப்படும் போது அதிக பலனளிக்கும் என சொல்லப்படுகிறது.

திருஷ்டி என்பது அனைத்து காலக்கட்டங்களிலும், அனைத்து வயதினரையும் தாக்கும் ஒரு எதிர்மறையான விளைவாக பார்க்கப்படுகிறது. இதனை பரிகாரம் மூலம் சரி செய்யலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதேசமயம் இந்து மதத்தை பொறுத்தவரை வாரத்தின் 7 நாட்களும் ஏதேனும் ஒரு கடவுளுக்கென அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில், செவ்வாய்க்கிழமை வாயு பகவான் மற்றும் அஞ்சனையின் மைந்தனான அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அனுமன் தீவிர ராம பக்தன் என்பதை தாண்டி மிகப்பெரிய விசுவாசியாவார், இந்த நாளில் அனுமனை நாம் வழிபட்டு சில பரிகாரங்களைச் செய்வதன் மூலம், ஒருவர் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் அடைவார் என்று நம்பப்படுகிறது. மேலும், சில பரிகாரங்களைச் செய்வது திருஷ்டியில் இருந்து மிகப்பெரிய பாதுகாப்பையும் அளிக்கிறது.
அப்படியாக செவ்வாய்க்கிழமை என்னென்ன பரிகாரங்களைச் செய்ய வேண்டும் என்பது பற்றிப் பார்க்கலாம். இதனைச் செய்வதன் மூலம் வீட்டிற்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வந்து திருஷ்டியிலிருந்து நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது.ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தோறும் உங்கள் வீட்டில் கற்பூரம் ஏற்றுவது மிகவும் புனிதமானது. கற்பூரம் ஏற்றுவது வீட்டிலிருந்து எதிர்மறை சக்தியை அழிக்கிறது. மேலும், கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்ட நபரின் தலையைச் சுற்றி 5 கற்பூரத் துண்டுகளை எதிர் திசைகளில் 7 முறை சுற்றுங்கள். பின்னர் அவற்றை ஒரு மண் பானையில் போட்டு பற்றவைக்கவும்.
அனுமன் வழிபாடு
செவ்வாய்க்கிழமை அன்று, துன்பங்களை நீக்கும் பகவான் அனுமனை வணங்குங்கள். அனுமனின் செந்தூரத்தை திலகமிட்டு, ஹனுமான் சாலிசா அல்லது அனுமனுக்குரிய மந்திரத்தை உச்சரியுங்கள். இதைச் செய்வது உங்களை திருஷ்டியிலிருந்து விடுவிக்கும். இந்த நாளில், கோயிலில் உள்ள அனுமானின் பெருவிரலில் இருந்து செந்தூரத்தை எடுத்து, பாதிக்கப்பட்டவரின் நெற்றியில் திலகமிட்டால் போதும். இதைச் செய்வதன் மூலம், அனுமனின் ஆசிகள் அந்த நபர் மீது என்றைக்கும் இருக்கும்.
உப்பு மற்றும் கடுகு
ஒரு கைப்பிடி உப்பு மற்றும் சிறிது கடுகு விதைகளை எடுத்து, நீங்கள் கண் திருஷ்டி நீக்க விரும்பும் நபரின் மீது 7 முறை சுற்ற வேண்டும். பின்னர் வீட்டிலிருந்து அதை வெளியில் யாரும் மிதிக்காத இடத்தில் தூக்கி எறியுங்கள். அல்லது எறியும் நெருப்பில் போட்டு விடுங்கள். இதனை மற்ற நாட்களிலும் செய்யலாம். அதேசமயம் செவ்வாய்க்கிழமை இந்த பரிகாரத்தைச் செய்வது மிகப்பெரிய பலன்களைப் பெறலாம்.
விளக்கில் கிராம்பு
செவ்வாய்க்கிழமை அனுமனை வழிபடும் போது, இரண்டு கிராம்புகளை விளக்கில் வைத்து ஏற்றி வழிபடவும். இதைச் செய்வதன் மூலம், வீட்டில் பரவியுள்ள எதிர்மறை சக்திகள் விலகி விடும் என்றும், அனைத்து கவலைகளையும் நீக்கும் அனுமன் தனது பக்தர்களுக்கு தேவையானதை செய்வார் என்றும் நம்பப்படுகிறது.
(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இடம்பெற்றுள்ள இந்த தகவல்களுக்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)