உங்க ஜாதகப்படி நீங்க செய்ய வேண்டிய தொழில் எது? இதோ துல்லியமான கணிப்பு!
Astrological Blueprint: மனிதனின் பொருளாதாரத் தரத்தை உயர்த்தும் தொழில் தேர்வானது, அவனது ஜாதகத்தில் உள்ள 10-ஆம் இடமான தொழில் ஸ்தானத்தைக் கொண்டே கணிக்கப்படுகிறது. இந்த தொழில் ஸ்தானத்தில் அதிக பரல்கள் பெற்றிருப்பின் சுயதொழிலும், குறைந்த பரல்கள் பெற்றிருப்பின் மற்றவர்களிடம் பணிபுரியும் சூழலும் உருவாகும். சுறுசுறுப்பான மேஷ ராசியினருக்கு நிர்வாகத் துறைகளும், நிதானமான ரிஷப ராசியினருக்கு நிதி மற்றும் ஆராய்ச்சித் துறைகளும் சாதகமான பலன்களைத் தரும்.
ஒரு மனிதனின் வாழ்நாளில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைவது அவன் தேர்ந்தெடுக்கும் தொழில் அல்லது வியாபாரமாகும். அவனது சமூக அந்தஸ்தையும் பொருளாதாரத் தரத்தையும் இந்தத் தொழில் தேர்வே தீர்மானிக்கிறது. தற்காலத்தில் பலருக்கு அவர்கள் படிக்கும் கல்வியும், அவர்கள் பார்க்கும் வேலையும் ஒத்துப் போவதில்லை என்பது பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. ஏனெனில், வெறும் ஏட்டுக்கல்வி மட்டுமே ஒருவரின் வெற்றிக்குக் காரணியாக இருப்பதில்லை; அவரது தனிப்பட்ட திறமைகளே முக்கியப் பங்கு வகிக்கின்றன. இத்தகைய சூழலில், தனக்கு எந்தத் துறை செட் ஆகும் என்ற குழப்பம் நீடிக்கும் போது, ஒருவரது சந்திர ராசி மற்றும் ஜாதகக் கட்டங்களை ஆராய்வதன் மூலம் அவருக்கான சரியான வாழ்வாதாரப் பாதையை ஓரளவிற்கு முன்கூட்டியே கணிக்க முடியும் என்று ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.
தொழில் ஸ்தானத்தின் பலமும் சர்வாஷ்டக வர்க்கப் பரல்களும்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒருவரது ஜாதகத்தில் பத்தாம் இடம் என்பது ‘தொழில் ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் கிரகங்களின் பலம் மற்றும் பலவீனங்களை ஆராய்வதுடன், சர்வாஷ்டக வர்க்க முறையில் அந்த ராசி பெறும் ‘பரல்களின்’ எண்ணிக்கையைக் கொண்டு துல்லியமான முடிவுகளை எடுக்க முடியும். உதாரணத்திற்கு, ஒருவரது ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், அவர் தான் படித்த படிப்பிற்கு ஏற்ற நல்ல வேலையைப் பெறுவார். அப்படியே ஒரு வேலையை இழந்தாலும், உடனடியாக மற்றொரு சிறந்த வேலை அவரைத் தேடி வரும். அதேநேரம், 25-க்கும் குறைவான பரல்கள் இருந்தால், தகுதிக்கு ஏற்ற வேலை கிடைப்பதில் தடைகளும், இறுதிவரை மற்றவர்களிடம் பணிபுரியும் அடிமைத் தொழில் நிலையும் ஏற்படலாம். இதுவே 35-க்கும் மேல் பரல்கள் அமைந்தால், அவர் சுயதொழில் செய்யும் ஆற்றலைப் பெறுவார்.
மேஷ ராசிக்காரர்களுக்கான சாதக பாதகத் துறைகள்
இயல்பிலேயே அசாத்திய துணிச்சலும், லட்சிய வேட்கையும், தலைமைப் பண்பும் கொண்டவர்களாக மேஷ ராசிக்காரர்கள் விளங்குகிறார்கள். சவாலான காரியங்களை எதிர்கொள்வதிலும், புதிய உத்திகளைக் கையாள்வதிலும் இவர்கள் வல்லவர்கள். இத்தகைய குண நலன்களுக்குப் பொருத்தமாக தொழில்முனைவோர், பங்கு வர்த்தகம், சந்தைப்படுத்துதல் (Marketing), ஊடகத் துறை, பாதுகாப்புப் படைகள், ராணுவம், அரசியல் மற்றும் விளையாட்டுத் துறைகள் இவர்களுக்குப் பெரும் வெற்றியைத் தேடித்தரும். மாறாக, இவர்களால் ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் மந்தமான பணிகளை (Back-end processes) சகித்துக் கொள்ள முடியாது. இத்தகைய சுறுசுறுப்பற்ற சூழல் கொண்ட வேலைகள் இவர்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடும்.
ரிஷப ராசிக்காரர்களின் பொறுப்புணர்வும் உகந்த வேலைகளும்
திட்டமிட்டுச் செயல்படுவதிலும், நம்பகத்தன்மையிலும் ரிஷப ராசிக்காரர்கள் தனித்து விளங்குகிறார்கள். எதையும் பொறுப்புடனும் அர்ப்பணிப்புடனும் செய்யும் இவர்கள், தங்களின் வேலைப் பாதுகாப்பிற்கும் நிரந்தரத் தன்மைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். பணப் பரிவர்த்தனைகளை நிர்வகிப்பதில் இவர்களது கை ஓங்கி இருக்கும் என்பதால் வங்கித்துறை, கணக்கியல் போன்ற நிதி சார்ந்த துறைகள் இவர்களுக்கு மிகவும் ஏற்றவை. மேலும், அறிவியல் ஆராய்ச்சி, மருத்துவம், பொறியியல், கட்டடக்கலை, கலை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் இவர்கள் கொடிகட்டிப் பறப்பார்கள். எனினும், இவர்கள் மெதுவான மற்றும் நிலையான சூழலை விரும்புவதால், அதிவேகமாக இயங்கும் புத்தொழில் நிறுவனங்கள் (Startups) மற்றும் சிறு வணிகங்களின் சூழலுக்கு ஈடுகொடுப்பதில் சவால்களைச் சந்திக்க நேரிடும்.