AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தோழனுக்காக நள்ளிரவில் தெருவில் நடந்த இறைவன்! காரணம் தெரியுமா?

Sundaramurthy Nayanar: சங்கிலி நாச்சியாருக்கு அளித்த வாக்குறுதியை மீறி திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால், சுந்தரமூர்த்தி நாயனார் தனது இரு கண் பார்வைகளையும் இழக்க நேரிட்டது. தவறை உணர்ந்து பல்வேறு சிவாலயங்களில் உருகிப் பாடிய சுந்தரருக்கு, காஞ்சியில் இடது கண்ணும் திருவாரூரில் வலது கண்ணும் மீண்டும் பார்வையாகக் கிடைத்தன.

தோழனுக்காக நள்ளிரவில் தெருவில் நடந்த இறைவன்! காரணம் தெரியுமா?
சங்கிலி நாச்சியார்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 23 Jul 2026 10:54 AM IST

சுந்தரமூர்த்தி நாயனார் திருவொற்றியூரில் சங்கிலி நாச்சியாரைக் கண்டு காதல் கொண்டு ஈசனின் அருளால் அவரைத் திருமணம் செய்து கொண்டார். அவரை விட்டுப் பிரியமாட்டேன் என இறைவன் முன்னிலையில் அளித்த வாக்குறுதியை மீறி, சுந்தரர் திருவாரூர் நோக்கிப் பயணம் மேற்கொண்டார். சத்தியத்தைத் தவறியதன் விளைவாக சுந்தரர் தனது இரு கண்களின் பார்வையையும் உடனடியாக இழக்க நேரிட்டது. தவறை உணர்ந்து பல சிவத்தலங்களில் இறைவனை வேண்டிப் பாடிய அவருக்கு, காஞ்சிபுரத்தில் இடது கண் பார்வையும் திருவாரூரில் வலது கண் பார்வையும் மீண்டும் கிடைத்தன. இதனிடையே சுந்தரரின் இரண்டாவது திருமணத்தால் அதிருப்தியடைந்த பரவை நாச்சியார், அவரைத் தனது இல்லத்திற்குள் சேர்க்க மறுத்து ஊடல் கொண்டார். தன் தோழன் சுந்தரரின் துயர் துடைக்க எண்ணிய தியாகேசப் பெருமானே நள்ளிரவில் பரவையாரின் மாளிகைக்கு நேரில் சென்று சமாதானத் தூது பேசினார். இறைவனின் திவ்ய தரிசனத்தால் பரவை நாச்சியார் கோபம் தணிந்து சுந்தரரை ஏற்றுக்கொண்டதால், இருவரின் சிவத்தொண்டும் இன்பமயமாகத் தொடர்ந்தது.

சங்கிலி நாச்சியாருடன் திருமணம் மற்றும் சத்தியம்

சிவபெருமானின் தோழராகப் போற்றப்படும் சுந்தரமூர்த்தி நாயனார், திருவாரூரில் பரவை நாச்சியாரை மணந்து சிவத்தொண்டு புரிந்து வந்தார். இதனிடையே பல்வேறு தலங்களுக்கு யாத்திரை சென்ற சுந்தரர், திருவொற்றியூரில் இறைவனுக்குத் திருப்பணி செய்துவந்த சங்கிலி நாச்சியாரைக் கண்டு காதல் கொண்டார். தனது விருப்பத்தை நிறைவேற்ற ஈசனையே தூது அனுப்பினார். ஏற்கெனவே திருமணமானவரை எப்படி ஏற்பது என சங்கிலி நாச்சியார் தயங்கவே, “சுந்தரர் உன்னை விட்டுப் பிரியமாட்டேன் என வாக்குறுதி அளிக்கட்டும்” என்று ஈசன் வழிகாட்டினார். அதன்படி, சிவபெருமான் முன்னிலையில் சங்கிலி நாச்சியாருக்கு அளித்த சத்தியத்தைக் காப்பாற்றுவதாக சுந்தரர் வாக்குறுதி அளித்து அவரைத் திருமணம் செய்து கொண்டார்.

சத்தியத்தை மீறியதால் பறிபோன கண் பார்வை

சில காலத்திற்குப் பிறகு, திருவாரூர் தியாகராஜப் பெருமானின் வசந்த உற்சவத்தில் பங்கேற்க வேண்டும் என்ற தீவிர ஆவல் சுந்தரருக்கு ஏற்பட்டது. சங்கிலி நாச்சியாருக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து, திருவொற்றியூர் எல்லையைத் தாண்டிச் சென்றார். சத்தியத்தை மீறியதன் விளைவாக, சுந்தரரின் இரு கண்களின் பார்வையும் உடனடியாகப் பறிபோனது. பிழையை உணர்ந்த சுந்தரர், பல்வேறு சிவாலயங்களுக்குச் சென்று இறைவனை வேண்டி பதிகங்கள் பாடினார். திருவெண்பாக்கம் தலத்தில் ஈசன் அவருக்கு ஊன்றுகோல் வழங்கி வழிகாட்டினார். தொடர்ந்து காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரை வேண்டிப் பாடியபோது இடது கண் பார்வையும், இறுதியில் திருவாரூர் தியாகேசப் பெருமானின் அருளால் வலது கண் பார்வையும் சுந்தரருக்கு மீண்டும் கிடைத்தது.

Also Read: கடன் பிரச்சனை தீர வேண்டுமா? ஆடி செவ்வாய் அன்று இதை செய்யுங்கள்…

பரவையாரின் ஊடலும் ஈசனின் நள்ளிரவு தூதும்

கண் பார்வை கிடைத்தபோதிலும், மற்றொரு திருமணத்தைப் பற்றிய செய்தி அறிந்த பரவை நாச்சியார், சுந்தரரைத் தனது இல்லத்திற்குள் அனுமதிக்க மறுத்து ஊடல் கொண்டார். மனம் உடைந்த சுந்தரர், மீண்டும் தியாகேசப் பெருமானைச் சரணடைந்து தனக்காகத் தூது செல்லுமாறு வேண்டினார். சுந்தரரின் பக்தியால் நெகிழ்ந்த ஈசன், நள்ளிரவு வேளையில் பூத கணங்கள் மற்றும் முனிவர்கள் சூழத் தனது திவ்ய சொரூபத்துடன் பரவை நாச்சியாரின் மாளிகைக்கு நேரில் எழுந்தருளினார். இறைவனின் பேரருளைக் கண்ட பரவை நாச்சியார், ஈசனின் விருப்பத்திற்கு இணங்கி சுந்தரரை மீண்டும் ஏற்றுக்கொண்டார். இதன்மூலம் சுந்தரரின் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கி, இருவரும் இணைந்து சிவத்தொண்டைத் தொடர்ந்தனர்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us