வாழ்க்கையை மாற்றிய ரமண மகரிஷி.. நடிகர் வெங்கடேஷின் ஆன்மிக அனுபவம்!
பிரபல நடிகரான வெங்கடேஷ் டகுபதி ஆன்மீகப் பயணம், கடவுள் மீதான பயத்திலிருந்து அமைதி நோக்கிய ஒரு மாற்றத்தைக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆரம்பத்தில், பாரம்பரியமான ஆன்மீக நம்பிக்கைகளைக் கொண்டிருந்த அவர், பின்னர் ஓஷோ, ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றோரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு, கடவுளின் மற்றொரு பரிணாமத்தை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் வெங்கடேஷ் டகுபதி (Venkatesh Daggubati). இவருக்கு சினிமாவில் எந்தளவு ஈடுபாடு உள்ளதோ, அதைவிட ஒருபடி மேல் ஆன்மிகத்தில் (Spiritual) நாட்டம் கொண்டவர். இதனை ஒரு நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருப்பார். அதனைப் பற்றிக் காணலாம். அதாவது, “எனது வாழ்க்கையில் ஆன்மிகம் என்பது மிக நீண்ட பயணமாகும். நானும் ஆன்மிகத்தை பாரம்பரியமாக பின்பற்றக்கூடிய குடும்பத்தில் தான் பிறந்தேன். காலையில் வீட்டில் இறை வழிபாடு, தொடர்ந்து கோயிலுக்கு செல்வது என்பதெல்லாம் உண்டு. வாழ்க்கையில் நல்லது செய்தால் கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார், தப்பு செய்தால் தண்டிப்பார் என சொல்லித்தான் வளர்த்தார்கள். ஆரம்பக் காலகட்டத்தில் கொல்கத்தா காளி மீது மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டது. காளிதேவிக்கான பூஜைகள் எல்லாம் செய்வேன். ஆனால் ஒருகாலக்கட்டம் வரை பயத்தில் தான் ஆன்மிகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். ஆன்மிக நடைமுறைகள் பற்றி ஒரு சரியான புரிதல் இல்லாமல் இருந்தது. எனக்குள்ளும் ஒரு நெருடல் என்பது இருந்து வந்தது.
ஆனால் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு நான் அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்த நிலையில் ஆன்மிகத்தில் முன்பிருந்த அந்த நாட்டம் இல்லாமல் இருப்பதை கவனித்தேன். கடவுள் என்றால் அன்பானவர் தானே சொல்கிறார்கள். ஆனால் நாம் ஏன் பயப்படுகிறோம் என்ற கேள்வி எழுந்தது. இதனைத் தொடர்ந்து தான் ஓஷோ, ராமகிருஷ்ண பரமஹம்சரின் புத்தகங்கள் பற்றி படித்தேன். அவர்கள் அனைவருமே கடவுள் அன்பானவர்கள் என்பதை தான் தெரிவித்திருந்தார்கள்.
ஆன்மிகத்தில் நிகழ்ந்த மாற்றம்
ஆன்மிகத்தில் பின்பற்றப்படும் சில கட்டுப்பாடுகளை உடைக்க சற்று கடினமாக இருந்தது. இந்த நேரத்தில் செல்ல வேண்டும், செவ்வாய்கிழமை போகக்கூடாது என்றெல்லாம் அப்பா சொல்வார். நானும் அதை பின்பற்றி தான் வந்தேன். ஆனால் அவசர காலத்தில் அதனை நான் மீறி நடந்துக் கொண்டேன். அறிவியல்பூர்வமாக சொல்லப்பட்ட இந்த விஷயங்களை நான் மதிக்கிறேன். அதேசமயம் உள்ளூணர்வு சொல்வதை கேட்டு நடந்தேன்.
முதலில் கடவுளை நோக்கி பயணப்பட்ட நான், பின்பு குருவை நோக்கி செல்ல ஆரம்பித்தேன். என்னில் இந்த மாற்றத்தைக் கண்டு குடும்பத்தினர் குழம்பி போனார்கள். ஆனால் ஆன்மிக ரீதியாக நான் ஏதோ செய்கிறேன் என கண்டுக்கொள்ளவில்லை. என்னுடைய கேரியரின் உச்சத்தின் இருந்த நேரத்தில் பிரேமிஞ்சுகுண்டம் ரா என்ற படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றிப் பெற்றது. நாங்கள் சில ஊர்களில் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தோம்.
திருவண்ணாமலை அனுபவம்
மக்களும் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டாடுகிறார்கள். எல்லா ஊர்களுக்கும் சென்று வந்த நான் இதையெல்லாம் பெரிதாக எண்ணவில்லை. அது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அப்போது தான் எனக்குள் ஒரு தேடல் தொடங்கியது. எங்கெல்லாமோ சுற்றி என்னைப் பற்றிய தேடலை தொடங்கினேன். அதன்மூலம் மிகப்பெரிய பதில்கள் கிடைத்தது.
கடைசியாக நான் போன இடம் திருவண்ணாமலை. அங்குள்ள விருபக்ஷா குகைக்கு சென்று தியானம் செய்யும்போது ஒரு அமைதியை உணர்ந்தேன்.என் தேடலுக்கான பதில் கிடைத்ததாக நினைத்தேன். அதன்பிறகு ரமண மகரிஷியை பின்பற்ற தொடங்கினேன். வீட்டில் இருந்த அனைத்து கடவுள்களின் புகைப்படத்தையும் எடுத்து விட்டு மகரிஷி புகைப்படத்தை வைத்தேன்” என வெங்கடேஷ் கூறினார்.