“வாழ்க வளமுடன்” வேதாத்திரி மகரிஷியின் நினைவு நாள் இன்று..!
Vethathiri Maharishi: தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் "வாழ்க வளமுடன்" என்ற தாரக மந்திரத்தின் மூலம் உலகிற்கு அமைதி மற்றும் வளத்தை போதித்தார். இவர் உருவாக்கிய 'மனவளக்கலை' பயிற்சிகள் இன்றைய காலக்கட்டத்திற்குத் தேவையான மன அழுத்த மேலாண்மைக்குச் சிறந்த தீர்வாக அமைகின்றன.
“வாழ்க வளமுடன்” என்ற தாரக மந்திரத்தை உலகுக்கு அருளிய தத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்றைய இயந்திரமயமான உலகில், மனிதர்கள் சந்திக்கும் மன அழுத்தம் மற்றும் டென்ஷன் ஆகியவற்றிலிருந்து விடுபட அவர் உருவாக்கிய ‘மனவளக்கலை’ பயிற்சிகள் பெரும் மருந்தாக விளங்குகின்றன. ஆன்மிகத் தேடலுக்கும், அமைதியான வாழ்க்கைக்கும் வழிகாட்டியாகத் திகழும் இவரது தத்துவங்கள், வெறும் சடங்குகள் சார்ந்ததாக இல்லாமல் அறிவியலை அடிப்படையாகக் கொண்டிருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். நவீன கால மனிதர்களுக்குப் புரியும் வகையில் ஆன்மிகத்தை எளிமைப்படுத்தியவர் அவர்.
அண்டவெளியே இறைவன்: எளிய உதாரணமும் தத்துவ விளக்கமும்
கடல் அலைகளின் இயக்கத்தை ஓர் எளிய உதாரணமாகக் கொண்டு இறைநிலையை மகரிஷி விளக்குகிறார். கடல் அலை என்பது நீரின் அசைவு மட்டுமே; அந்த அசைவை நிறுத்திவிட்டால் அங்கே எஞ்சி இருப்பது நீர் மட்டுமே. அதுபோலவே, இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கங்களை நிறுத்திவிட்டால் எஞ்சி இருப்பது அந்த ஆதி மூலமான இறைநிலை மட்டுமே என்பது மகரிஷியின் வாதம். அண்டவெளியே இறைவன் என முழங்கிய அவர், பிரபஞ்ச ரகசியங்களை பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் போதித்தார்.
வறுமையில் உதித்த ஞானம்: சிறுவன் வேதாத்திரியின் தேடல்
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் 1911-ம் ஆண்டு எளிய நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தவர் வேதாத்திரி மகரிஷி. தனது பத்து வயதில், ஒரு வேளைக் கஞ்சிக்கு வழியில்லாமல் தாய் கண்ணீர் வடித்ததைக் கண்டு துடித்தார். அந்தத் துன்பமே அவரைப் பல கேள்விகளை நோக்கி நகர்த்தியது. “வறுமை ஏன் ஏற்படுகிறது? கடவுள் யார்? நான் யார்? உயிர் என்றால் என்ன?” போன்ற ஆழ்ந்த வினாக்களுக்கு விடை காணும் வேட்கை அவருக்குள் எழுந்தது. அந்தத் தேடலின் விளைவாகவே, பிற்காலத்தில் அவர் கோடிக்கணக்கான மக்களுக்கு நல்வழி காட்டும் தத்துவ ஞானியாக உயர்ந்தார்.
அறிவியலும் ஆன்மிகமும் இணைந்த வேதாத்திரியம்
வேதாத்திரி மகரிஷியின் கருத்துக்கள் ஆதிசங்கரரின் அத்வைதத்தையும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் அறிவியல் கோட்பாடுகளையும் ஒருசேர நினைவுபடுத்துகின்றன. சடப்பொருட்கள் முதல் உயிரிகளின் பரிணாம வளர்ச்சி வரை அனைத்தையும் இறைவெளியின் (Space) அடிப்படையில் விளக்கியவர் இவர். “அவனின் இயக்கம் அணுவாற்றல்; அணுவின் கூட்டுப் பக்குவம் நீ” என்ற அவரது கவிதை வரிகள், மனிதன் இறைவனின் ஒரு பகுதி என்பதைப் பறைசாற்றுகின்றன. தன்னை அறிவதே முக்தி என்ற உயரிய தத்துவத்தை வாழ்நாள் முழுவதும் போதித்த மகரிஷியின் சிந்தனைகள் என்றும் மனிதகுலத்திற்கு ஒளிவீசும்.