ஆண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா? – சாஸ்திரம் சொல்லும் செய்தி!
Navratri Fasting: நவராத்திரி பண்டிகையில் ஆண்கள் விரதம் இருக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. சாஸ்திரங்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதாக இருந்தாலும், ஆண்களும் பக்தியுடன் விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபடலாம். கொலு, வழிபாடு, மந்திரங்கள் என ஒன்பது நாட்களும் ஒன்பது வகைகளில் வழிபடுவது சிறப்பான பலன்களை தரும் என நம்பப்படுகிறது.

நவராத்திரி
நவராத்திரி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும் 10 நாட்கள் நடைபெறும். இந்த நவராத்திரி காலகட்டம் என்பது இந்தியாவில் பண்டிகை காலத்தின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது. துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய பெண் தெய்வங்களை போற்றிக் கொண்டாடப்படும் இப்பண்டிகை பெண்களால் தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து பலரிடம் உள்ளது. பலரும் நவராத்திரி காலத்தில் விரதத்தை கடைபிடிக்கின்றனர். வீட்டில் கொலு கண்காட்சி வைத்து காலை மற்றும் மாலை வேளைகளில் வழிபடுகின்றனர். இப்படியான நிலையில் ஆண்கள் நவராத்திரி விரதம் இருக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில் அதனை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அம்பிகை
ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி பண்டிகையில் ஒவ்வொரு நாளும் அம்பிகையே ஒவ்வொரு விதமாக அலங்கரித்து வழிபட வேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது. 2025 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகை செப்டம்பர் 22ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பத்தாவது நாள் விஜயதசமி கொண்டாடப்படும்.
நவராத்திரி விரதம் என்பது மிகவும் எளிமையானது. அதேபோல் மற்ற விரதங்களை காட்டிலும் பலன்கள் ஏராளமான தரக்கூடியது. ஒரு மனிதனுக்கு தேவையான தனம், தான்யம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், மோட்சம், சிறந்த இல்வாழ்க்கை என அனைத்தையும் நவராத்திரி விரதம் தரும் என நம்பிக்கை உள்ளது.
ஒன்பது நாளும் ஒன்பது விதமான மலர்கள், ஒன்பது விதமான நைவேத்தியம், அலங்காரம், ஒன்பது வகையான மந்திரங்கள் என இது நம் மனதிற்கும் மிக பாசிட்டிவான தருணமாக அமையும்.
Also Read: நவராத்திரி தொடங்கும் முன் வீட்டுக்கு கொண்டு வரவேண்டிய பொருட்கள்!
நவராத்திரி கொலு கண்காட்சி ஆனது சர்வமும் சக்தி மயம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் வைக்கப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் இந்த விரதம் இருந்து வழிபாட்டில் ஈடுபடலாம். சில வீடுகளில் நவராத்திரி கொண்டாட்டம் தொடங்கி பெண்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட முடியாத சூழல் ஏற்படலாம். அதற்கு தயங்கியே பல விரதத்தை கடைபிடிக்காமல் இருப்பார்கள்.
ஆனால் அத்தகைய நாட்களில் ஆண்கள் முன்னின்று இந்த வழிபாட்டில் ஈடுபடலாம். பெண் தெய்வங்களுக்கான பண்டிகை என்பதால் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என சாஸ்திரம் சொன்னாலும் பக்தர்கள் தங்கள் நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடிய சூழலும் உள்ளது. எனவே ஒன்பது நாட்களில் சில நாட்கள் உடலால் இல்லாவிட்டாலும் மனதால் நாம் விரதம் இருந்து அம்பிகையை வழிபடலாம். அது முழு விரத பலனையும் அளிக்கும்.
Also Read: தொடர் விடுமுறை.. நவராத்திரியை சிறப்பாக்க போக வேண்டிய அம்மன் கோயில்கள்!
நவராத்திரியில் வழிபடப்படும் ஒன்பது வகையான சக்தி ரூபங்களும் ஆண் தெய்வங்களின் மூலம் சக்திகளையும் ஆயுதங்களையும் பெற்று போரில் அசுரனை எதிர்த்து அசுரவதம் செய்து வென்றனர். ஆக இந்த பண்டிகையில் வரலாறு ரீதியாகவே ஆண்களுக்கும் ஒரு தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. எனவே பெண் தெய்வத்திற்குரிய பண்டிகை என ஒதுங்காமல் தாராளமாக ஆண்களும் நவராத்திரி வழிபாட்டையும், விரதத்தையும் பின்பற்றலாம் என சாஸ்திரம் சொல்கிறது.
(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)