ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோயில்களில் அலைமோதும் பக்தர்கள்..தமிழகமே ஆன்மிகப் பரவசத்தில்!
Adi Month's First Friday: ஆடி மாதம், அம்மனுக்குரிய மாதமாகக் கருதப்படுகிறது. முதல் வெள்ளிக்கிழமை, தமிழக அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளுடன் கொண்டாடப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பல்வேறு நேர்த்திக்கடன்கள், பூஜைகள் நடைபெற்றன. பெண்கள் விரதம் இருந்து வேண்டுதல் வைத்தனர்.

தமிழ்நாடு ஜூலை 18: ஆடி மாதம், அம்மனுக்கு (Adi First Friday) உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் (Amman Temple Special Prayer), கோலாகலமான திருவிழாக்களும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று (ஜூலை 18, 2025), தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு, அம்மனை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
ஆடி மாதமும் அம்மன் வழிபாடும்: ஒரு ஆன்மிகப் பின்னணி
தமிழ் மாதங்களில் நான்காவது மாதமான ஆடி, ஆன்மிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இம்மாதம் தேவர்களின் இரவு நேரம் தொடங்கும் காலம் என்பதால், அம்மனின் சக்தி வெளிப்படும் மாதமாக நம்பப்படுகிறது. ஆடியில் காற்றில் துர்க்கை, காளி, மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்களின் அருள் நிறைந்திருப்பதாக ஐதீகம். குறிப்பாக வெள்ளிக்கிழமைகள், அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாட்களாகக் கருதப்படுகின்றன.
சிறப்பு வழிபாடுகள்: ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோயில்களில் கூழ் வார்த்தல், பொங்கல் இடுதல், மாவிளக்கு ஏற்றுதல், எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபடுதல், பால் குடம் எடுத்தல், அக்னி சட்டி எடுத்தல், முடி காணிக்கை செலுத்துதல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடல்கள் மற்றும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்படுகின்றன.
பெண்களுக்கு சிறப்பு: ஆடி மாதம் முழுக்கவே பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ எனப் பல்வேறு வேண்டுதல்களுடன் அம்மனை வழிபடுகின்றனர். ஆடி வெள்ளிகளில் அம்மனை வழிபட்டால், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
வளைகாப்பு வைபவம்: சில அம்மன் கோயில்களில், ஆடி வெள்ளியன்று அம்மனுக்கு வளைகாப்பு வைபவமும் நடத்தப்படுகிறது. நெல்லையப்பர் காந்திமதி ஆலயத்தில் இது மிகவும் சிறப்பானது. அம்மனுக்கு கர்ப்பிணி போல பயறு வகைகளைக் கட்டி கர்ப்பிணி அலங்காரம் செய்வார்கள். இதைக் கண்டு வணங்கினால் புத்திரப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Also Read: பெங்களூரு, ஈரோடு செல்லும் ரயில்கள் ரத்து – தென்னக ரயில்வே அறிவிப்பு
தமிழகம் முழுவதும் பக்தர்கள் வெள்ளம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், காஞ்சி காமாட்சி அம்மன் கோயில், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல முக்கிய அம்மன் கோயில்களில் இன்று அதிகாலை 2 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்து வருகின்றனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புற மற்றும் நகரப்புற அம்மன் கோயில்களிலும் இதேபோன்ற பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான இன்று, கோயில்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பக்திப் பாடல்கள் ஒலிக்க, ஆன்மிகச் சூழல் நிலவுகிறது. இது தமிழகத்தின் வளமான கலாச்சாரத்தையும், ஆழ்ந்த பக்தியையும் பிரதிபலிப்பதாக உள்ளது