முருகன் அருளால் நடந்த மறக்க முடியாத சம்பவம்.. சுஜாதா பகிரும் தகவல்கள்!
நடனக் கலைஞர் மற்றும் நடிகை சுஜாதா, தனது ஆன்மிக அனுபவங்களை நேர்காணல் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் சமயபுரம் மாரியம்மன் மற்றும் முருகனை தனது இஷ்ட தெய்வங்களாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் மற்றவர்களுக்கு உதவுவதை ஆன்மிகமாகக் கருதுவதாகவும், பக்தி என்பது அடுத்தவரை குறை சொல்லாமல் இருப்பது எனவும் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடனம் மூலம், நடிப்பும் மூலமாகவும் பிரபலமானவர் சுஜாதா (Eesan Sujatha). ஈசன் படத்தில் ஜில்லா விட்டு பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமான இவர், தற்போது சின்னத்திரையின் நம்பர் 1 சீரியலாக சென்று கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசையில் சிந்தாமணி என்ற கேரக்டரில் அசத்தி வருகிறார். சுஜாதா நேர்காணல் ஒன்றில் தன்னுடைய ஆன்மிக அனுபவங்கள் பற்றி பேசியுள்ளார். அதாவது, “எனக்கு ஆன்மிக நம்பிக்கை என்பது எல்லாமுமாகவே உள்ளது. 24 மணி நேரம் நான் மந்திரம் உச்சரித்துக் கொண்டே இருப்பேன். என்னுடைய அம்மா மூலம் சமயபுரம் மாரியம்மன் (Samayapuram Mariamman) இஷ்ட தெய்வமாக மாறியது. அதேபோல் நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னை வடபழனியில் தான். அப்போது அங்கிருந்த முருகன் கோயிலில் நான் விளையாடியுள்ளேன். அதனால் முருகனை எனக்கு தோழன் என சொல்லலாம். அவர் தான் எனக்கு எல்லாம். என்னுடையது எல்லாம் அவர் தான் முடிவு செய்கிறார்.
இதற்கு பெயர் தான் பக்தி
என்னை வழிநடத்துவதும் முருகன் தான். அவர் மீது அளவில்லா நம்பிக்கை இருந்தாலும் வீட்டில் சிலைகள் எல்லாம் கிடையாது.நான் ஆன்மிகம் தொடர்பான வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன். என்னை பொறுத்தவரை மற்றவர்களுக்கு உதவுவதே ஆன்மிகமாகும். அபிஷேகம் செய்வது, கோயில் முந்தியடித்துக் கொண்டு சாமி தரிசனம் செய்வது போன்ற பக்தி எனக்கு கிடையாது. பக்தி என்பது அடுத்தவரை குறை சொல்லாமல் இருப்பது, மற்றவர்கள் வாழ்க்கையை கெடுக்காமல் இருப்பது, உதவி செய்யவில்லை என்றாலும் உபகாரம் செய்யக்கூடாது என்பதாகும்.
நமக்காக வேண்டாமல் அடுத்தவர்களுக்காக வேண்டிக்கொண்டால் எல்லாமே நன்றாக நடக்கும். இதைத்தான் என்னுடைய குழந்தைகளுக்கும் சொல்வேன். நம்முடைய வங்கி கணக்கில் பணம் இருக்கிறதோ, இல்லையோ புண்ணியம் என்பது இருக்க வேண்டும். ஒரு நாளுக்கு குறைந்தப்பட்சம் ஒருவருக்காது உதவுங்கள். நான் கோயிலுக்கு எல்லாம் செல்வேன். ஆனால் இத்தனை வாரம் போக வேண்டும், அப்படி வழிபட வேண்டும் என சொல்வதில் எனக்கு நம்பிக்கை கிடையாது.
மறக்க முடியாத சம்பவம்
இறைவனிடம் வேண்டிகொண்டு அது நடந்த அதிசயங்கள் வாழ்க்கையில் உள்ளது. 1997 ஆம் ஆண்டு நான் கருவுற்றிருந்தபோது அந்த நேரத்தில் தினமும் காலை 5 மணிக்கு முருகன் கோயிலுக்கு செல்வேன். அங்கு கந்த சஷ்டி எல்லாம் பாடுவேன். நான் மூலஸ்தானத்தை சுத்தம் செய்வேன். குழந்தை பிறக்கும் வரை கோயிலுக்கு சென்றேன்.
அங்கிருப்பவர்கள் உனக்கு முருகன் தான் பிறப்பார் என சொல்லி மகிழ்ந்தார்கள். என் அம்மாவும் ஆன்மிகத்தில் நம்பிக்கை கொண்டவர். கார்த்திகை மாதம் முடிவதற்குள் குழந்தை பிறந்தால் உன் பெயர் வைப்போம். இல்லாவிட்டால் கிடையாது என வேண்டிக் கொண்டார். சரியாக என் குழந்தையும் கார்த்திகை 30 ஆம் தேதி தான் பிறந்தது.
அந்த நாள் எனக்கு வலியே வரவில்லை. நடு இரவில் என்னுடைய அம்மா, நீ இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை பெற்று விடுவாய். வா நாம் மருத்துமனைக்கு செல்லலாம் என சொன்னார். வடபழனியில் இருந்து மைலாப்பூர் செல்ல வேண்டும். நடு இரவில் கஷ்டப்பட்டு அங்கு சென்றோம். வலி வராமல் ஏன் வந்தீங்க என மருத்துவமனையில் இருந்த நர்ஸ் திட்டினார். நான் எங்க அம்மாவிடம் கத்திக் கொண்டிருந்தேன். ஆனால் எங்க அம்மா சொன்ன மாதிரி அதிகாலை 3.19 மணிக்கு குழந்தை பிறந்தது. இதை என்னால் நம்பவே முடியவில்லை” என சுஜாதா கூறியிருப்பார்.