ஆடி பௌர்ணமி.. ஹயக்ரீவர் வழிபாடு செய்தால் பலன்கள் ஏராளம்!
ஆடிப் பௌர்ணமி, 2025 ஆகஸ்ட் 8, வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நாள் மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாளில் ஹயக்ரீவர் வழிபாடு, குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளது. கல்வியின் அதிபதியான ஹயக்ரீவரை வழிபடுவதால், கல்வியில் தடுமாறும் குழந்தைகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

ஆன்மிக மாதமான ஆடியில் வரும் பௌர்ணமி என்பது மிகவும் விசேஷமான நாளாக பார்க்கப்படுகிறது. ஆடி மாதம் முழுவதுமே பெண் தெய்வங்களுக்கானது என சொல்லப்பட்டாலும் இக்காலக்கட்டம் பிற தெய்வங்களை வழிபடுவதற்கும், குல தெய்வ வழிபாட்டிற்கும் ஏற்றதாக சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் ஆடி பௌர்ணமி நாளில் நாம் ஹயக்ரீவரை வழிபட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் குழந்தைகளோ கல்வியில் தடுமாறி வரும் பட்சத்தில் இந்த வழிபட்டை மேற்கொண்டால் தீர்வு கிடைக்கும் என நம்பப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி தினமானது ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று பிற்பகல் 2.52 மணி முதல் ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.26 மணி வரை பௌர்ணமி திதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகா விஷ்ணுவின் குதிரை முக அவதாரம் தான் ஹயக்ரீவர் என அழைக்கப்படுகிறார். இவர் கல்வியின் அதிபதியாக அறியப்படும் சரஸ்வதி தேவிக்கு குருவாக திகழ்கிறார். ஆவணி மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திரத்தில் ஹயக்ரீவர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அதேசமயம் ஆடி மாதம் மட்டுமல்லாமல் ஒவ்வொரு மாத பௌர்ணமியிலும் இவரை நாம் வழிபட்டால் கல்வியறிவில் சிறந்து விளங்குவோம் என்பது நம்பிக்கையாகும்.
Also Read: Aadi Friday: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
பொதுவாக செல்வம் இருக்குமிடத்தில் கல்வியும், கல்வி இருந்தால் செல்வமும் இருக்காது. இரண்டும் ஒன்று சேராது என சொல்வார்கள். அதனால் தான் நாம் தனித்தனியாக கடவுள்களை வணங்குகிறோம். ஆனால் கல்வி இருந்தால் செல்வமும் அங்கு சேரும் என்பதற்கு உதாரணமாக ஹயக்ரீவர் திகழ்கிறார்.
ஹயக்ரீவர் வழிபாடு
வீட்டில் ஹயக்ரீவர் அல்லது லட்சுமி தேவி படம் இருந்தால் வழிபாட்டில் வைக்கலாம். எதுவும் இல்லை என்றால் பெருமாள் புகைப்படம் வைக்கலாம். அதில் ஏலக்காய் மாலை அல்லது துளசி மாலை போட வேண்டும். மேலும் பாலில் ஏலக்காய் போட்டு அதனை நைவேத்தியமாக வைக்கலாம். அப்போது ஹயக்ரீவர் மந்திரத்தை உச்சரிக்கலாம். இந்த வழிபாட்டில் கல்வியில் தடுமாறும் உங்கள் குழந்தைகளை வழிபட சொல்ல வேண்டும்.
Also Read: வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?
அதேசமயம் அருகிலுள்ள ஹயக்ரீவர் கோயிலுக்கு சென்று நேரிலும் வழிபடலாம். அப்போது உங்களால் முடிந்த பொருட்களை பூஜைக்காக கொடுக்கலாம். இவரை வழிபடுவதன் மூலம் மன நிம்மதி, குடும்பத்தில் மகிழ்ச்சி, வேலை வாய்ப்பில் வளர்ச்சி உள்ளிட்டவையும் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். கல்வியில் சிறந்து விளங்க வீட்டில் தினமும் ஹயக்ரீவர் படத்தை மாட்டலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் எப்போதும் பொறுப்பேற்காது)