Aadi Amavasya: 2025 ஆடி அமாவாசை.. தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்!
2025 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை ஜூலை 24 அன்று வருகிறது. இந்த நாள் முன்னோர்களை வழிபட ஏற்ற நாளாகக் கருதப்படுகிறது. தர்ப்பணம் செய்வதற்கு உகந்த நேரம் பற்றி நாம் இங்கு காணலாம். ஆடி அமாவாசை தர்ப்பணம் ஆண்டு முழுவதும் முன்னோர்களை வழிபட்டதற்கு சமம் என நம்பப்படுகிறது.

பொதுவாக 14 வகையான திதிகள் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வருகின்றன. அதேசமயம் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதி மட்டும் மாதம் ஒருமுறை வருகிறது. இதில் வளர்பிறை திதியாக கருதப்படும் பௌர்ணமி இறை வழிபாடு, சுப காரியங்கள் செய்ய ஏற்ற காலமாக கருதப்படுகிறது. அதேபோல் தேய்பிறை திதியான அமாவாசை முன்னோர்களை வழிபட சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாள் முழுக்க முழுக்க முன்னோர்களுக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் அமாவாசை வந்தாலும் ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 மாதங்களில் வரும் அமாவாசை மிக மிக முக்கியமானது என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. மற்ற அமாவாசை தினத்தில் நீங்கள் முன்னோர் வழிபாட்டில் ஈடுபடாவிட்டாலும் இந்த 3 அமாவாசை திதியை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
2025 ஆடி அமாவாசை எப்போது?
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஆடி அமாவாசை வரும் ஜூலை 24 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் நம்முடைய வீட்டில் வாழ்ந்து மறைந்த முன்னோர்கள் பித்ரு உலகத்தில் இருந்து நம்மை காண பூமிக்கு புறப்படுவார்கள் என்பது நம்பிக்கையாகும். இவர்கள் புரட்டாசியில் வரும் மஹாளய அமாவாசையில் பூமியில் தங்கி, தை அமாவாசையில் மீண்டும் பித்ரு உலகத்திற்கு செல்வார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
இப்படியான ஆடி அமாவாசை தினத்தில் நாம் முன்னோர்களுக்கு நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. முடியாதவர்கள் வீட்டில் தர்ப்பணம் செய்யலாம். அதன்படி 2025ம் ஆண்டு ஆடி அமாவாசை தினத்தில் தர்ப்பணம் செய்ய உகந்த நேரம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமாவாசை திதியானது ஜூலை 24ம் தேதி அதிகாலை 03.06 மணிக்கு தொடங்குகிறது. அதேசமயம் ஜூலை 25 ம் தேதி அதிகாலை 01.48 மணிக்கு முடிகின்றது. அதனால் ஜூலை 24ஆம் தேதி அதிகாலை முதலே திதி கொடுக்கலாம்.
இதையும் படிங்க: அஷ்டமியில் இதெல்லாம் செய்தால் இரட்டிப்பு பலன்கள் தெரியுமா?
தர்ப்பணம் கொடுக்க உகந்த நேரம்
இருந்தாலும் அன்றைய நாளில் ராகு காலம், எமகண்டம் போன்ற நேரத்தில் திதி, தர்ப்பணம் கொடுக்க கூடாது என சொல்லப்பட்டுள்ளது. மேலும் காலை 6 மணிக்கு சூரிய உதயத்திற்கு முன்பாகவோ அல்லது பகலில் 12 மணிக்கு மேல் உச்சிவேளைக்கு பின்பாகவும் திதி, தர்ப்பணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்படியான நிலையில் ஆடி அமாவாசை தினமான ஜூலை 24ஆம் தேதியான வியாழக்கிழமை நாளில் காலை 6 முதல் 7.30 மணி வரை எமகண்டம் உள்ளது. அதேசமயம் ராகு காலம் பிற்பகல் 01.30 முதல் 3 வரை இருக்கிறது. எனவே காலை 6 மணி முதல் 7.30 மணி வரை முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டால் இவ்வளவு நன்மையா? – வழிமுறைகள் இதோ!
இந்நாளில் முன்னோர்களை வழிபடுவது ஆண்டு முழுவதும் வழிபட்டதற்கு சமமாகும். நம்முடைய முன்னோர்களும் அதனை ஏற்றுக் கொண்டு இன்னல்களில் இருந்து நம்மை காத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள் என்பது நம்பிக்கையாகும்.
(ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)