மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டால் இவ்வளவு நன்மையா? – வழிமுறைகள் இதோ!
மோட்ச தீபம் என்பது முன்னோர்களின் ஆன்மா சாந்தியடைய ஏற்றப்படும் தீபமாகும். இது மாலை வேளையில், வடகிழக்கு மூலையில் ஏற்றப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. கோயிலில் ஏற்றுவது சிறந்தது என்றாலும், வீட்டிலோ அல்லது மரங்கள் அடியிலோ ஏற்றலாம். அஷ்டமி, நவமி, அமாவாசை, பிரதமை போன்ற நாட்களில் ஏற்றுவது சிறப்பானதாகும்.

பொதுவாகவே ஆன்மீக வழிபாட்டில் தீபம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இருளை நீக்கி ஒளியை அளிக்கும் அடிப்படை தத்துவம் கொண்ட தீபமானது கடவுளுக்கான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் முன்னோர் வழிபாடு என்பது நம்முடைய சமூகத்தில் அனைத்து மதத்தினர் இடத்திலும் பரவலாகவே உள்ளது. ஆனால் இந்து மதத்தை பொறுத்தவரை சடங்குகள் என்பது வெவ்வேறாக இருக்கிறது. திதி கொடுப்பது, வீட்டில் வழக்கமாக வழிபடுவது, ஒவ்வொரு மாத அமாவாசைகளும் விரதம் இருப்பது, மோட்ச தீபம் ஏற்றுவது என பல வகைகளில் முன்னோர்களை நாம் வழிபட்டு வருகிறோம். இறந்த முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி ஏற்றப்படுவது தான் மோட்ச தீபமாகும். இதனை ஏற்றி வழிபட்டால் வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கி சகல நன்மைகள் கிடைக்கப்பெற்று நாம் மகிழ்ச்சியுடன் வாழ முன்னோர்கள் துணை புரிவார்கள் என்பது நம்பிக்கையாக உள்ளது. நாம் இந்த செய்தி தொகுப்பில் மோட்ச தீபம் பற்றியும், அது ஏற்றுவதற்கான வழிமுறைகள் பற்றியும் காணலாம்.
மோட்ச தீபத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
மோட்ச தீபமானது மாலை நேரத்தில் சூரியன் அஸ்தமனத்திற்கும் முன்னதாக ஏற்றப்பட்டிருக்க வேண்டும். அதாவது வெளிச்சத்திற்கும் இருளுக்கும் இடைப்பட்ட கால இடைவெளியில் தீபம் ஏற்றப்பட வேண்டும். இதில் மண் விளக்குகள், பருத்தித் துணி, கல் உப்பு, மிளகு, நவதானியங்கள், கோதுமை, அவிக்காத நெல், முழு பச்சை பயிறு, கொண்டைக்கடலை, வெள்ளை மொச்சை, கருப்பு எள், முழு கொள்ளு, முழு கருப்பு உளுந்து ஆகிய பொருட்களை கொண்டு நாம் முயற்சி தீபம் ஏற்றலாம்.
அதாவது மேல குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களை பருத்தித் துணியில் முட்டையாக கட்டி அதன் முடிச்சானது திரி போல் செய்து கொள்ள வேண்டும். பின் அதனை விளக்கில் உள்ள எண்ணெயில் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் வடகிழக்கு திசையில் அதாவது ஈசானிய மூலையில் நன்கு உயர்ந்த இடத்தில் இந்த விளக்கை ஏற்றி வைக்க வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.
கோயிலில் ஏற்றுவது சிறந்தது
தீபம் ஏற்றுவதற்கு முன் அந்த இடத்தில் வாழை இலை விரித்து அதன் மீது நவதானியங்களை பரப்பி பின் விளக்கு வைத்து நாம் தீபம் ஏற்றி வழிபடலாம். மூட்டையாக கட்டப்பட்டிருக்கும் திரியானது பார்ப்பதற்கு சிவலிங்கம் போல இருக்கும். மோட்ச தீபம் ஏற்றி வழிபடும்போது நாம் பஞ்சாட்சர மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும் என சொல்லப்படுகிறது.
இந்த தீபமானது முன்னோர்களின் இறந்த தேதி தெரியாவிட்டால் சனிக்கிழமை தோறும் நாம் ஏற்றலாம். இதனை வீட்டில் ஏற்றுவதை காட்டிலும் கோயிலில் ஏற்றுவது சிறந்தது என கூறப்படுகிறது. ஒருவேளை வீட்டில் மரணித்தவர்களின் திதி தெரியும் என்றால் அன்றைய நாளில் நாம் ஏற்றி வழிபாடு செய்யலாம்.அதே சமயம் அஷ்டமி, நவமி, அமாவாசை, பிரதமை ஆகிய நாட்களிலும் நாம் மோட்ச தீபம் ஏற்றி வழிபடலாம். வெளியிடங்களில் ஏற்ற விருப்பப்பட்டவர்கள் கோயில், கடற்கரை, ஆலமரம், அரசமரம், வேப்பமரம் ஆகியவற்றின் அடியில் இதனை ஏற்றி முன்னோர்களை வழிபடலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)