AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வலசைப் பறவைகளைக் காக்கும் கடைசி வாய்ப்பு! ஒரு இறுதிப்பயணம்…

Migratory Birds: உலக அளவில் 51 சதவீதத்திற்கும் அதிகமான வலசைபோகும் பறவையினங்கள் வாழ்விட இழப்பு, சுற்றுச்சூழல் மாற்றம் மற்றும் வேட்டையாடுதல் காரணமாக வேகமாக அழிந்து வருகின்றன. தாவரங்களின் மகரந்தச்சேர்க்கை, பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் ஊட்டச்சத்துப் பகிர்வு ஆகியவற்றின் மூலம் உலகச் சூழலியல் சமநிலையைப் பேணுவதில் இந்தப் பறவைகள் முக்கியப் பங்காற்றுகின்றன.

வலசைப் பறவைகளைக் காக்கும் கடைசி வாய்ப்பு! ஒரு இறுதிப்பயணம்…
வலசைப் பறவைImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 25 Jul 2026 12:41 PM IST

பூமியில் வாழும் 3,380-க்கும் மேற்பட்ட வலசைபோகும் (Migratory) பறவையினங்களில், சுமார் 51 சதவீதத்திற்கும் அதிகமான பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதாக சர்வதேச ஆய்வாளர்கள் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் உலகளாவிய பறவையியல் வல்லுநர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வின் முடிவுகள் ‘நேச்சர் ரிவ்யூஸ் பயோடைவர்சிட்டி’ (Nature Reviews Biodiversity) இதழில் வெளியாகியுள்ளன. மனிதர்களின் ஆக்கிரமிப்பால் ஏற்படும் வாழ்விட அழிவு, இரசாயனப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு, சட்டவிரோத வேட்டை, உயரமான கட்டடங்கள் மற்றும் மின்கம்பங்களில் மோதி இறத்தல், கடல்சார் மீன்பிடி வலைகளில் சிக்குதல் மற்றும் சூழலியல் மாற்றங்கள் போன்ற பன்முகக் காரணங்களால் இந்த அரிய வகை பறவைகள் தங்களின் இருப்பை வேகமாகக் இழந்து வருகின்றன.

சுற்றுச்சூழல் சமநிலையும் பறவைகளின் மகத்துவமும்

வலசைபோகும் பறவைகள் வெறும் கண்டம் விட்டு கண்டம் பறக்கும் உயிரினங்கள் மட்டுமல்ல; அவை உலகின் இயற்கை அமைப்பைச் சீராக வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றன. தாவரங்களின் மகரந்தச்சேர்க்கை, விதைகளைப் பரப்புதல், விவசாயப் பயிர்களைச் சூறையாடும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வெவ்வேறு சூழல் அமைப்புகளுக்கு இடையே ஊட்டச்சத்துக்களைக் கடத்துதல் போன்ற பல அத்தியாவசிய நன்மைகளை இவை செய்கின்றன. மேலும், சூழலியல் சுற்றுலா மூலம் பல நாடுகளின் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் இவை வலுசேர்க்கின்றன. எனவே, பறவைகளின் எண்ணிக்கை குறைவது வெறும் உயிரியல் இழப்பு மட்டுமல்லாமல், மனிதகுலத்தின் வாழ்வாதாரத்தையும் இயற்கைச் சமநிலையையும் கடுமையாகப் பாதிக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கை மணி ஆகும்.

முழு ஆண்டு சுழற்சி பாதுகாப்பு முறை

முன்னர் பறவைகளின் இனப்பெருக்க மையங்களை மட்டும் பாதுகாக்கும் முறைகள் பின்பற்றப்பட்டு வந்தன. ஆனால், பறவைகள் தங்கள் வாழ்நாளில் ஆயிரக்கணக்கான மைல்கள் பயணம் செய்வதால், அவை தங்கும் இடைத்தாவளங்கள் (Stopover sites) மற்றும் குளிர்கால வாழிடங்கள் என அனைத்துப் பகுதிகளையும் ஒருங்கிணைத்துப் பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ள சிறிய ரக செயற்கைக்கோள் டிராக்கர்கள் (Miniature tracking devices), மரபியல் பகுப்பாய்வுகள் மற்றும் ‘ஈ-பேர்ட்’ (eBird) போன்ற பொதுமக்களின் பங்களிப்புடனான தரவுத் தளங்கள் மூலம் பறவைகளின் நகர்வுகளையும், அவை எங்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றன என்பதையும் ஆய்வாளர்களால் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது.

சர்வதேச கூட்டமைப்பும் எதிர்கால தீர்வுகளும்

இத்தகைய பறவைகளின் அழிவைத் தடுக்க நாடுகளுக்கிடையேயான சர்வதேச ஒத்துழைப்பும் உடனடி கொள்கை மாற்றங்களும் மிகவும் இன்றியமையாதவை ஆகும். ‘ரோட் டூ ரிகவரி’ (Road to Recovery) போன்ற சர்வதேச அமைப்புகள் மூலம் உலக நாடுகள் ஒன்றிணைந்து, பறவைகளின் முழுப் பயணப் பாதையையும் பாதுகாக்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அரசாங்கங்கள் மட்டுமன்றி, நில உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இதில் பங்கெடுக்க வேண்டும். கட்டடங்களில் பறவைகள் மோதுவதைத் தடுத்தல், செல்லப் பிராணிகளின் அச்சுறுத்தலைக் குறைத்தல் மற்றும் இயற்கை வாழிடங்களை மீட்டெடுப்பதன் மூலம் மட்டுமே அடுத்த தலைமுறைக்கும் இந்த பறவைகளின் விசித்திரமான வலசைப் பயணங்களை விட்டுச்செல்ல முடியும்.

Follow Us