மக்களே கோடை விழாவுக்கு தயாரா.. கண்களை கட்டி இழுக்கும் வண்ண மலர்கள்.. விரைவில் தொடங்குகிறது ஊட்டி மலர் கண்காட்சி!
Ooty Botanical Garden Flower Exhibition : ஊட்டியில் கோடை விழாவில் மலர்கள் கண்காட்சி தொடங்கி நடைபெற உள்ளது. இதற்காக அரசு தாவரவியல் பூங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலர்கள் அலங்கரித்து வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன .

கோப்புப்படம்
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள இயற்கை அழகு மற்றும் அங்கு உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கமாகும். தற்போது தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர். அவ்வாறு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மேலும் கவரும் விதமாக நீலகிரியில் மலர்கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ வகை கண்காட்சி மற்றும் வாசனை திரவிய கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு வகையான கண்காட்சிகள் கோடை விழாவாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் விரைவில் மலர்கண்காட்சி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வண்ண வண்ண மலர்கள்
இந்த கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட பூந்தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், பிகோனியா, மேரி கோல்ட், சால்வியா, பேன்சி, டாலியா, டெய்ஸி உள்ளிட்ட பல்வேறு வகையான வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு பூத்து குலுங்கி வருகின்றன. இந்த மலர் செடிகள் அனைத்தும் கண்காட்சி மண்டபங்களில் வரிசையாக ஒழுங்குபடுத்தப்பட உள்ளது. தற்போது, பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர்களால் மாடங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் படிக்க: கொளுத்தும் கோடை வெயிலுக்கு குட்பை.. சிலிர்க்க வைக்கும் சிறுவாணி நீர் வீழ்ச்சி.. ஒரே நாளில் ஒரு ஜாலி ட்ரிப்!
மலர்களால் பல்வேறு பொருள்கள் செய்யும் பணி
இதே போல, மலர்களால் ஆன தொட்டிகள் அலங்காரம் செய்யும் பணி, பூங்காவில் டைல்ஸ் பதிக்கும் மேம்பாட்டு பணிகள் ஆகியவை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடைபெறும் கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் கண்களை பறிக்கும் விதமாக லட்சக்கணக்கான மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. இந்த மலர் செடிகளை பூங்கா ஊழியர்கள் தொடர்ந்து பராமரித்து வருகின்றனர். மேலும், பூங்கா பகுதியில் உள்ள குளம் செயற்கை நீரூற்றாக மாற்றப்பட்டு வருகிறது.
விரைவில் தொடங்குகிறது மலர் கண்காட்சி
இதே போல, இந்திய வரைபடத்தின் வடிவமைப்பில் அமைந்துள்ள பகுதி மற்றும் அந்தப் பகுதியில் உள்ள படிக்கட்டுகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாட்டு பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு, இந்த ஆண்டுக்கான கோடை விழாவில் மலர்கண்காட்சி சிறப்பாக நடத்தப்பட உள்ளதாக தோட்ட கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கோடை விடுமுறையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிந்துள்ள நிலையில், தற்போது நடைபெற உள்ள கோடை விழா அவர்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்திருக்கும் என்பதில் துளி அளவும் ஐயமில்லை.