45 பைசாவுக்கு 10 லட்சம் வரை கேரண்டி! ரயில் டிக்கெட் எடுத்தா இந்த லக்க அடிச்சீங்களா?
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பெறப்படும் ஒரு ரூபாய்க்கும் குறைவான (45 பைசா) பயணக் காப்பீடு, ரயில் பயணத்தின் போது ஏற்படும் எதிர்பாராத விபத்து மரணம் அல்லது முழு ஊனத்திற்கு அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரையிலும், மருத்துவச் செலவுகளுக்கு 2 லட்சம் ரூபாய் வரையிலும் பாதுகாப்பு அளிக்கிறது. இந்த வசதி ரயில்கள் மோதிக்கொள்வது மட்டுமின்றி, பயணிகள் ரயிலில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ ஏற்படும் விபத்துகளுக்கும் பொருந்தும் என்றாலும், சாதாரண நோய்கள், சுய காயங்கள் மற்றும் தண்டவாளத்தைக் கடப்பது போன்ற விதிமீறல்களுக்கு இது பொருந்தாது.
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பலரும் கவனிக்காமல் கடந்துசெல்லும் ஒரு விஷயம், வெறும் 45 பைசா அல்லது ஒரு ரூபாய்க்கும் குறைவான தொகையில் வழங்கப்படும் விருப்பப் பயணக் காப்பீடாகும் (Travel Insurance). பண்டிகைக் காலங்களில் டிக்கெட் கிடைப்பதே பெரிய விஷயமாக இருக்கும் சூழலில், இந்தச் சிறிய தொகையைக் பலர் பெரியதாகக் கருதுவதில்லை. இருப்பினும், இந்தச் சிறிய தொகையானது எதிர்பாராத விபத்துகளின் போது அதிகபட்சமாக 10 லட்சம் ரூபாய் வரை காப்பீட்டுப் பலன்களை வழங்கும் வல்லமை கொண்டது. லட்சக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் முன்பதிவு செய்வதாலும், பெரும்பாலான பயணிகள் பாதுகாப்பாகப் பயணிப்பதாலும், காப்பீட்டு நிறுவனங்கள் இவ்வளவு குறைந்த கட்டணத்தில் இத்தகைய பெரிய பாதுகாப்பை வழங்க முடிகிறது.
காப்பீட்டின் மூலம் கிடைக்கும் தொகையும் வரம்புகளும்
இந்தக் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பயணத்தின் போது ஏற்படும் விபத்தினால் இறப்பு அல்லது முழுமையான நிரந்தர ஊனம் ஏற்பட்டால் அதிகபட்சமாக ரூ. 10 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும். பகுதி அளவிலான நிரந்தர ஊனம் ஏற்பட்டால் ரூ. 7.5 லட்சம் வரையிலும், விபத்து காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை உருவானால் மருத்துவச் செலவுகளுக்காக ரூ. 2 லட்சம் வரையிலும் வழங்கப்படுகிறது. மேலும், உயிரிழந்தவரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்துச் செலவாக ரூ. 10,000 வழங்கப்படுகிறது. இது ஒரு பொதுவான மருத்துவக் காப்பீடு அல்ல, மாறாக, ரயில் பயணத்துடன் தொடர்புடைய விபத்துகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய சிறப்பு விபத்துக் காப்பீடாகும்.
ரயிலில் ஏறும்போதும் இறங்கும்போதும் ஏற்படும் விபத்துகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பு
பொதுவாக ரயில் விபத்து என்றால் தண்டவாளம் தடம் புரள்வது அல்லது ரயில்கள் மோதுவது மட்டுமே காப்பீட்டில் அடங்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். ஆனால், பயணிகள் ரயிலில் ஏறும்போதோ அல்லது இறங்கும்போதோ தவறி விழுந்து விபத்துக்குள்ளானாலும் இந்தக் காப்பீட்டுப் பலன்களைப் பெற முடியும். அதே நேரத்தில், சாதாரண உடல்நலக் குறைவு, காய்ச்சல், ஏற்கெனவே இருக்கும் நோய்கள், தற்கொலை முயற்சிகள் அல்லது பயணிகள் தண்டவாளத்தைக் கடப்பது போன்ற விதிமுறை மீறல்களால் ஏற்படும் விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கப்படாது. மேலும், ரயில் நிலைய வளாகத்தை விட்டு வெளியேறிய பிறகு ஏற்படும் சம்பவங்களுக்கும் இது பொருந்தாது.
Also Read: பார்க்கிங் செய்த காருக்குள் எலி வருதா? இந்த வழிகளை முயற்சி செய்யுங்க!
காப்பீட்டுத் தொகையைக் கோரும் முறையும் பயணிகள் கவனிக்க வேண்டிய தகவல்களும்
விபத்து ஏதேனும் சம்பவிக்கும் பட்சத்தில், பயணிகள் நேரடியாக ஐஆர்டிசிடி (IRCTC) நிறுவனத்தை அணுகக் கூடாது; மாறாக, தொடர்புடைய காப்பீட்டு நிறுவனத்திடம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு ரயில்வே அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ விபத்து அறிக்கை, மருத்துவமனைச் சான்றிதழ்கள், அசல் கட்டணப் ரசீதுகள் மற்றும் கேஒய்சி (KYC) ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியமாகும். டிக்கெட் முன்பதிவு செய்தவுடன் எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் மூலம் வரும் இணைப்பைச் சொடுக்கி வாரிசுதாரர் (Nominee) விவரங்களைப் பூர்த்தி செய்வது மிகவும் முக்கியம். ஏற்கனவே தனிப்பட்ட விபத்துக் காப்பீடு வைத்திருப்பவர்களுக்கு இது கூடுதல் பாதுகாப்பாக அமையும்.