AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விழிகளில் காட்டிடா அன்பின் சிகரம்.. ‘அப்பா’ என்னும் உன்னத காவியம்!

இணையதளங்களில் தேடினால் விலையுயர்ந்த கடிகாரங்களும், சட்டைகளும், பரிசுப் பொருட்களும் தந்தையர் தினப் பரிசாகப் பரிந்துரைக்கப்படலாம். வசதியிருந்தால் அவற்றை வாங்கித் தருவதில் தவறில்லை. ஆனால், முதிர்ந்த வயதில் இருக்கும் ஒரு தகப்பனுக்கு உங்கள் பணமோ, பொருளோ ஆகச்சிறந்த பரிசாக இருக்க முடியாது. அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இரண்டே விஷயங்களைத்தான்.

விழிகளில் காட்டிடா அன்பின் சிகரம்.. ‘அப்பா’ என்னும் உன்னத காவியம்!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Jun 2026 07:36 AM IST

அம்மா காட்டும் அன்பு நிலவைப் போன்றது; எல்லோர் கண்ணுக்கும் தெரியும். ஆனால் அப்பா காட்டும் அன்பு சூரியனைப் போன்றது; அதன் வெப்பம் மட்டுமே நமக்குத் தெரியும், அதன் பின்னால் இருக்கும் தியாகம் சட்டென்று புரிவதில்லை. உலகில் பிரதிபலன் பாராத, சுயநலமற்ற பேரன்பின் வடிவமாக நாம் அன்னையைக் கொண்டாடுகிறோம். ஆனால், அதே அன்பை நெஞ்சில் சுமந்து, உதடுகளில் காட்டாமல், தன் தோள்களில் நம் உலகத்தையே தாங்கி நிற்கும் மற்றொரு தெய்வம் – அப்பா. ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையான இன்று (ஜூன் 21), அந்த மௌனத் தியாகியை நெஞ்சாரக் கொண்டாடும் உன்னதமான ‘தந்தையர் தினம்’.

இதையும் படிக்க: அப்பா இல்லாத ஏக்கம்: பிள்ளைகளின் மனதை உலுக்கும் அதிர்ச்சி உண்மை

மௌனத்தின் பின்னே ஒளிந்திருக்கும் பேரன்பு:

அம்மாவின் அன்பு கொஞ்சலிலும், முத்தத்திலும், சுவையான உணவிலும் வெளிப்பட்டுவிடும். ஆனால் அப்பாவின் அன்பு அப்படியல்ல. அது ஒரு மௌனக் கடல். பிள்ளைக்குக் காய்ச்சல் என்றால், துடித்துப் போகும் அம்மாவின் அருகே அமர்ந்து, “ஒன்னும் இல்ல, சரியாயிடும்” என்று தைரியம் சொல்லும் அந்த வார்த்தைக்குப் பின்னால், ஒரு தகப்பனின் கலக்கம் மறைந்திருக்கும். வகுப்பறையில் முதல் மதிப்பெண் எடுக்கும்போது, முகத்தில் பெரிய பாவனைகள் காட்டாமல் “சரி, அடுத்த முறை இன்னும் நல்லா படி” என்று சொல்லிவிட்டு, தெருவில் சந்திக்கும் நண்பர்களிடம் எல்லாம் தன் பிள்ளையின் பெருமையைப் பேசிப் பூரித்துப் போவதுதான் தகப்பன் குணம்.

அப்பாக்கள் எப்போதும் தங்களை ஒரு இரும்புக் கோட்டையாகவே காட்டிக்கொள்கிறார்கள். குடும்பத்தின் பாரத்தையோ, வெளியில் அவர்கள் சந்திக்கும் அவமானங்களையோ, வறுமையின் வலியையோ ஒருபோதும் பிள்ளைகளின் அறைக்குள் அனுமதிக்காத அந்த அரண்தான் அப்பா.

தமக்காக வாழத் தெரியாத ஜீவன்கள்:

தன் வாழ்நாளில் தனக்காகப் பெரிதாக எதையுமே வாங்கிக் கொள்ளாத ஒரு மனிதர் உலகத்தில் உண்டு என்றால், அது நிச்சயம் அப்பாவாகத்தான் இருக்க முடியும். தேய்ந்து போன செருப்பையும், பல வருடப் பழமையான சட்டையையும் அணிந்துகொண்டு, பண்டிகைக் காலங்களில் பிள்ளைகளுக்குப் புத்தாடை எடுத்துக் கொடுத்து அழகு பார்ப்பார். தன் பசியை மறைத்து, பிள்ளையின் கல்விக்கான கட்டணத்தைச் செலுத்த ஓடி ஓடி உழைப்பார்.

நம்முடைய ஆடம்பரக் கனவுகளுக்காகத் தன் அத்தியாவசியத் தேவைகளைக் கூட சுருக்கிக் கொள்ளும் தியாக மனம் அது. நாம் உயரப் பறக்க வேண்டும் என்பதற்காக, தன் சிறகுகளையே அடகு வைக்கும் பறவைதான் தந்தை.

இன்று அவர்களுக்கு நாம் தரும் பரிசு என்ன?

இணையதளங்களில் தேடினால் விலையுயர்ந்த கடிகாரங்களும், சட்டைகளும், பரிசுப் பொருட்களும் தந்தையர் தினப் பரிசாகப் பரிந்துரைக்கப்படலாம். வசதியிருந்தால் அவற்றை வாங்கித் தருவதில் தவறில்லை. ஆனால், முதிர்ந்த வயதில் இருக்கும் ஒரு தகப்பனுக்கு உங்கள் பணமோ, பொருளோ ஆகச்சிறந்த பரிசாக இருக்க முடியாது. அவர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இரண்டே விஷயங்களைத்தான்.

உங்கள் நேரம்: தினமும் சில நிமிடங்கள் அவரோடு அமர்ந்து, மொபைல் போனை ஓரமாக வைத்துவிட்டு, “அப்பா, இன்னைக்கு நாள் எப்படிப் போச்சு?” என்று மனம் விட்டுப் பேசுங்கள்.

அங்கீகாரம்: “அப்பா, நீங்க எனக்காகப் பண்ணதுக்கெல்லாம் ரொம்ப நன்றிப்பா. நீங்கதான் என் ஹீரோ” என்ற ஒரு ஒற்றை வார்த்தை, அவர் வாழ்நாளின் அத்தனை வலிகளையும் நொடியில் போக்கிவிடும்.

இதையும் படிக்க: இளைஞர்களை கண்காணிக்கும் பெற்றோர்: பாதுகாப்பா அல்லது பதற்றமா?

ஆகச்சிறந்த உலக மகா பரிசு:

தோலில் தூக்கிச் சுமந்த காலம் போய், இன்று நாம் அவரை விட உயரமாக வளர்ந்து நின்றாலும், அவர் முன்னால் நாம் எப்போதும் சிறு குழந்தைகள்தான். வயது முதிர்ந்து, உடல் தளர்ந்து, கைகள் நடுங்கும் அந்தப் பருவத்தில், ஒரு குழந்தையைப் போல அவர்களைத் தாங்கிப் பிடிக்க வேண்டியது நம் கடமை. இந்தத் தந்தையர் தினத்தில், வெறும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸோடு உங்கள் கடமையை முடித்துக் கொள்ளாமல், ஓடிப்போய் உங்கள் அப்பாவைக் கட்டியணைத்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் அவரை விட்டுத் தூரமிருந்தால், உடனே அழையுங்கள். உங்கள் குரலில் இருக்கும் அன்பே இந்த ஜூன் 21-ல் அவருக்குக் கிடைக்கும் ஆகச்சிறந்த உலக மகா பரிசாக இருக்கும்!

அனைத்து அன்புத் தந்தையர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த தந்தையர் தின நல்வாழ்த்துகள்!

Follow Us