AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

NEET UG 2026 மறுதேர்வு இன்று.. புதிய கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் முழுவிவரம்!!

NEET UG 2026 Re-exam Today: இம்முறை முறைகேடுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் வழங்கிய 51,311 ஜாமர்கள், 48,448 பயோமெட்ரிக் ஊழியர்கள் மற்றும் 38,795 சோதனை ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

NEET UG 2026 மறுதேர்வு இன்று.. புதிய கட்டுப்பாடுகளும், வழிகாட்டுதல்களும் முழுவிவரம்!!
கோப்புப் புகைப்படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Jun 2026 08:50 AM IST

நாடு முழுவதும் கடந்த மே 3-ஆம் தேதி நடந்த இளநிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் எழுந்ததை அடுத்து, ரத்து செய்யப்பட்ட நுழைவுத்தேர்வு (NEET UG 2026) இன்று நாடு முழுவதும் புதிய உச்சக்கட்ட பாதுகாப்பு விதிகளுடன் நடத்தப்படுகிறது. பிற்பகல் மணி முதல் மாலை 5.15 மணி வரை (மொத்தம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள்) தேர்வு நடைபெறுகிறது. இதற்காக தேசியத் தேர்வு முகமை வெளியிட்டுள்ள அதிதீவிர வழிகாட்டுதல்கள் மற்றும் ஆடைக்கட்டுப்பாட்டு விவரங்களை விரிவாக அறியலாம்.

இதையும் படிக்க: NEET: நீட்-யுஜி மறுதேர்வு இன்று.. அதிதீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்!

நேரக் கட்டுப்பாடு மற்றும் கேட் மூடும் நேரம்:

காலை 11:00 மணி முதல் மதியம் 1:30 மணி வரை மட்டுமே மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். மதியம் 1:30 மணிக்கு தேர்வு மையத்தின் நுழைவு வாயில்கள் கண்டிப்பாக மூடப்படும். அதற்குப் பிறகு ஒரு நிமிடம் தாமதமாக வந்தாலும் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதி கிடையாது.

ஆடைக்கட்டுப்பாடு:

தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க ஆண், பெண் இருபாலருக்கும் கடுமையான ஆடைக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆண் தேர்வர்கள்: லேசான நிறமுடைய, அரைக்கை டி-சர்ட் அல்லது ஷர்ட் மட்டுமே அணிய வேண்டும். பெரிய பொத்தான்கள், ஜிப்பர்கள், பல பாக்கெட்டுகள் கொண்ட பேண்ட்கள் மற்றும் குர்தா-பைஜாமாக்கள் அணிய அனுமதி இல்லை. பெண் தேர்வர்கள்: எம்பிராய்டரி, பிரில்ஸ், பூக்கள் அல்லது உலோக டிசைன்கள் இல்லாத எளிய குர்தா, சல்வார் அல்லது டி-சர்ட் அணியலாம். கனமான மற்றும் லேயர் ஆடைகள், பிரம்மாண்ட நகைகள் (காதணி, மோதிரம், செயின், வளையல்) முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

ஓப்பன் ஸ்லிப்பர்கள் அல்லது குறைந்த உயர ஹீல்ஸ் கொண்ட சாண்டல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். ஷூக்கள் , பூட்ஸ் அல்லது தடிமனான சோல் கொண்ட காலணிகளுக்கு அனுமதி இல்லை.

மத வழிபாட்டு ஆடைகள்:

ஹிஜாப், புர்கா, சீக்கியர்களின் தலைப்பாகை அல்லது கவாலா போன்ற பாரம்பரிய/மத ரீதியான ஆடைகளை அணிய அனுமதி உண்டு. ஆனால், அவர்கள் தீவிர சோதனைக்கு ஏதுவாக காலை 11:00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வந்துவிட வேண்டும்.

கட்டாயம் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்:

தேர்வு மைய நுழைவாயிலில் பின்வரும் ஆவணங்கள் இல்லையெனில் அனுமதி மறுக்கப்படும். NTA இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தெளிவான அட்மிட் கார்டு மற்றும் சுயவிவரப் படிவம். இதில் அஞ்சல் அட்டை அளவு புகைப்படம் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். ஆதார் கார்டு, பான் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மட்டுமே செல்லுபடியாகும். மொபைலில் உள்ள டிஜிட்டல் நகல்களோ, ஜெராக்ஸ் பிரதிகளோ ஏற்கப்பட மாட்டாது. வருகைப் பதிவேட்டில் ஒட்டுவதற்காக 2 கூடுதல் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.

அனுமதிக்கப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள்:

அனுமதிக்கப்பட்டவை: வெளிப்படையான குடிநீர் பாட்டில் மற்றும் அட்மிட் கார்டைப் பாதுகாக்க வெளிப்படையான பிளாஸ்டிக் கவர் மட்டுமே அனுமதிக்கப்படும். (நீரிழிவு நோய் உள்ளவர்கள் மட்டும் பழங்கள், சர்க்கரை மாத்திரைகள் கொண்டு செல்லலாம்). பேனா உள்ளிட்ட எழுதுபொருட்கள் தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.

தடை செய்யப்பட்டவை: மொபைல் போன்கள், புளூடூத் சாதனங்கள், இயர்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்கள், கால்குலேட்டர்கள், வாலட்கள், பெல்ட்டுகள், தொப்பிகள், சன்கிளாஸ்கள் மற்றும் எந்தவொரு காகிதத் துண்டுகளும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளன.

தொழில்நுட்பப் பாதுகாப்பு மற்றும் மனநல உதவி:

இம்முறை முறைகேடுகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கண்காணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள், எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் வழங்கிய 51,311 ஜாமர்கள், 48,448 பயோமெட்ரிக் ஊழியர்கள் மற்றும் 38,795 சோதனை ஊழியர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். ஒருவேளை தொழில்நுட்பக் கோளாறால் பயோமெட்ரிக் சரிபார்ப்பு தோல்வியடைந்தால், மாணவர்களின் தேர்வு நேரம் வீணாகாமல் இருக்க  ‘எழுத்துப்பூர்வ உறுதிமொழி’ (Written Undertaking) பெற்றுக்கொண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என NTA தெரிவித்துள்ளது.

மும்பையில் போக்குவரத்து சேவை முடக்கம்:

இதனிடையே, மும்பையின் பொதுப்போக்குவரத்து கட்டமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘பெஸ்ட்’ (BEST) பொதுத்துறை நிறுவனத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, இரண்டாவது நாளாக மும்பை மாநகரப் பேருந்து சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. சுமார் 12 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பான ‘பெஸ்ட் தொழிலாளர்கள் கூட்டு நடவடிக்கைக் குழு’ இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறது. போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், பேருந்துகள் பணிமனைகளிலேயே முடங்கியுள்ளன. இதனால் தினசரி இப்பேருந்துகளை நம்பியிருக்கும் 25 லட்சம் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீட் தேர்வு மாணவர்களுக்கான சிறப்பு பேருந்துகள்:

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) மும்பை முழுவதும் உள்ள 63 மையங்களில் நீட் மறுதேர்வு நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, மாணவர்களின் நலனுக்காக பெஸ்ட் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மகாராஷ்டிர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் (MSRTC) 60 கூடுதல் பேருந்துகள் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மீண்டும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தேர்வு மையங்களுக்கு இயக்கப்படுகின்றன.

இதையும் படிக்க: நீட் மறுதேர்வு.. முறைகேடுகளைத் தவிர்க்க கடும் கட்டுப்பாடுகள்.. என்னென்ன? முழு விவரம்!!

மும்பை போக்குவரத்து நெரிசல் மற்றும் நீட் தேர்வு மையங்களின் தீவிர சோதனைகளைக் கருத்தில் கொண்டு, மாணவர்கள் அட்மிட் கார்டில் உள்ள முகவரியை கூகுள் மேப்பை மட்டும் நம்பாமல் முன்கூட்டியே சரிபார்த்து, காலையிலேயே தேர்வு மையங்களுக்குப் புறப்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Follow Us