ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு மதிப்புமிக்க ‘லக்சம்பர்க் அமைதி விருது’
அமைதி ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை உள்ளடக்கிய சர்வதேச அமைப்பான உலக அமைதி மன்றம் அவருக்கு இவ்விருதை வழங்கியது. கடந்த 45 ஆண்டுகளாக அமைதியை ஊக்குவித்தல், நீண்டகால மோதல்களில் மத்தியஸ்தம் செய்தல் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கருக்கு மதிப்புமிக்க லக்சம்பர்க் அமைதி விருது வழங்கப்பட்டுள்ளது. அமைதி ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை உள்ளடக்கிய சர்வதேச அமைப்பான ‘உலக அமைதி மன்றம்’ அவருக்கு இவ்விருதை வழங்கியது. கடந்த 45 ஆண்டுகளாக அமைதியை ஊக்குவித்தல், நீண்டகால மோதல்களில் மத்தியஸ்தம் செய்தல் மற்றும் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் வழங்குதல் ஆகியவற்றில் அவர் மேற்கொண்ட அயராத முயற்சிகளை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
அவர் 182 நாடுகளில் உள்ள மக்களை அமைதிக்கான தூதுவர்களாக மாற ஊக்குவித்துள்ளார். கடந்த நான்கு தசாப்தங்களாக உலகம் முழுவதும் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைதி முயற்சிகளில் அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
மனநலம், மன அழுத்த மேலாண்மை மற்றும் மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட அவரது நிகழ்ச்சிகள் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இவ்விருதைப் பெற்றுக்கொண்டபோது பேசிய குருதேவ், மோதல்கள் மற்றும் சச்சரவுகளுக்கான மூல காரணங்களைக் கண்டறிந்து தீர்ப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
“அனைத்து மோதல்களுக்கும் மூல காரணம் தனிமனிதர்களிடம் நிலவும் உள் அமைதியின்மையே ஆகும். சமூகத்தில் நல்லிணக்கப் பாலங்களை அமைக்கவும், தகவல் தொடர்பை மீட்டெடுக்கவும், நம்பிக்கையை மீண்டும் உருவாக்கவும் கூடிய மனிதர்கள் நமக்குத் தேவை என்பதை மோதல் மண்டலங்களில் நாங்கள் பெற்ற அனுபவங்கள் உணர்த்தியுள்ளன. அத்தகைய மத்தியஸ்தர்களே இன்றைய உலகிற்குத் தேவை. சமூகங்களுக்கு இடையே பிளவுகள் இருக்கும் இடங்களில், ஒவ்வொரு இளைஞரும் ஒரு பாலமாக மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
அமைதி என்பதைச் செயலற்ற தன்மையுடன் குழப்பிக்கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். “அமைதி என்பது மனநிறைவு அல்லது சோம்பல் அல்ல; அதே சமயம் அது ஆக்ரோஷமோ அல்லது வெறும் வலிமையோ அல்ல. ஒரு நபர் முழு விழிப்புணர்வுடனும் ஆற்றலுடனும் இருக்கும்போதுதான் உண்மையான அமைதி மலர்கிறது.” இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றைப் பற்றிப் பேசுகையில், “மன அழுத்தம் மனிதகுலத்தின் மிகப்பெரிய எதிரிகளில் ஒன்றாகும். மன அழுத்தமற்ற மனமும் வன்முறையற்ற சமூகமுமே நீடித்த அமைதிக்கான அடித்தளம்,” என்று அவர் நினைவூட்டினார்.