AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

மழைக்காலம்: ஃபுட் பாய்சனில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!

Monsoon Health Tips: மழைக்கால ஈரப்பதத்தால் உணவுகளில் பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் வேகமாகப் பெருகுவதால், சாலையோர உணவுகள், பச்சை சாலடுகள் மற்றும் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட பழங்களைத் தவிர்ப்பது அவசியம். செரிமானம் மந்தமாக இருக்கும் இக்காலத்தில், எண்ணெயில் பொரித்த பண்டங்கள் மற்றும் சரியாகச் சேமிக்கப்படாத பால் பொருட்களைத் தவிர்த்து சுடச்சுடச் சமைத்த உணவுகளை உண்பது சிறந்தது.

மழைக்காலம்: ஃபுட் பாய்சனில் இருந்து தப்பிக்க சூப்பர் டிப்ஸ்!
மழைக்கால உணவு முறைImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 27 Sep 2026 05:00 AM IST

மழைக்காலம் வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சூழலைத் தந்தாலும், நுண்கிருமிகள் பெருகும் அபாயத்தையும் உடன் கொண்டுவருகிறது. காற்றில் நிலவும் அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் நீர் மாசுபாடு காரணமாக, உணவுப் பொருட்கள் எளிதில் நச்சுத்தன்மை அடைந்து வயிற்றுப் போக்கு, செரிமானக் கோளாறு போன்ற உபாதைகள் ஏற்படக்கூடும். எனவே, இந்த காலத்தில் ஆரோக்கியமாக இருக்கச் சில உணவுகளைத் தவிர்த்து எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சுத்தமான முறையில் சமைக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளையும், நன்கு கழுவப்பட்ட காய்கறிகளையும் உட்கொள்வதன் மூலம் மழைக்கால உணவு நச்சுத்தன்மையிலிருந்து நம்மைக் பாதுகாத்துக் கொள்ளலாம்.

சாலையோர உணவுகள் மற்றும் பச்சை காய்கறிகள்

சாலையோரங்களில் திறந்தவெளியில் விற்கப்படும் பானிபூரி, சாட் போன்ற பண்டங்களில் ஈக்கள், தூசி மற்றும் மாசடைந்த நீர் படுவதால் பாக்டீரியா தொற்றுகள் வேகமா பரவும். அதேபோல, பச்சையாக உட்கொள்ளப்படும் காய்கறி சாலடுகள் காண்பதற்குச் சத்தாகத் தோன்றினாலும், மழைக்கால மண்ணில் உள்ள ஒட்டுண்ணிகள் மற்றும் நுண்கிருமிகள் அவற்றில் ஒட்டியிருக்கக்கூடும். இதனால், காய்கறிகளை பச்சையாக உண்பதைத் தவிர்த்து நன்கு வேகவைத்து உண்பதே உடலுக்குப் பாதுகாப்பானது.

கடல் உணவுகள் மற்றும் வெட்டி வைத்த பழங்கள்

மழைக்காலம் பல கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்கக் காலம் என்பதால், நீண்ட நாட்களுக்கு முன் சேமிக்கப்பட்ட மீன்கள் மற்றும் கடல் உணவுகள் சந்தைக்கு வர வாய்ப்புள்ளது. இவற்றை உட்கொள்வது உணவு நச்சுத்தன்மைக்கு (Food Poisoning) வழிவகுக்கும். அதேபோல, கடைகளில் ஏற்கனவே வெட்டி வைக்கப்பட்ட பழங்களில் ஈக்கள் மொய்ப்பதால் கிருமி தொற்று ஏற்படும். முழு பழங்களை வாங்கி நன்றாகக் கழுவி, சாப்பிடும் நேரத்தில் வெட்டி உண்பது நோய்களில் இருந்து காக்கும்.

பால் பொருட்கள், காளான்கள் மற்றும் பொரித்த உணவுகள்

அதிக ஈரப்பதம் காரணமாகப் பால், பன்னீர் போன்ற பொருட்கள் வெளியில் வைக்கப்பட்டால் விரைவில் கெட்டுவிடும். மேலும், ஈரத்தில் வளரும் காளான்களில் பூஞ்சை தொற்று வர சாத்தியக்கூறுகள் அதிகம் என்பதால், அவற்றைச் சரியாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்தில் செரிமானத் திறன் குறைவாக இருக்கும் என்பதால், எண்ணெயில் பொரித்த நொறுக்குத் தீனிகளை அதிகமாக உண்பது நெஞ்செரிச்சலையும் வயிற்று உப்புசத்தையும் உண்டாக்கும்.

உணவுச் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள்

சமைத்த உணவுகளை நீண்ட நேரம் வெளியில் வைக்கும்போது அதில் பாக்டீரியாக்கள் வேகமாகப் பெருகத் தொடங்கும். எனவே, சமைத்த உணவுகளைச் சூடாகவே உண்பதோ அல்லது உடனுக்குடன் குளிர்சாதனப் பெட்டியில் சேமிப்பதோ நல்லது. சுவையான உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டியதில்லை என்றாலும், உணவின் சுகாதாரம், சரியான சேமிப்பு மற்றும் சமைக்கும் முறைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது மழைக்கால நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us