குழந்தை உங்கள் பேச்சைக் கேட்கவில்லையா? இந்த டிப்ஸ் உதவலாம்!
5:1 Parenting Rule: குழந்தை வளர்ப்பில் ‘5:1 விதி’ பெற்றோர்–குழந்தை உறவை வலுப்படுத்தும் பயனுள்ள முறையாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு கண்டிப்புக்கு முன் ஐந்து நேர்மறை பாராட்டுகள் அல்லது ஊக்கங்கள் வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது குழந்தைகளின் தன்னம்பிக்கையை உயர்த்தி, மனநிலையை மேம்படுத்துவதோடு பெற்றோரிடம் நம்பிக்கையையும் அதிகரிக்கிறது.
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையேயான உறவு பல்வேறு அழுத்தங்களால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் தவறு செய்தால் கண்டிப்பது, மதிப்பெண் குறைந்தால் திட்டுவது, ஒழுக்கம் இல்லாத நடத்தை குறித்து தொடர்ந்து கவலைப்படுவது போன்ற அணுகுமுறைகள் பல வீடுகளில் இயல்பாகிவிட்டன. ஆனால் உளவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கும் ‘5:1 Parenting Rule’ எனப்படும் புதிய பெற்றோர் வழிமுறை, குழந்தைகளுடன் உறவை வலுப்படுத்துவதற்கான பயனுள்ள அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது. இந்த முறையின் அடிப்படை நோக்கம், குழந்தையின் தவறுகளை மட்டும் சுட்டிக்காட்டாமல், அவர்கள் செய்யும் நல்ல செயல்களை அதிகமாக கவனித்து பாராட்டுவதே ஆகும்.
‘5:1 விதி’ என்றால் என்ன?
‘5:1 விதி’ என்பது ஒரு குழந்தை செய்த ஒரு தவறை சுட்டிக்காட்டும் முன் அல்லது அதனுடன் சேர்த்து, குறைந்தது ஐந்து நேர்மறையான கருத்துகள், ஊக்கங்கள் அல்லது பாராட்டுகளை வழங்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. இது குழந்தைகளை கட்டுப்பாடின்றி வளர்க்கும் முறை அல்ல; மாறாக, அவர்கள் தங்களை மதிக்கப்படுபவர்களாக உணரும்படி செய்வதே இதன் நோக்கம். “எப்போதும் கண்டிப்பு மட்டுமே கேட்கும் குழந்தைகள், தங்களிடம் குறைதான் அதிகம் என்று நினைக்கத் தொடங்கலாம்” என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குழந்தையின் நல்ல செயல்களை அடிக்கடி பாராட்டுவது, அவர்களின் மனநிலையையும் நம்பிக்கையையும் மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த முறையை வீட்டில் எப்படி செயல்படுத்தலாம்?
பெற்றோர் தினசரி வாழ்க்கையில் சிறிய மாற்றங்களின் மூலம் இந்த அணுகுமுறையை பின்பற்ற முடியும். உதாரணமாக, குழந்தை தனது பொருட்களை ஒழுங்காக வைத்தால் அதைப் பாராட்டுதல், சகோதரர்களுடன் சண்டையில்லாமல் விளையாடினால் கவனித்து நல்ல வார்த்தைகள் கூறுதல், முயற்சியைக் கூட மதித்து பாராட்டுதல் போன்றவை இதில் அடங்கும். குழந்தை தவறு செய்தபோதும், அதற்கு முன் அவர்கள் செய்த நல்ல விஷயங்களை நினைவூட்டும் விதமாக அணுகினால், அவர்கள் எதிர்ப்போடு அல்லாமல் புரிதலோடு பதிலளிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காக எண்ணிக்கை வைத்து கணக்கிட வேண்டிய அவசியமில்லை; பெற்றோர் தங்கள் அணுகுமுறையில் நேர்மறையை அதிகரிப்பதே முக்கியம் என உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
குழந்தையின் மனநிலை மற்றும் தன்னம்பிக்கையில் ஏற்படும் மாற்றம்
தொடர்ச்சியான எதிர்மறை கருத்துக்கள் குழந்தையின் தன்னம்பிக்கையை பாதிக்கக்கூடும். ஆனால் அதிகமான பாராட்டும் ஊக்கமும் கிடைக்கும் சூழலில் வளரும் குழந்தைகள், தங்களைப் பாதுகாப்பாகவும் நேசிக்கப்படுபவர்களாகவும் உணர்வார்கள். இதன் விளைவாக, பெற்றோரிடம் நம்பிக்கை அதிகரித்து, குடும்ப உறவுகள் வலுப்படும். தண்டனையைத் தவிர்க்க நல்லவராக நடப்பதை விட, சரியானது என்பதால் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் குழந்தைகளிடம் உருவாகும். இது அவர்களின் உணர்ச்சி வளர்ச்சிக்கும் சமூக பழக்கங்களுக்கும் நீண்டகால நன்மை தரும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
எல்லா வயது குழந்தைகளுக்கும் பொருந்துமா?
இந்த ‘5:1 விதி’ சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்படக்கூடியதாக கருதப்படுகிறது. சிறுவர்களுக்கு உற்சாகமான பாராட்டுகள் பொருத்தமாக இருக்கும் நிலையில், இளம்வயதினருக்கு மென்மையான மற்றும் உண்மையான அங்கீகாரங்கள் சிறப்பாக செயல்படும். குழந்தையின் வயதுக்கு ஏற்ப அணுகுமுறை மாறினாலும், அன்பு, புரிதல் மற்றும் ஊக்கத்தை அதிகப்படுத்தும் அடிப்படை நோக்கம் மாறாது. இதனால் பெற்றோர்–குழந்தை உறவு வலுவடைவதோடு, வீட்டில் மனஅழுத்தமும் குறைய வாய்ப்புள்ளது என நிபுணர்கள் கூறுகின்றனர்.