வந்தாரா பல்கலைக்கழகம் – வனவிலங்கு பாதுகாப்புக்காக உலகின் முதல் பல்கலைக்கழகம்
குஜராத்தின் ஜாம்நகரில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவ அறிவியலுக்காக உலகின் முதல் ஒருங்கிணைந்த உலகளாவிய பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தாரா பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்ட இந்த பல்கலைக்கழகம் இந்தியாவை வனவிலங்கு மற்றும் கால்நடை கல்வியில் உலகின் மையமாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது.
குஜராத்தின் ஜாம்நகரில், வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவ அறிவியலுக்காக உலகின் முதல் ஒருங்கிணைந்த உலகளாவிய பல்கலைக்கழகம் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வந்தாரா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய கல்வி நிறுவனம், இந்தியாவை வனவிலங்கு மற்றும் கால்நடை கல்வியில் உலகின் மையமாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்தாரா பல்கலைக்கழகம் என பெயரிடப்பட்டுள்ளது. இதை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குநரும் வனவிலங்கு பாதுகாப்பு ஆர்வலருமான ஆனந்த் அம்பானி முன்னெடுத்து வருகிறார்.
இந்த பல்கலைக்கழகம், வனவிலங்கு பாதுகாப்பு, கால்நடை மருத்துவம், உயிரியல் அறிவியல், சூழலியல் பாதுகாப்பு போன்ற பல துறைகளை ஒரே கல்வி அமைப்பின் கீழ் கொண்டு வர உள்ளது.
வன விலங்கு பாதுகாப்புக்காக உலகின் முதல் பல்கலைக்கழகம்
வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் கால்நடை மருத்துவத்திற்கு மட்டும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட உலகின் முதல் ஒருங்கிணைந்த பல்கலைக்கழகம் இதுவாகும். இந்த பல்கலைக்கழகம், வனவிலங்கு மருத்துவம், அறுவை சிகிச்சை, ஊட்டச்சத்து, மரபியல், தொற்றுநோய் ஆய்வு, பாதுகாப்பு, விலங்கு பராமரிப்பு சூழல் வடிவமைப்பு போன்ற பல துறைகளில் சிறப்பு கல்வி வழங்க உள்ளது.
இந்த பல்கலைக்கழகம், பாரம்பரிய இந்திய மரபுகளையும், நவீன அறிவியலையும் இணைக்கும் வகையில் நவீன குருகுலம் முறைப்படி உருவாக்கப்பட உள்ளது. பண்டைய நளந்தா பல்கலைக்கழகத்தின் கல்வி கொள்கை இதற்கு முன்மாதிரியாக இருக்கும் என்று ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய ஆனந்த் அம்பானி, விலங்குகள் வேதனையில் இருப்பதை நேரில் பார்த்த அனுபவமே இந்த பல்கலைக்கழகத்தை உருவாக்கும் எண்ணத்தை தந்தது. எதிர்கால பாதுகாப்பு என்பது அறிவு, கருணை மற்றும் திறமையை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார்.
இந்த பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டும் விழா இந்து மரபுப்படி நடைபெற்றது. இந்த விழாவில் கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், பாதுகாப்பு நிபுணர்கள், பொதுத் துறை பிரமுகர்கள் பங்கேற்றனர். இந்த விழாவின் சிறப்பம்சமாக, இந்தியாவின் பல்வேறு உயிரியல் வளமிக்க பகுதிகளிலிருந்து மண், நீர், கற்கள் கொண்டு வரப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது.
மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள்
இந்த வந்தாரா பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், பிஎச்டி போன்ற ஆராய்ச்சி படிப்புகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்படும்.
இந்த பல்கலைக்கழகத்தில் மேம்பட்ட ஆய்வகங்கள் விலங்கு மருத்துவமனைகள், சர்வதேச ஒத்துழைப்புகள், தங்கும் வசதியுடன் கூடிய வளாகம் போன்ற அம்சங்களுடன் உருவாக உள்ளது.
இந்தியாவை வனவிலங்கு மருத்துவம் மற்றும் பாதுகாப்பு கல்வியில் உலகளாவிய முன்னணி நாடாக மாற்றும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இது கல்வி நிறுவனம் மட்டுமல்ல, எதிர்கால வனவிலங்கு பாதுகாப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான நீண்டகால மையமாகவும் செயல்படும்.