ஆண் வாரிசு ஆசை: இரட்டை பெண் குழந்தைகளை கொன்ற கல்நெஞ்சக்கார தந்தை….
Telangana Crime: தெலங்கானாவில் ஆண் வாரிசு இல்லாத ஆத்திரத்தில் தந்தை ஒருவரே தனது இரட்டைப் பெண் குழந்தைகளை விஷம் கொடுத்துக் கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான ஸ்ரீசைலம், பெண் குழந்தைகள் பிறந்த காரணத்தால் தனது மனைவியுடன் தொடர் சண்டையில் ஈடுபட்டு வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில், ஆண் குழந்தை பிறக்கவில்லை என்ற ஆதங்கத்தில் பெற்ற மகள்களையே தந்தை விஷம் கொடுத்துக் கொன்ற சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. நவீன காலத்தில் பெண் குழந்தைகளும் சாதனை படைத்து வரும் வேளையில், இன்னும் சிலரின் குறுகிய மனப்பான்மை இத்தகைய கோரச் செயல்களுக்கு வித்திடுவது பெரும் வேதனையை அளிக்கிறது. கரீம்நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் என்பவர், தனக்கு ஆண் வாரிசு இல்லை என்ற விரக்தியில் தனது நான்கு வயது இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தகவலறிந்த கிராம மக்கள் ஸ்ரீசைலத்தைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மகிழ்ச்சியில் தொடங்கிய திருமண வாழ்க்கை
கரீம்நகர் மாவட்டம் ஜூபிலி நகரைச் சேர்ந்த ஸ்ரீசைலம் (28) என்ற இளைஞர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் மௌனிகா என்பவருக்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது இல்லற வாழ்க்கையின் பயனாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கீதான்ஷி மற்றும் கீதான்விகா என்ற இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன. ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத் தெரிந்த இந்த குடும்பத்தில், ஸ்ரீசைலத்தின் வாரிசு குறித்த ஆசை காலப்போக்கில் ஒரு கசப்பான சூழலை உருவாக்கியது.
தொடர் தகராறுகளும் மனக்கசப்பும்
பெண் குழந்தைகள் வளர்ந்து வந்தாலும், ஸ்ரீசைலத்தின் மனதில் தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் ஆழமாகப் பதிந்திருந்தது. இதன் காரணமாக, அவர் அடிக்கடி தனது மனைவி மௌனிகாவிடம் சண்டையிட்டு வந்துள்ளார். “நமக்கு ஏன் ஆண் குழந்தை பிறக்கவில்லை?” என்று கூறி மனைவியை மனரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். பலமுறை குடும்பப் பெரியவர்கள் தலையிட்டு இருவருக்கும் அறிவுரை கூறி சமாதானம் செய்து வைத்துள்ளனர். இருப்பினும், ஸ்ரீசைலத்தின் வார்சு வெறி அடங்காமல் புகைந்து கொண்டே இருந்தது.
வஞ்சனையால் நிகழ்ந்த இரட்டைக்கொலை
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, வழக்கம் போல கணவன்-மனைவி இடையே ஆண் வாரிசு தொடர்பாகக் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ஸ்ரீசைலம், ஏதுமறியாத பிஞ்சு குழந்தைகளைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டார். மனைவி வெளியே சென்றிருந்த நேரத்தில், விளையாட அழைத்துச் செல்வதாகக் கூறி குழந்தைகளை அருகில் இருந்த விளைநிலத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு எவ்வித இரக்கமும் இன்றி குழந்தைகளுக்குப் பூச்சிக்கொல்லி மருந்தை வலுக்கட்டாயமாகப் புகட்டியுள்ளார். குழந்தைகள் மயக்கமடைந்த நிலையில், அங்கிருந்த பாழடைந்த கிணற்றில் அவர்களைத் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து தப்ப முயன்றார்.
Also Read: ஓடும் ரயிலில் குழந்தை பெற்றெடுத்த பெண்.. கேரளத்தில் சுவாரஸ்ய சம்பவம்!
போலீஸ் விசாரணை மற்றும் கைது நடவடிக்கை
குழந்தைகள் காணாமல் போனதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் தேடத் தொடங்கியபோது, ஸ்ரீசைலத்தின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரைப் பிடித்து விசாரித்தபோது, குழந்தைகளைக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். உடனடியாகப் பொதுமக்கள் அவரைப் பிடித்துக் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் கிணற்றிலிருந்து இரண்டு குழந்தைகளின் சடலங்களையும் மீட்டனர். தற்பொழுது ஸ்ரீசைலம் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.