மத்தியப்பிரதேசத்தில் சோகம்.. டிராக்டர் விபத்தில் 11 பேர் பலி

மத்தியப் பிரதேசத்தில் துர்கா சிலை கரைக்கச் சென்ற டிராக்டர் குளத்தில் மூழ்கிய விபத்தில் 11 பக்தர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயதசமி அன்று காண்ட்வா மாவட்டத்தில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. டிராக்டர் சமநிலையை இழந்து கவிழ்ந்ததே விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் சோகம்.. டிராக்டர் விபத்தில் 11 பேர் பலி

நீரில் மூழ்கியவர்களை தேடும் பணி

Updated On: 

03 Oct 2025 07:50 AM

 IST

மத்தியப்பிரதேசம், அக்டோபர் 3: மத்தியப் பிரதேசத்தில் துர்கா சிலை கொண்டு செல்லப்பட்ட டிராக்டர் குளத்தில் விழுந்து மூழ்கிய விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் அக்டோபர் 1 ஆம் தேதி வரை நவராத்திரி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் துர்க்கை அம்மனுக்கு 9 நாட்களும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் விஜயதசமி அன்று துர்கா தேவியின் சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கும் வழக்கும் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2025ம் ஆண்டு விஜயதசமி தினமான அக்டோபர் 2ம் தேதி வியாழக்கிழமை டிராக்டர் வண்டியில் சிலர் துர்க்கை அம்மனின் சிலைகளுடன் சென்றனர். ஆனால் அந்த வாகனம் எதிர்பாராத விதமாக ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது. சிலை மற்றும் வாகனத்தின் எடை காரணமாக நீருக்குள் மூழ்கியதில் 11 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Also Readவிக்கிரவாண்டியில் சோகமாக மாறிய சுற்றுலா.. கார் தீப்பிடித்து 3 பேர் பலி

இதுதொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, பல்வேறு கிராமங்களிலிருந்து துர்க்கை அம்மனின் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதாக பக்தர்கள் டிராக்டரில் எடுத்துச் சென்றனர். அவர்கள் சென்ற வாகனம் பாந்தனா பகுதியில் இந்த கோர விபத்து சம்பவம் நடந்துள்ளது. இதில் ஆர்ட்லா மற்றும் ஜாம்லி கிராமங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட 20 முதல் 25 பேர் நீருக்குள் மூழ்கினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் முதற்கட்ட விசாரணையில் டிராக்டர் குளத்தின் அருகே ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அந்த இடத்தின் சமநிலையை இழந்து பின்னோக்கி சென்று கவிழ்ந்தது. இதனால் அதில் அமர்ந்திருந்த மக்கள் தண்ணீரில் மூழ்கினர் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்த துயரச் சம்பவம் குறித்து மத்தியப்பிரதேச மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பதிவில், “கண்ட்வாவின் ஜாம்லி கிராமத்திலும், உஜ்ஜைனுக்கு அருகிலுள்ள இங்கோரியா காவல் நிலையப் பகுதியிலும் துர்கா நீரில் மூழ்கும் விழாவின் போது ஏற்பட்ட விபத்துகள் மிகவும் துயரமானவை. இந்த சம்பவத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read:  ராஜஸ்தான் தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து..10 பேர் உயிரிழப்பு!

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு அருகிலுள்ள மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. காயமடைந்த அனைவரும் விரைவாக குணமடையவும், உயிரிழப்பால் கவலையில் உள்ள குடும்பங்களுக்கு வலிமை அளிக்கவும் துர்கா தேவியிடம் பிரார்த்திக்கிறேன்” எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் அம்மாநிலத்தில் இதேபோன்று துர்க்கை சிலைகளை கரைக்க சென்ற இடத்தில் நடந்த ட்ராக்டர் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.