விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. தமிழக தொழிலாளர்களுக்கு கேரளாவில் நடந்த கொடூரம்!
Three Tamil Nadu Workers Died in Kerala | தமிழகத்தில் மலக்குழி மரணங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கேரளாவுக்கு பணிக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம், அக்டோபர் 01 : கேரளாவில் (Kerala) உள்ள ஒரு உணவகத்தின் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்துக்கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கி தமிழகத்தை சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் தேனி, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்து அவர்கள் கேரளாவுக்கு பணிக்கு சென்ற நிலையில், இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த நிலையில், விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கேரளாவில் பலியான 3 தமிழ்நாடு தொழிலாளர்கள்
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது பணியாளர்கள் கழிவுநீர் தொட்டியில் இறங்கி சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கியுள்ளனர். அந்த நேரத்தில் தொட்டிக்குள் இறங்கிய ஜெயராமன் என்பவர் மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளார். அதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்களான மைக்கேல், சுந்தரபாண்டியன் ஆகியோர் குழிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது ஜெயராமனை போலவே அவர்களும் குழிக்குள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதையும் படிங்க : சிக்கன் கறி கேட்ட சிறுவன்.. தாய் செய்த கொடூரம்.. பறிபோன உயிர்!
விஷவாயு தாக்கி பரிதாபமாக பலியான ஊழியர்கள்
ஊழியர்கள் குழிக்குள் மயங்கி கிடக்கும் தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால், அவர்களாலும் குழிக்குள் செல்ல முடியாத நிலையில், அருகில் பல்லம் தோண்டப்பட்டு அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்றது. சுமார் 1.30 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதையும் படிங்க : கணவருடன் நவராத்திரி நடனம்.. இளம்பெண் மாரடைப்பால் பலி
தேனி, நீலகிரியை சேர்ந்த தொழிலாளர்கள் பலி
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் மூவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். உயிரிழந்த தொழிலாளர்களில் ஜெயராமன் தேனியை சேர்ந்தவர் என்பதும், மைக்கேல் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் நீலகிரியை சேர்ந்தவர்கள் என்பதையும் போலீசார் உறுதி செய்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மூன்று பேர் கேரளாவில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.