ஆந்திராவில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – 10 பேர் பலி – அதிர்ச்சி சம்பவம்
Temple Stampede Tragedy : ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயில் கூட்ட நெரிசலில், இறப்பு எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது இந்த விபத்தில் சிலர் காயமடைந்தனர். சனிக்கிழமை ஏகாதசி என்பதால், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இதுவே கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்ததாக நம்பப்படுகிறது.

கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல்
ஆந்திரா (Andhra Pradesh) மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயிலில் நவம்பர் 1, 2025 அன்று கூட்ட நெரிசல் சம்பவத்தில் 10 பக்தர்கள் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சனிக்கிழமை ஏகாதசி என்பதால், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் திடீரென அதிகரித்துள்ளது. இந்த நிலையில், பக்தர்களை ஆதரவுக்காக வைக்கப்பட்டிருந்த தடுப்பு கிழே விழுந்ததில் பக்தர்கள் கீழே விழுந்தனர். இதில் இருந்து தப்பிக்கும் போது, கூட்ட நெரிசல் (Stampede) ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து கோவில் ஊழியர்கள், காயமடைந்தவர்களை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
விபத்துக்கான காரணங்கள்
கோவிலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக செய்யவில்லை எனவும் அதுவே இந்த விபத்துக்கு காரணம் எனவும் பக்தர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இருப்பினும், 3,000 பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நவம்பர் 1, 2025 அன்று சனிக்கிழமை ஏகாதசி என்பதால் 25,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியதாகத் தெரிகிறது. அதிகாலையில் இருந்தே , பக்தர்கள் அதிகளவில் வந்ததால் கோவில் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினரால் பக்தர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : திருமணமாகி 10 நாட்கள் கூட மகிழ்ச்சியாக இல்லை.. வீடியோ பதிவு செய்துவிட்டு புதுமண பெண் தற்கொலை!
காசிபுக்காவில் உள்ள இந்தக் கோயில் 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. உள்ளூர்வாசிகள் இந்த கோவிலை சிறிய திருப்பதி என்று அழைக்கிறார்கள். காசிபுக்காவைச் சேர்ந்த ஹரி முகுந்த பாண்டா என்ற பக்தர் இந்தக் கோயிலைக் கட்டினார். அவர் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு இந்தக் கோவிலைக் கட்டினார்.
கடந்த காலங்களில் அவர் திருப்பதிக்கு செல்வதற்காக சந்தித்த சிரமங்களை மனதில் கொண்டு, அதே திருப்பதி போன்று இந்தக் கோவிலை தனது ஊரிலேயே கட்டினார். இந்தக் கோயிலின் கட்டுமானம் ஒரு வருடம் முன்பு நிறைவடைந்தது. இந்தக் கோயிலில் தற்போது அவரது மேற்பார்வையின் கீழ் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது கார்த்திகை மாதம்.. மேலும், இன்று ஏகாதசி என்பதால், ஏராளமான பக்தர்கள் வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : மும்பையில் 17 குழந்தைகளை கடத்திய நபர் – என்கவுண்டர் செய்த போலீஸ் – பரபரப்பு சம்பவம்
முதல்வர் சந்திரபாபு நாயுடு இரங்கல்
காசிபுக்கா வெங்கடேஸ்வரர் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து முதல்வர் சந்திரபாபு நாயுடு வருத்தம் தெரிவித்தார். கூட்ட நெரிசல் சம்பவம் தனது மனதை உலுக்கியுள்ளதாக அவர் கூறினார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த அவர், பக்தர்களின் மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது என்று அவர் கூறினார். காயமடைந்தவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். அமைச்சர்களை சம்பவ இடத்திற்குச் சென்று நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.